Tuesday, March 24, 2009
போர்ச் சூழலிலும் இயற்கையின்பால் குதித்தோடும் கவிமனம்
மதிப்புரை
ராஜமார்த்தாண்டன்
போரைத் திணித்தவர்கள்மீதான கோபத்தின் வெளிப்பாடுகளோ எதிர்த்துப் போராடும் போராளிகளின் அத்துமீறல்கள் குறித்தான விமர்சனங்களோ இல்லாத இன்றைய ஈழத்துக் கவிதைகளைக் (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் உள்பட) காணுதல் பொதுவாகவே அரிதாகிப்போன சூழலில், அவை தவிர்த்து, போரினால் ஏற்படும் அழிவுகளையும் மனச்சிதைவுகளையுமே வெளிப்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ தொகுப்பு. இத்தனைக்கும் இதிலுள்ள கவிதைகள் அனைத்தும் 1996 - 2008 காலப்பகுதியில் எழுதப்பட்டவையே. தன்னிரு மாமாக்கள் இளம்வயதில் போர்ச்சூழலில் சாவுகொள்ளப்பட்ட குறிப்பும் நூலில் உள்ளது.
‘சின்னப் பூ’, ‘பேதம்’, ‘எங்களூர்க் கல்யாணம்’, ‘மனிதர்கள் போலவே’ போன்ற பல கவிதைகளும் வெளிப்படையான - ஒற்றைப் பரிமாணம் கொண்ட - கவிதைகள்; வாசகர் பங்கேற்புக்கு அதிகமும் இடம்தராதவை. இந்தக் கவிதைகளின் வெளிப்படையான தன்மை மட்டுமே அதற்குக் காரணமல்ல என்பதையும் கவிதை வாசகர்கள் தெளிவாகவே உணர்ந்துகொள்ள முடியும்.
ஈழத்து மக்களின் இன்றைய மனநிலையை - அவர்களது நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் இரண்டுக்குமிடையிலான ஊசலாட்டத்தையும் ‘மரம்’, ‘எல்லாமே இயல்பாயுள்ளன’ என்னும் இரண்டு கவிதைகளும் மிகையேதுமின்றி இயல்பாகவும் சூசகமாகவும் கலைத்தன்மையுடன் வாசக மனத்தில் பதியவைக்கின்றன.
கூடவே ‘வெள்ளெலிகளுடன் வாழ்தல்’, ‘எச்சம்’, ‘குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம் ...’, ‘யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்’, ‘கோழி இறகும் காகங்களும்’ ஆகிய கவிதைகளே இத்தொகுப்பைக் கவிதை வாசகரின் கவனத்துக்குரியதாக்குகின்றன. இந்தக் கவிதைகள் இன்றைய ஈழத்தில் மனிதர்களின் அவல இருப்பைப் பல பரிமாணங்களுடன் வெளிப்படுத்துகின்றன.
மூச்சுக்காற்றால்
நிறையும் வெளிகள்
ஆசிரியர் துவாரகன்
பக். 78
வெளியீடு தினைப்புனம்
விற்பனை உரிமை:
புத்தகக் கூடம்
172, இராமநாதன் வீதி, திருநெல்வேலி யாழ்ப்பாணம்.
ஈழத்துக் கவிதைகளில் பரிச்சயமுள்ள தமிழகக் கவிதை வாசகர்கள், இயற்கையின் மீதான ஈர்ப்பு அவர்களின் ஆழ்மனத்துள் இயல்பாகவே படிந்துபோன ஒன்று என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதனால்தான் மரணத்துள் வாழும் போர்ச் சூழலிலும் துவாரகனின் மனம், சலசலத்தோடும் வாய்க்கால் நீரில் முக்குளித்து எழுந்து சிறகசைக்கும் மைனாக்களைக் காணும்போது இலேசாகிவிடுகிறது. வால் நீண்ட அணில்களைக் காணும்போது,
பின்னால்
வால் முளைத்துக்
குதித்தோடிவிடுகிறது
(குதித்தோடும் மனசு).
துவாரகனின் கவிதைமொழி மிகையேதுமில்லாத, உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத, இன்றைய கவிதைக்கான சமன்நிலை கொண்டதாக வெளிப்படுகிறது. அதன் பின்னே சாம்பலின் கீழ் தீக்கங்குகள்போல் உணர்வலைகள் கனன்று கொண்டிருப்பதையும் கவிதைகளில் உணர முடிகிறது.
உதவிக்கு யாரையாவது
உரத்துக் கூப்பிடு
ஆனாலும் கவனம்
வருபவனும்கூட ...
(மனிதத்தைத் தேடி)
நான் இனி
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்
(வெள்ளெலிகளுடன் வாழ்தல்)
என்னும் வரிகளில், ஈழத்து மக்களின் இன்றைய அவல வாழ்க்கை பெருந்துக்கமாய் மனத்துள் கவிந்துவிடுகிறது.
thanks:- kalachuvadu dec.2008,www.vaarppu.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment