Tuesday, March 24, 2009

துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்- புலவர் சீடன் -

கட்டுரை கதை நாடகம் ஆகியவற்றில் படைப்பாளி தான் சொல்லவரும் விடயத்தை மிகச் சுலபமாகச் சொல்லிவிட முடியும். ஆனால் ஒரு பக்கத்தில் ஒரு கவிதை மூலமாகச் சொல்வதென்பது மிகக் கடினமாக பணியாகும்.

கவிஞன் தான் கண்டதை, கேட்டு அறிவு பூர்வமாக அறிந்ததை, தனது கற்பனைத் திறத்தினால் கவிதையாகப் படைத்து விடுகிறான். முற்றுப் பெறமுடியாது போன விடயங்களை, பல நாட்கள் பல மாதங்கள் பல வருடங்கள் ஆகியும் தீர்வு காண முடியா விடயங்களை, மற்றவர்கள் புரியும் வண்ணம் உணர்வு பூர்வமான காட்சியாக வாசகர் மனதில் பதித்திடும் திறன் படைத்தவன். அந்த வகையில் கவிஞர் துவாரகன் சளைத்தவர் அல்ல.

பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜாவின் அணிந்துரையுடனும் கவிஞர் சுவிஸ் ரவியின் முன்னுரையுடனும் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற கவிதைத் தொகுதி யாழ்ப்பாணத்திலிருந்து ‘தினைப்புனம்’ வெளியீடாக வந்துள்ளது. ஓவியர் தா. சனாதனனின் அர்த்தமுள்ள ஓவியம் நூலை மிகக் காத்திரமாக்குகின்றது. மூத்த ஓவியர் கோ. கைலாசநாதன், எஸ். நேசன் ஆகியோரின் கோட்டோவியங்கள் கவிதைகளுக்குச் சமாந்தரமாகப் பயணிக்கின்றன.

எளிமையான வார்த்தைகளைத் தனக்கே உரிய ஆளுமையுடன் இவர் கையாள்கிறார். சொல்வளம் அப்படியே சௌகரியமாக உட்கார்ந்திருக்கிறது. கவிதையின் அழகு எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கும்போது உள்ளடக்கத்திலிருந்து வருகிறதா? உத்திமுறையில் இருந்து வருகிறதா? உருவகமாக வருகிறதா? படிமம் குறியீடு ஓசைநயம் வார்த்தைப்பின்னல் இவற்றிலிருந்துமா? உண்மைநிலை யாதெனில் கவிஞனின் அடிமனதின் அனுபவச் செழுமையின் சத்திய வெளி;ப்பாடாகவே துவாரகனின் கவிதைகள் வெளிவருகின்றன. அவரின் இலட்சிய வேட்கை தென்படுகிறது. இங்கிருந்து படிப்போருக்குக் கண்ணீர் பெருக்கெடுக்கும் புலம்பெயர்ந்தோர் படிக்கின்றபோது உறவுகளின் வீழ்ச்சி தெரியும். தமிழகத்தில் வாழ்வோர்க்கு தன்மானம் மிக்கோர் சூழ்நிலையின் கைதிகளாக தடுமாறுவது தெரியும்.

கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் துன்பத்திலிருந்து விடுதலை பெற ஒரு வழியினைக் கூறியுள்ளார். துன்பம் மேலோங்கி இருக்கிறபோது நல்ல விடயங்களில் கவனத்தைச் செலுத்தவேண்டும். அந்த எண்ணங்களை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்;றும் கூறுகிறார். அதே முறையினைத்தான் துவாரகன் கையாண்டிருக்கிறார். இவருக்கு மனம் அதிக இறுக்கமாக இருந்திருக்கிறது. இந்த இறுக்கத்திற்கான காரணம் போர்க்காலச் சூழல் ஆகும். ‘குதித்தோடும் மனசு’ என்ற கவிதையில் இந்த இறுக்கம் எவ்வாறு விலகுகின்றன என்பதைப் பாருங்கள்

மனசு இலேசாயிருக்கிறது.

தோட்டவெளி

ஓற்றைப் பூவரசமர இலைகள்

கரும்பச்சை நிறத்தில் மதாளித்து

காற்றில் அசைந்தாடும்போது.

புதிதாய்ப் பிடுங்கிப் போட்ட

கோரைப் புல்லை ‘மொறுக்’ கென

ஆடுகள் கடித்து

அசைபோடும் போது.

சலசலத்தோடும் வாய்க்கால் நீரில்

முக்குளித்து எழுந்து

சிறகசைக்கும் மைனாக்களைக்

காணும் போது…

மனசு இலேசாயிருக்கிறது.

கருமேகம் சூழ்ந்த

எங்கள் வான்பரப்பின்

நிர்மலமான

இந்த அழகைக் காணும்போதெல்லாம்

சிட்டுக்குருவி மனசு

விண்ணில் இறக்கை கட்டுகிறது.

இதுவே எப்போதும் வேண்டும்!

பட்டுப்போன முள்முருக்கில்

பட்டை உரித்து

கால்களில்…

பந்தாகச் சுருட்டிக் கொண்டோடு;ம்

அந்த வால்நீண்ட

எங்கள் மாமரத்து அணில்களைக்

காணும்போதும் கூட,

இந்த மனசும்

பின்னால்

வால் முளைத்துக்

குதித்தோடி விடுகிறது.

என்கிறார் கவிஞர். மனசுக்கும் வால்முளைக்கிறது. இயற்கையைப் பற்றிப் பாடும் கவிஞர்களில் ஒருவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். அவர் தனது வசந்த காலக்கவிதை ஊடாக@ ஒருநாள் சோலையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறபோது பறவைகள் எழுப்பிய இனிய ஒலிகள் ஒன்றோடொன்று கலந்து அவர் செவியில் தேனாகப் பாய்ந்ததாகவும், செடி கொடிகள் மலர்கள் இயற்கையோடு உறவாடி மகிழ்ச்சியாக இருந்தன எனவும், மனிதன் மட்டும் இயற்கையின் மகிழ்ச்சியோடு தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருக்கிறானே என்றும் கவலை கொள்கிறார்.

இவ்வாறே துவாரகனும் இயற்கையோடு உறவாடிக் கொள்வதை குதித்தோடும் மனசு கவிதையில் புலப்படுத்தி நிற்கின்;றார். இக்கவிதையை உள சம்பந்தமானதாகக் கொள்ளவேண்டும். மன உளைச்சல்களைப் போக்க சின்னச்சின்ன மகிழ்ச்சிதான் அவசியமானது என்பது மனவியலாளர்களின் கருத்தாகும். இக்கவிதையானது உளநலனுக்கான சிகிச்சையாகக் கொள்ளலாம்.

இதே போல் நீட்சி என்ற கவிதையின் ஊடாக எமது நடைமுறை வாழ்வு பற்றி சிலந்திப்பூச்சியினூடாக உணர்த்துகின்றார்.

ஒவ்வொரு விடுமுறையின் பின்னரும்

எனது தூசிபடர்ந்த அறையை

துடைப்பத்தால் சுத்தம் செய்யும்போது

தலைதெறித்து ஓடும்

சிலந்திகளும் பூச்சிகளும்

என் வாழ்வை

எனக்கே கற்பிக்கின்றன.

எட்டுக்கால் ஊன்றி

சுவர்களில் ஏறித் தப்பிக் கொள்ளவும்

கூரையின் மர இடுக்குகளில்

மறைந்து விடவும் மட்டுமே

தெரிந்தவை அவை.

வாழ்வின் நீட்சியை மோகிக்கும்

இந்த ஆத்;மாவோ

நான்கு புறமும் இழுத்துக் கட்டப்பட்ட

கூரையின் படங்குபோல்

காற்றில் அலைப்புறுகிறது.

என்று தவிப்பை வெளிக்காட்டி நல்ல சூழலில் சஞ்சரிக்கவே ஆத்மா பிரயாசைப்படுகிறது என்று எடுத்துக் காட்டுகிறார்.

இன்னொரு கவிதையில் கவிஞர் மனிதனைத் தேடுகிறார். தேடு.. தேடு.. தேடிக் கொண்டேயிரு எனத் தட்டிக் கொடுத்து தேடவைப்பவர். இத்தேசத்தின் அவலங்களை சுட்டிக்காட்டி மனிதமே தொலைந்த தேசத்தில் மனிதனைத் தேடுகிறாயா? என்று கேட்கிறார். மனிதனைத் தேடினான் அறிஞன் அன்று. இன்று கவிஞன் மனிதனைத் தேடுகிறான்.

முதலில் இந்த விளக்கை அணைத்து வை

உன் உள்ளொலியைத் தூண்டு

என்ற வரிகளில் வள்ளுவனின் குறள் ஒன்றின் ஆழமான கருத்தைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.

‘புறத்தூய்மை நீரினால் அமையும் அகத்தூய்மை

வாய்மையாற் காணப்படும்’

அகத்தூய்மையின் முக்கியத்துவத்தை தனது மனிதத்தைத் தேடி கவிதை ஊடாகப் புலப்படுத்தி உண்மையான மனிதனை, அவனிடம் இருக்கும் மனிதத்தைத் தேடுகிறார். உள்ளொளியைத் தூண்டும்போது மனித இனம் மனத்தூய்மை பெறும் வாய்ப்புக் கிட்டும். இன்று அந்த அகத்தூய்மை எல்லாத்தரப்பிலும் இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகிவிட்டது.

ஓவியன் ஒருவன் தான் கண்ட காட்சியைத் தீட்டுகிறான். கவிஞனும் இயற்கைக் காட்சி ஒன்றை அப்படியே வழங்குகிறான். ஆனால் அது மட்டும் அவனது கலையின் நோக்கமாக இருக்கவில்லை. கவிஞன் மழையைக் கண்டான். அதைக் கவிதை ஓவியமாகத் தருகிறான்

என் கால்களைச் சுற்றி

வட்டமிட்டு ஓடுகிறது

மழை விட்டுச் சென்ற ஓவியம்

கால்களில் குழைந்து

மர இடுக்குகளி;ல் சிலிர்த்து

இலைகளில் பளிச்சிட்டு

மண்ணில் உள்ளொடுங்கி

ஓடுகிறது

மழை விட்டுச் சென்ற ஓவியம்

எந்தனூர்க் குளம் நிரப்பி

ஊருக்கு அழகு செய்த

மழை இதுதான்

பின்னர் வாழைத்தோட்டத்துள் புகுந்து

வேரை ஈரமாக்கியதும் இந்த மழைதான்

ஆனாலும்@

ஒருபொழுது வானத்தில் பறந்து வந்த

தூதனின் பார்வையால்

மேகம் பார்க்கத் தொடங்கிய வீட்டில்

இந்த மழை கொட்டும் போதெல்லாம்

வீட்டுக்குள்ளே வரையப்படுகின்றன

மழை தூவிய ஓவியங்கள்

இந்த வரிகளில் நாம் காண்பதற்கு மேல் மற்றொன்றும் உண்டு. கவிஞன் எமது பிரதேசத்தின் அனேக வீடுகளில் போர்க்கால நிலமையையும் மக்களின் வறுமையான வாழ்வையும் காட்டுகிறார்.

இன்றைய கால கட்டத்தில் எம்மை எந்த வடிவத்தில் துன்பம் தீண்டவில்லை. எல்லா வகையிலும் நொந்து நொடிந்து போய் எமது பிரதேசம் இருக்கிறது. பெருஞ் செயலை ஆற்றுவதற்கு முதலில்; தேவைப்படுவது தன்னம்பிக்கை என ஆங்கில இலக்கிய மேதை சாமுவேல் ஜான்ஸன் கூறுகிறார். அதே கருத்தினை கவிஞர் துவாரகன் மரம், தூக்கணாங்குருவிக்கூடு ஆகிய கவிதைகள் ஊடாக தன்னம்பிக்கையைத் தூண்டும் விதத்தில் எடுத்துக் காட்டுகிறார். இதனால்த்தான் உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்லமுடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால் அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டு வரமுடியுமானால் நீயும் என்னைப் போல் ஆகமுடியும் என்று தன்னம்பிக்கை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

துவாரகனின் தொகுப்பில் நான்கு காதற் கவிதைகள் உள்ளன. ஞாபகம், என்னருகில் நீ இல்லாதபோது ஆகிய இரண்டு கவிதைகளிலும் காதலின், பிரிவின் சாயல் வெளிப்படுவதனைக் கண்டுகொள்ளலாம்.

இரவின் ராகத்தை மீட்கும்

பூச்சிகளின் சில்லென்ற இரைச்சல்.

மெல்லத் திரை விலக்கி

உள்ளம் சேர்த்து வைத்த

உன் நினைவுப் பொதியின்

முடிச்சுக்களை

அவிழ்த்துக் கொட்டுகிறது.

அவை போத்தலிலிருந்து கொட்டிய

மாபிள்களாக

நாலாபக்கமும் சிதறி வீழ்கின்றன.

இந்த வரிகளில் காணப்;படும் உவமைகள் மிகச் சாதாரண வாசகனும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. என்னருகில் நீ இல்லாதபோது என்ற கவிதையில்

உன் வட்டக் கருவிழிகளின்

ஆழத்தில்

என் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டேன்.

தட்டுத் தடுமாறி முட்டிமோதி

என் சத்தமற்ற வார்த்தைகள் எல்லாம்

உன் விழிகளுடன் பேசிவிட்டு

ஏதோ பதில்களுடன்

திரும்பி வருகின்றன.

உதட்டசைப்பால் மட்டும்

பேசிடும் வார்த்தைகளை விட

உன் விழியசைப்பால்

பேசிடும் வார்த்தைகள் அதிகமடி.

எனத் தொடரும் கவிதையைப் படிக்கும்போது வேறு எங்கோ யாரோ பாடியதாக நினைவுக்கு வரும். படித்து முடித்ததும் மற்றவரிடத்தினின்றும் வேறுபட்டு விளங்குகிறார் என்பது புலனாகிறது. இவ்வாறாக தாம் சொல்லும் முறையிலே தம் கவித்திறத்தை கவிஞர் காட்டுகிறார்.

நானும் நாட்களும், உனக்கும் எனக்குமான இடைவெளி, ஆகிய கவிதைகள் திருமணத்திற்குப் பின்னரான காதலை உணர்த்துகின்றன. திறந்த வீதி பற்றிய பதிவாக இருப்பினும்

அந்தப் பெருவீதியின் சந்தடியிலிருந்து

நீங்கியாயிற்று

கிளை பிரிந்தோடும் ‘கிரவல்’ செம்மண் பாதை

எனது பழைய சைக்கிள் பயணம்

தனிவழிப் பயணம்

இன்று ஞாயிற்றுக்கிழமை

நாளைக் காலைப் பொழுதின்

கடமைக்கான பயணம்

‘ஏன் திங்கள் காலை போனால் என்ன?’

அவளின் கேள்வியூடே கலங்கிய மனது

தலைவனைப் பார்த்து தலைவி இரஞ்சுகிறாள். நிச்சயமற்ற பயணங்கள் தலைவன் திரும்ப வீடு வந்தால்தான் நிச்சயமானது. இது ஆயிரம் ஆயிரம் குடும்பத் தலைவிகளின் உள்ளத்தில் கேள்வியாக நி;றைகின்றது.

இன்று எமது வாழ்வில் அதிலும் கணவன் மனைவி உறவில் எத்தனையோ பிரச்சனைகள் எத்தனையோ முரண்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து மனித உறவுகளைப் பிரி;த்து விபரீதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கின்றன. உனக்கும் எனக்குமிடையிலான இடைவெளி கவிதையில் முரண்பாடு பற்றி கவிஞன் கூறி அதிலிருந்து விடுபடவும் வழி சொல்கிறார். உன்னை அமைதிப்படுத்துவதைத் தவிர

வேறு எதுவும் புரிவதில்லை என்ற வரிகளினூடாக கணவன் மனைவிக்குள்ள புரிந்துணர்வை கவிஞன் வெளி;ப்படுத்துவதோடு தமிழர்களது தனித்துவமான பண்பாட்டை வெளிக் கொணர்ந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. முரண்பாடுகளிடையே சிக்கித் தவிக்காது கணவன் மனைவி உறவிலுள்ள உண்மைக் காதலை வெளிப்படுத்தி நிற்கிறார். ஆண் பெண்மேல் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாத கவிஞன் இக்கவிதையில் கணவனையே அமைதிப்படும்படி கூறியுள்ளார்.

சிறுவர்களைக் காக்க வேண்டும் என்ற அறைகூவலை கவிஞனும் தன் கவிதை மூலமாக வெளியிடுகிறார். சின்னப்பூ, யாழ்ப்பாணம் 2005, என்ற கவிதைகள் கல்வி அறிவு பெற வாய்ப்பற்று இருக்கும் சிறுவர் சிறுமியர் பற்றிய கவிதை. இந்தச் சமுதாயத்திற்கு இச்சீர் கெட்ட நிலைமையைப் போக்;க வீதியில் நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

நீதிதேவதையின் கூண்டில் தனியனாக எவரையும் நிற்க வைத்துக் குற்றப்பத்திரிகை வாசிக்கவில்லை. எல்லோரையும் குற்றவாளியாக நிற்க வைத்து பேதம், வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல் ஆகிய கவிதை மூலமாக நியாயம் தேடுகிறார்.

பொதிசுமந்து எங்கு செல்கிறோம் என்பதே தெரியாது முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்களாக இருப்பவர்களுக்கு

சாட்டையும்

விரட்டும் இலாவகமும்

உங்களிடம் இருக்கும் வரை

நாமும் சுமந்து கொண்டே இருப்போம்

முடிவு செய்து விட்டார்கள் எதற்கும் அஞ்சாது பயணம் தொடங்கி விட்டார்கள் முடிவை மட்டும் கேட்;;க வேண்டாம் அலைவும் தொலைவும் பல செய்திகளைச் சொல்கிறது. கவிதையின் இறுதியில்

ஆனாலும் நாங்கள் நடக்கிறோம்

நிரந்தரத் தரிப்பிடத்தைத் தேடி

மிகுந்த நம்பிக்கையுடனே

என்று சொல்ல முடியாத இடம்பெயர்வுகளால் அல்லற்படும் மக்களைக் கண்டு மனம் வெதும்பி பாடுகிறார்.

கவிஞன் பிரயாணம் செய்யும்போதும் சும்மாயிருக்கவில்லை வல்லை வெளி வந்தபோது நிறைமாதக் கர்ப்பிணிப்பெண்போல் எங்கள் ஊர் லொறிகள் வரிசையாக வந்து போவதைக் கண்டபோது எமது ஊர் திருமணம் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. தாலி கூறைமுதல் பழம் பணியாரம் ஆகியவற்றைக் கொண்டு வரிசையாக வருவோர் நினைவு அவனுக்குக் காட்சியாகின்றது

ஆனால் ஒரு வித்தியாசம் தான்

எங்களுர் கலியாண வீடுகளோ

நிச்சயித்த நாளில் நடக்கும்

லொறிகளோ

நினைத்தவுடன் வரிசையாய்ச் செல்லும்

இந்த வரிகள் கவிஞனை மிக வருத்தியுள்ள வரிகள். நீண்ட காலமாக எனக்குள்ளே ஒருவித மனக்கவலை என்னவென்றால் பஸ்ஸில் போகிறபோது பக்கத்தில் இருப்பவரோடு ஒரு மணிநேரம் வரை பிரயாணம் செய்வோம். கதையே இருக்காது முகத்தை இறுக்கிக் கொண்டிருப்போம். துவாரகனின் நெடுஞ்சாலைப் பயணம் அதற்குப் பதிலாக இருக்கிறது கையில் கொண்டுவந்த சுமைகளைப் பவுத்திரமாக பஸ்ஸில் உள்வைத்து விட்டு பிரயாணம் செய்யும் வித்தியாசமான மனச்சுமைகளை இவர்கள் எப்படி இறக்குவது போசாதிருப்பதற்கான காரணம் யாது என்று இப்போதுதான் புரிகிறது.

சிலர் சிரிக்கிறார்கள்

இன்னலையே விழுங்கி

ஏப்பம் விட்ட வாயால்

மனிதர்கள் போலவே

சில நேரங்களில்

கடதாசிப் பூக்கள் போல்

பொம்மை முகம் பூட்டி

பொய்ம்மை முகம் காட்டி

ஈரமற்ற நெஞ்சுடன்

பொய்ம்மை முகம் காட்டியே இன்று மனிதர்கள் உலாவருவதைக் கண்டு எரிச்சல் கொள்கிறான் கவிஞன். இந்த விடயத்தை அறிமுகம் என்ற தலைப்பின் ஊடாக கவிஞர் மு. மேத்தா

‘மனிதர்களுக்கு

இங்கே

பெயர் இருக்கிறது

பிரபலம் இருக்கிறது

முக்கியமான

முகமில்லாமல் போய்விட்டது’

என்று பாடுகிறார்.

இதே போன்று மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் என்ற கவிதையில் சற்று வித்தியாசமான முறையில் தனது துன்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவும் பிரயாணத்தின் போது மக்கள் படும் துன்பத்தை வெளிக்காட்டும் கவிதைதான்.

எப்போதோ முடிந்திருக்க வேண்டியது

இன்னமும் தொடர்கிறது

ஓடிய சைக்கிளில் இருந்து

இறங்கி நடந்து

ஓடவேண்டியிருக்கிறது

போட்ட தொப்பி

கழற்றிப் போடவேண்டியிருக்கிறது

எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட

கைப்பை

மீளவும் திறந்து திறந்து

மூடவேண்டியிருக்கிறது

என் அடையாளங்கள் அனைத்தும்

சரியாகவே உள்ளன

என்றாலும்

எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்;கிறது

என்ன இது?

மீளவும் மீளவும்

ஆரியமாலா ஆரியமாலா பாட்டுப்போல்

கீறிக்கொண்டேயிருக்கிறது.

குரங்கு மனிதனாகி

மனிதன் குரங்குகளாகும் காலங்கள் எங்களதோ?

இப்படியே போனால்

மரங்களில் தொங்கி விளையாடவேண்டியதுதான்

மீளவும் மீளவும் குரங்குகள்போல்!

எல்லாவற்றையும் அடிக்கடி சரிபார்ப்பதும் பதட்டத்தோடு இருக்க வேண்;டியிருக்கிறது. இதேபோல் நாய் குரைப்பு, வெள்ளெலிகளுடன் வாழ்தல், எச்சம், ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது ஆகிய கவிதைகள் வெளிப்படுத்தும் கவிதை வரிகள் அற்புதமாக இருக்கின்றன.

கவிஞனுக்கு தாங்கொணா வேதனை இருந்திருக்கிறது மக்கள் நாளாந்த வாழ்வில் படும் துன்பங்கள், காயங்கள் பல இதைச் சீர் செய்வது எப்படி என்று தெரியாது அதை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளமை இங்கு குறிப்பிட வேண்டும்.

துன்பங்களை மனதுக்குள் வைத்துக்கொண்டிருப்பதும் அழுது தீர்த்துக்கொள்வதும் என்று எமது மக்களின் வாழ்வாகிப் போன இந்தக் காலத்தில் இரண்டாவது ரகத்தில் உட்பட்டு இருப்பதாக சில கவிதைகள் அமைந்துள்ளன. என்னை விரட்டிக் கொண்டிருக்கும் தலைகள,; பல் நா சுவையறியாது, புணர்ச்சி, ஆகிய கவிதைகள் இதற்கு உதாரணம். இந்தக் கவிதைகள் கவிஞனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட சம்பவங்களை எடுத்துக் காட்டுகின்றன. இங்கு பலோக்காரமான செயலை சி;த்தரித்துக் காட்டுகிறான் கவிஞன். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து இறுதியாய் மனிதனைக் கடிக்கிறபோது கவிஞன் உணர்வலைகள் பொங்கி வந்து இயலாமையை வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் அகன்று விழிக்கின்றன. இவரது ஆன்மா துடிப்பதைப் பார்க்கலாம். இலட்சியத் துடிப்போடு வாழ்கின்ற இவரது கவிதைகளை வரலாற்று ஆசிரியர்கள் தேடி எடுப்பது உறுதி. இவரது கவிதையில் பழைய இலக்கண காவலாளிகள் இல்லை. சம்பிரதாயங்கள் என்னும் சுற்றுவேலிகள் இல்லை. புதிய நோக்குக் கொண்டவையாக இருக்கின்றன. மக்களின் சிந்தனையில் கலந்து எம் தற்கால வாழ்வுப் போக்கைப் பதிவு செய்வனவாக அமைந்துள்ளன.

மூச்சுக்காற்றால் நிறைகின்றன

வெளிகள்

எல்லைகள் தாண்டிச் சென்று

இடைவெளிகளை நிரப்பிடாதபடி

கூட்டுக்குள்ளேயே

நிரம்பித் திமிறுகின்றன

கண்ணாடி மீன் தொட்டிகளில்

முட்டிமோதும்

மீன்குஞ்சுகளைப் போலவே!

புதிய மூச்சு

இளைய மூச்சு

முதிய மூச்சு

எல்லாம் நெருக்கியடித்தபடி

ஒன்றையொன்று முட்டிமோதியபடி

அலைகின்றன

சுவரில் மோதித் திரும்பும்

ஒரு பந்தைப்போலவே!

மூச்சுக்காற்றால்

மீண்டும் மீண்டும்

நிறைகின்றன வெளிகள்

இற்றுப்போன

ஓர் இலைச்சருகின் இடைவெளியை

நிரப்பிக் கொள்கிறது

செம்மண்

என்று மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் கவிதையில் யாழ்ப்பாண மக்களின் தற்கால வாழ்வை சித்தரிக்கின்றார் கவிஞர். வாழும் உலகோடு உறவு கொள்ளாத எந்தக் கலையும் மகத்தானதாவதில்லை நூலினுள் சென்று பாருங்கள். இந்த உண்மை புலனாகும்.

- புலவர் சீடன் -

thanks:- thinnai.com,Thursday September 25, 2008

போர்ச் சூழலிலும் இயற்கையின்பால் குதித்தோடும் கவிமனம்


மதிப்புரை

ராஜமார்த்தாண்டன்


போரைத் திணித்தவர்கள்மீதான கோபத்தின் வெளிப்பாடுகளோ எதிர்த்துப் போராடும் போராளிகளின் அத்துமீறல்கள் குறித்தான விமர்சனங்களோ இல்லாத இன்றைய ஈழத்துக் கவிதைகளைக் (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் உள்பட) காணுதல் பொதுவாகவே அரிதாகிப்போன சூழலில், அவை தவிர்த்து, போரினால் ஏற்படும் அழிவுகளையும் மனச்சிதைவுகளையுமே வெளிப்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ தொகுப்பு. இத்தனைக்கும் இதிலுள்ள கவிதைகள் அனைத்தும் 1996 - 2008 காலப்பகுதியில் எழுதப்பட்டவையே. தன்னிரு மாமாக்கள் இளம்வயதில் போர்ச்சூழலில் சாவுகொள்ளப்பட்ட குறிப்பும் நூலில் உள்ளது.
‘சின்னப் பூ’, ‘பேதம்’, ‘எங்களூர்க் கல்யாணம்’, ‘மனிதர்கள் போலவே’ போன்ற பல கவிதைகளும் வெளிப்படையான - ஒற்றைப் பரிமாணம் கொண்ட - கவிதைகள்; வாசகர் பங்கேற்புக்கு அதிகமும் இடம்தராதவை. இந்தக் கவிதைகளின் வெளிப்படையான தன்மை மட்டுமே அதற்குக் காரணமல்ல என்பதையும் கவிதை வாசகர்கள் தெளிவாகவே உணர்ந்துகொள்ள முடியும்.
ஈழத்து மக்களின் இன்றைய மனநிலையை - அவர்களது நம்பிக்கையையும் நம்பிக்கையின்மையையும் இரண்டுக்குமிடையிலான ஊசலாட்டத்தையும் ‘மரம்’, ‘எல்லாமே இயல்பாயுள்ளன’ என்னும் இரண்டு கவிதைகளும் மிகையேதுமின்றி இயல்பாகவும் சூசகமாகவும் கலைத்தன்மையுடன் வாசக மனத்தில் பதியவைக்கின்றன.
கூடவே ‘வெள்ளெலிகளுடன் வாழ்தல்’, ‘எச்சம்’, ‘குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம் ...’, ‘யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்’, ‘கோழி இறகும் காகங்களும்’ ஆகிய கவிதைகளே இத்தொகுப்பைக் கவிதை வாசகரின் கவனத்துக்குரியதாக்குகின்றன. இந்தக் கவிதைகள் இன்றைய ஈழத்தில் மனிதர்களின் அவல இருப்பைப் பல பரிமாணங்களுடன் வெளிப்படுத்துகின்றன.
மூச்சுக்காற்றால்
நிறையும் வெளிகள்
ஆசிரியர் துவாரகன்
பக். 78
வெளியீடு தினைப்புனம்
விற்பனை உரிமை:
புத்தகக் கூடம்
172, இராமநாதன் வீதி, திருநெல்வேலி யாழ்ப்பாணம்.
ஈழத்துக் கவிதைகளில் பரிச்சயமுள்ள தமிழகக் கவிதை வாசகர்கள், இயற்கையின் மீதான ஈர்ப்பு அவர்களின் ஆழ்மனத்துள் இயல்பாகவே படிந்துபோன ஒன்று என்பதைப் புரிந்துகொள்வார்கள். அதனால்தான் மரணத்துள் வாழும் போர்ச் சூழலிலும் துவாரகனின் மனம், சலசலத்தோடும் வாய்க்கால் நீரில் முக்குளித்து எழுந்து சிறகசைக்கும் மைனாக்களைக் காணும்போது இலேசாகிவிடுகிறது. வால் நீண்ட அணில்களைக் காணும்போது,
பின்னால்
வால் முளைத்துக்
குதித்தோடிவிடுகிறது
(குதித்தோடும் மனசு).
துவாரகனின் கவிதைமொழி மிகையேதுமில்லாத, உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத, இன்றைய கவிதைக்கான சமன்நிலை கொண்டதாக வெளிப்படுகிறது. அதன் பின்னே சாம்பலின் கீழ் தீக்கங்குகள்போல் உணர்வலைகள் கனன்று கொண்டிருப்பதையும் கவிதைகளில் உணர முடிகிறது.
உதவிக்கு யாரையாவது
உரத்துக் கூப்பிடு
ஆனாலும் கவனம்
வருபவனும்கூட ...
(மனிதத்தைத் தேடி)
நான் இனி
வெளியில் வாழ்வதைவிட
வெள்ளெலிகளுடன் வாழப் போகிறேன்
(வெள்ளெலிகளுடன் வாழ்தல்)
என்னும் வரிகளில், ஈழத்து மக்களின் இன்றைய அவல வாழ்க்கை பெருந்துக்கமாய் மனத்துள் கவிந்துவிடுகிறது.


thanks:- kalachuvadu dec.2008,www.vaarppu.com

புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
மேமன்கவி

ஓவ்வொரு படைப்பாளியும் தனது சூழலால் பாதிக்கப்பட்டே தனது படைப்புகளை முன்வைக்கிறான். சூழலின் பாதிப்பிலிருந்து தப்பி எழுதுதல் - அல்லது படைத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. உலகின் சிறந்த படைப்புக்கள் என பார்க்குமிடத்து அப்படைப்புகளை படைத்த படைப்பாளிகள் தமது சூழலால் பாதிக்கப்பட்ட அப்படைப்புகளை படைத்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். சூழலால் பாதிக்கப்படாத கலைஇ இலக்கியம் என்பது நிச்சயமாக தயாரிக்கப்பட்ட படைப்புகளே என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இன்று ஈழத்தில் படைக்கப்படும் பெரும்பான்மையான கலைஇ இலக்கியப் படைப்புகள் படைப்போர்கள் இன்றைய நமது தேசம் கொண்டிருக்கும் சூழலால் பாதிக்கப்பட்டுத்தான் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படைப்புக்களை படைக்கின்ற படைப்பாளிகள் முதிர்ச்சி அடைந்த படைப்பாளிகளாக இருப்பினும் சரி புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகளாக இருப்பினும் சரி இன்றைய நமது தேசச் சூழல் என்பது சகல இனஇ மதம் மற்றும் பிரதேசம் சார்ந்த மக்களைப் பாதித்துத்தான் இருக்கிறது. அத்தகைய நிலையில் அந்த மக்கள் சமூகத்திலிருந்து வரும் கலை இலக்கியப் படைப்புகளில் அந்தச் சூழலின் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் ஈழத்து கலைஇ இலக்கியப் படைப்புகளில் இயல்பாகவே ஒரு பொதுத்தன்மை வெளிப்படுகிறது (ஆங்கிலம்இ தமிழ்இ சிங்களம் என மும்மொழிகளிலும் படைக்கப்படும் படைப்புகளுக்கும் இக்கூற்றுப் பொருந்தும்)

ஆனாலும்இ இப்பொதுத் தன்மையினூடாக இனரீதியாகவும்இ மத ரீதியாகவும் மற்றும் பிரதேச ரீதியாகவும் படைக்கப்படும் கலைஇ இலக்கியப் படைப்புக்களில் அந்தந்த இனம்இ மதம்இ பிரதேசம் பிரத்தியேகமாக கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் அப்படைப்புக்கள் பேசுகின்றன என்பதையும் நாம் மறுதலிக்க முடியாது.

இந்தச் சிந்தனைகளின் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்னும் தொகுதியினை நாம் நோக்கவேண்டியிருக்கிறது.

90 களி;ல் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கிய துவாரகனின் இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை ஒருசேரப் பயிலுகின்றபொழுதுஇ அவர் வாழுகின்ற சூழலையும்இ அந்தச் சூழலில் அவர் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளையும்இ அப்பிரச்சினைகளால் அவரது அந்தச் சூழலில் உள்ளாகும் சிதைவுகளையும் நாம் இவரது கவிதைகள் வழியாக எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினைகள்இ அவை கொண்டுவரும் சிதைவுகள் என்பது ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் கூட்டத்தை அவலப்படுத்துகின்றஇ அழிக்கின்ற நிலையினைப் பார்க்கின்ற அதேவேளை@ அந்த சமூகக் கூட்டத்தின் பிரதிநிதியாக தன் இருப்பை உறுதி செய்கின்ற ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான அந்நியத்தைஇ தூரத்தைஇ இழப்பை எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.

குறிப்பாகஇ ‘கிராமம்’ எனும் கட்டமைப்பின் சூழலிலிருந்து போர் எனும் அரக்கனின் கொடூர கரங்கள் ஒரு சமூகத்தைச் சிதைத்துஇ தான் சார்ந்த மண்ணிலிருந்து அந்நியமாகிப் போகும் அவலத்திற்கு ஆளாக்கும் நிலையினை -அச்சமூகத்தில் படைப்பு மனோநிலை கொண்ட ஒருவர் எதிர்கொள்கின்ற பொழுதுஇ மேல் எழவேண்டிய போராட்ட குணத்தைத் தாண்டியும்இ மீறியும்இ சுயசிதைவை தன் இருப்பினூடாக எதிர்கொள்கின்ற ஒரு மனிதனின் உள் மனக்குரல்களாக துவாரகனின் கவிதைகள் பதிவாகி இருக்கின்றன.

தன் மண்ணுடனான தனது உறவை வெறுமனே நிலத்துடன் உரிமையை தக்கவைக்கும் நிலைக்கு அப்பால்இ அந்த மண்ணின் இயற்கையுடன் சார்ந்த பிணைப்பில் உறுத்திக் கொள்ளும் மனோநிலைதான் அடிச்சரடாக இயங்கும் ஒரு இருப்பு நிலைக்குத் தன்னை நகர்த்திக் கொள்ளும் அவசியம் தவிர்க்க முடியாத நிலை உருவாகும் என்பதனை துவாரகனின் கவிதைகள் சித்திரிக்கின்றன.

இவர் இழக்கின்ற ‘கிராமம்’ அல்லது தன் மண் சார்ந்த இழப்புக்களை இவர் வெளியாளாக நின்று உரைக்காமல்இ அந்தச் சூழலின் உள் இருந்து எடுத்துரைக்கின்றார். அவ்வாறாக@ இவர்இ இவருக்கும் மண்ணுக்குமான உறவையும் சரிஇ அம்மண் சந்திக்கும் சிதைவையும் சரி சக மனிதர்களின் அசைவாக்கங்களுடன் அல்லது அம்மண்ணைச் சார்ந்த ஊர்வனஇ நடப்பனஇ பறப்பன என்ற வகையான ஜீவராசிகளுடன் தொடர்படுத்திக் காண்கின்ற மனோபாவம் இவரது கணிசமான படைப்புக்களில் மேலோங்கி நிற்கிறது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வௌ;வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு இருப்பினும் ஒட்டுமொத்தமாகப் பயிலுகின்ற பொழுதுதான் தெரிகிறது. இவரது பெரும்பாலான படைப்புக்களில் உருவகமாகவோஇ குறியீடாகவோ அல்லது நேரடியாகவோ அந்த ஜீவராசிகள் இடம்பிடித்துக் கொள்கின்றன.

ஆடுகள்இ மைனாக்கள்இ குருவிகள் (அவையிலும் பல வகைகள்) அணில்கள்இ சிலந்திகள்இ பூச்சிகள்இ காகங்கள் பாம்புகள் (அவையிலும் சில வகைகள்) அட்டைகள்இ வண்ணத்துப் பூச்சிகள்இ எறும்புகள்இ நாய்கள்இ எலிகள்இ பல்லிகள்இ கழுகுகள் அறணைகள்இ மாடுகள் (அவையிலும் சில வகைகள்)

இப்படியாக இந்த ஜீவராசிகளை அவரது மண்ணின் சிதைவையும் தம் மண்ணில் எதிர்கொள்ளும் தன்மையை சித்திரிக்கின்ற நிலைகளில் அவை தவறாமல் இடம்பிடித்து விடுகின்றன. அத்தோடு பல கவிதைகள் அவை பிரதான பாத்திரங்களையும் வகிக்கின்றன. அந்த வகையில்

தூக்கணாங்குருவிக்கூடு

முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்

வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்

காட்டெருமை

எலியும் அறணையும் கரிக்குருவியும்

வெள்ளெலிகளுடன் வாழ்தல்

நாய்குரைப்பு

குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம்

கோழி இறகும் காகங்களும்

போன்ற கவிதைகளை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இப்படியாக இந்த ஜீவராசிகளை தன் மண்ணின் தன் இருப்பின் சிதைவை சித்திரிக்கின்ற அனுபவ வெளி;ப்பாடுகளில் தவறாமல் இடம்பிடித்துக் கொள்கின்றன.

அதேவேளை சக மனிதர்களுடனான உறவில் ஏற்படும் விரிசலைஇ அவலத்தைஇ தூரத்தைஇ போலித்தனத்தை சித்திரிக்க வரும்பொழுதுகூட அந்த ஜீவராசிகளையே உருவகங்களாக கையாள்வதுகூட அவரது பாணிகளில் இன்னொன்றாக இருக்கிறது.

மனிதர்களையிட்ட கவிதையான ‘தலைகள்’ எனும் கவிதையில் -

‘இந்தத் தலைகள்

எப்பொழுதும்

என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன’

எனத் தொடரும் அக்கவிதையில் ஓரிடத்தில்இ

‘தளர்ந்து இறுகி

தனியே வந்து விழும்

உறுப்புக்கள் ஒவ்வொன்றும்

என் கைப்பைக்குள்

பத்திரமாக இருக்கின்றன

தனியே வெட்டி எடுக்கப்பட்ட

ஒரு ஆட்டின் தலைபோலவே’

என அக்கவிதையை நகர்த்துகிறார். ‘குருட்டு வெளிச்சமும் ஊமை நாடகமும்’ எனும் கவிதையில்

‘சிற்றெறும்பு கலைந்தாற்போல்

சிந்தனைகள் சிதறும்’

என இடையில் பேசுகிறார்.

‘துயர் கவிந்த பொழுதுகளோடு

அலைகிறேன்

கூட்டத்திலிருந்து தவறிய

தனியன் ஆடுபோல்.

இருப்பதுஇ புசிப்பதுஇ படிப்பது

எப்படி முடியும்?

மனிதர்கள் தவிர்ந்த

நீண்ட பொழுதுகளில்

நாய்களும் எலிகளும் குரங்குகளுமே

அதிகமும் சந்திக்கின்றன’

இப்படியாக இத்தகைய பல உதாரணங்கள் இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன. இவரது இத்தகைய முறைமை என்பது இவர் கையாளும் ஓர் உத்தி என்று என்னால் சொல்ல முடியவில்லை. மாறாக இந்த நிலைக்கு காரணம் போர்இ அகதி வாழ்வுஇ இடப்பெயர்வு. இப்படியான அவலநிலைகள் இவர் சார்ந்த சமூகத்தினை துண்டம் துண்டமாக உடைத்து போட்டுள்ளது. அதன் காரணமாக சக மனிதர்களால் நிறைந்த இடங்கள் வெறுமையாக இருக்கின்றன. இப்பொழுது மிஞ்சுவது அந்த ஜீவராசிகள்தான்.

இக்கூற்றினை நிரூபிக்கும் வகையில் ‘மனிதர்கள் இல்லாத பொழுதுகள்’இ ‘நானும் நானும்’ போன்ற கவிதைகள் அமைந்துள்ளன.

இப்பொழுது இவரது உறவுகளும் உரையாடல்களும் அந்த ஜீவராசிகளுடன்தான்.

இப்பொழுது இன்னொரு நிலையும் தோன்றுகிறது. அந்த ஜீவராசிகளில் சிலவற்றை கொன்று தின்றது போகஇ போர்@ மனிதம் இறந்த நிலை. இப்பொழுது மனித இறைச்சி உண்ணும் நிலைக்கு பரிந்துரை செய்யும் அவலத்திற்கு இவர் ஆளாகிறார். ‘பல் நா சுவையறியாது’ எனும் கவிதை மூலம்.

இவ்வாறாக முன்வைக்கப்படும் துவாரகனின் கவிதைகள் மறுவாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில்இ தமிழ்ப் படைப்புலகில் ஏற்கனவே பரிச்சயமாகிப் போன உருவகக் கதைகளின் போக்குகளுக்கு (மனிதர்களாக அல்லாதவை கதாபாத்திரங்களாக இடம்பெறுதல் என மாதிரியான) இணங்க அவரது கவிதைகள் உருவகக் கவிதைகளாகவோஇ அசாதாரண நிலையிலான இருப்புஇ அந்த ஜீவராசிகளில் ஒன்றாகத் தானே மாறிவிடுவது (வெள்ளெலிகளுடன் வாழ்தல் எனும் கவிதையில்) போன்ற வெளிப்பாடுகளின் காரணமாக சர்ரியலிஸம் மற்றும் மேஜிக்கல் ரியலிஸம் போன்ற போக்குகளை மனங்கொண்ட படைப்புகளாகவோஇ அல்லது மண் இழப்பின் ஏக்கங்களைப் பற்றி பேசுவதனாலோ பின் காலனித்துவ படைப்புக்களாகவோ அடையாளப்படுத்தக்கூடிய சாத்தியங்களை துவாரகனின் கவிதைகள் அதிக அளவில் கொண்டிருக்கின்றன என்பதை அந்த மறுவாசிப்புகள் பேசக்கூடும்.

எனது வாசிப்பில் துவாரகனின் கவிதைகளைப் பொறுத்தவரை கவிதையை எடுத்துரைப்பதில் ஒரே வகையான தொனியினை கையாண்டிருக்கும் சலிப்புத் தன்மைக்கு அப்பாலும்இ அவர் காட்டி நிற்கும் அனுபவங்கள் போர் எனும் அரக்கனின் கொடூர கரங்களின் நீட்டல்கள் என்பது ஒரு சமூகத்தை எப்படிச் சிதைக்கிறது என்பதையும்இ அந்த சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தனிமனிதன் எத்தகைய சுய சிதைவுக்கு ஆளாகிறான் என்பதையும் பதிவு செய்கின்ற படைப்புகளாக நம்முன் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பதிவுகளை முன்வைக்க அவர் துணை சேர்த்திருக்கும் உருவகங்களுக்காகவும்இ படிமங்களுக்காகவும்இ குறியீடுகளுக்காகவும் தேர்த்தெடுக்கும் உலகத்தின் (ஜீவராசிகள்) காரணமாகஇ துவாரகனின் கவிதைகள் நமது சூழலைக் கொண்டு புதிய அனுபவங்களாக நமக்கு அமைகின்றன. இந்த வகையில் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ எனும் இத்தொகுப்பு கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு தொகுப்பாகும்.

பிற்குறிப்பு :-

1992 ஆம் ஆண்டு ‘விடிவு’ எனும் கவிதையினை மல்லிகைக்குத் தந்ததன் மூலம் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்ததாகக் கூறியிருக்கும் துவாரகன் மல்லிகைக்கு நன்றி கூறியிருப்பது அவரது நன்றி மறவாமையைக் காட்டுகிறது. ஆனால்இ அக்கவிதை இத்தொகுதியில் சேர்க்காமல் விட்டதுஇ அவர் அளவில் அக்கவிதையின் தரத்தில் அவருக்கு சந்தேகம் இருந்திருக்கலாம் போல் தோன்றுகிறது. இதுபோல் பல ஆரம்பகாலக் கவிதைகளை அவர் தவிர்த்திருப்பார் போல் தெரிகிறது. ஒரு படைப்பாளி தனது நூலுக்கான படைப்புகளை தேர்வு செய்யும் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்பது எனது கருத்து. ஆனாலும்இ அக்கவிதையும் இத்தொகுப்பில் சேர்த்திருந்தால் அவரது வளர்ச்சியினை நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்.

நன்றி :- மல்லிகைஇ ஒக்டோபர் 2008
thinnai.com, Thursday October 23, 2008

Friday, March 20, 2009

வெளிநாட்டுக் கதைகள்

சிறுகதைத் தொகுப்புப் பற்றிய அறிமுகக் குறிப்பு

-ச. இரத்தினசேகரன்-

நூல் :- வெளிநாட்டுக் கதைகள்

புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் சில)

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்

வெளியீட்டாளர் :- இராசையா ஐங்கரன் (சுவிஸ்)>

முகவரி :- ‘ஐங்கரபதி’> மயிலிட்டி> அல்வாய்.

திருமதி இராசையா தவமணிதேவி அவர்களின் முப்பத்தோராவது நாள் நினைவாக வெளியீடு செய்யப்பட்ட ‘வெளிநாட்டுக் கதைகள்’ என்ற தொகுப்பு நூலை திரு சு. குணேஸ்வரன் தொகுத்துள்ளார்.

இந்த நூலைப்பற்றி ஒரு வாசகனின் கருத்தை மட்டுமே இங்கு காணமுடியும். தொகுப்பாளரைப் பற்றிய ஒரு செய்தியை நான் குறிப்பிட்டாக வேண்டும். இலக்கிய உலகில் உ. வே. சாமிநாதையர்> சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோர் ஏடுகள் தேடி கிராமம் கிராமமாக அலைந்த காலங்களை நாம் படித்துத் தொpந்து கொண்டிருக்கிறோம். அதேபோன்று புலம்பெயர் படைப்பாளிகளின் இலக்கியங்களை தேடிச்சேகாpத்து வெளிநாட்டில் வாழ்பவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி உரிய புலம்பெயர் படைப்பாளிகளின் இலக்கியங்களைப் பெற்றவர். இவர் இத்தகைய நூலைத் தொகுத்ததற்கான காரணத்தை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். எங்கோ இருக்கும் படைப்பாளிகளின் கதைகளை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கத்தை மனதில் நிறுத்தி இவ்வாறான அளப்பரிய கைங்காpயத்தைச் செய்துள்ளார். அதாவது தான் படிக்கும் காலத்தில் தான் பட்ட சிரமங்களை வருங்கால மாணவர் சமூகம் அனுபவிக்கக் கூடாது என நினைத்து இவ்வாறான தொகுப்பைச் செய்துள்ளார்.

இத்தொகுப்பு நிச்சயமாக மாணவர் சமூகத்திற்கு ஏற்புடைய தொகுப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. இதிலிருந்து ஒன்று புலனாகிறது சுயநலமில்லாத ஒரு படைப்பாளனின் தொகுப்பாகவே இதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இவரது முன்மாதிரியான போக்கு சமூகத்திற்கு உயர்வாகவே கருதுவேண்டியுள்ளது.

முன்னட்டையை அலங்காpப்பது மறைந்த ஈழத்து ஓவியர் மாற்கு அவர்களினதாகும். இந்தச் சித்திரம் பேசுகிறது. எமது வாழ்வின் அவலங்களை எடுத்து வைக்கிறது. நடந்து நடந்து களைத்துப்போய் செருப்பைக் காலாறக் கழட்டிவிட்டு கணவனும் மனைவியும் ஒரு மரத்து நிழலில் ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பதை சித்திரம் பேசுகிறது. அத்தோடு தரையில் புத்தகம் இருக்கிறது. எமது கல்விநிலைமை எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்த்துவதாக இந்தச் சித்திரம் அமைந்துள்ளது. சொந்த நாட்டில் இருப்பதற்கு இடம்தேடி அலையும் மக்களின் துயரங்கள்கூட கண்முன்னே காட்சியாய் வந்து போகின்றது.

வெளியீட்டுரையில் வெளியீட்டாளர் இராசையா ஐங்கரன் ஒரு கருத்தை முன்வைக்கின்றார். உயர்வகுப்பு மாணவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய இந்நூலை கூடியவரையில் மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறார். இவரும் இந்த நூலின் அருமை பெருமைகளை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

தொகுப்பாளரான திரு சு. குணேஸ்வரன் தொகுப்புரையில் இந்நூலின் அவசியத்தை வெளிப்படுத்துவதோடு அவரால் தொpவுசெய்யப்பட்ட எட்டுக் கதைகள் பற்றி ஒரு சிறிய குறிப்புகளைத் தந்துள்ளார். ஒவ்வொரு குறிப்பையும் படிக்கிறபோதே வாசகன் படித்துப் பார்க்கவேண்டும் எனத்து}ண்டப்படுவான்.

தலைமைத்துவத்தைப் பற்றிக் கூறவரும் அறிஞர்கள் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள் ‘து}ண்டல் துலங்க வைத்தல்’ என்ற சொற்பதத்தை உபயோகிப்பது இவரது ஒவ்வொரு கதைக்குமுரிய குறிப்பு பொருத்தமாக இருக்கிறது.

முதலாவதாக இந்நூலில் வரும் கதையாக அ. முத்துலிங்கத்தின் ‘அம்மாவின் பாவாடை’ அமைந்துள்ளது. யாழ்ப்பாணச் சமூத்தில் சிலரது வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறார். வரட்டுத்தனமான கெளரவங்களுக்குள் தம்மை ஆட்படுத்தி தாமும் சிதைந்து மற்றவர்களையும் சிதைக்கும் வேலையில் ஈடுபடும் பாத்திரம் இங்கே படைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள் ‘கோபம் வந்தால் நிதானம் தவறக்கூடாது’ என்று. மகன் எதிர்வீட்டுப் பையனைத் திட்டிய வார்த்தை பிடிக்காமல் கோபப்பட்டு அவனது அம்மா சொண்டில் விரல்களால் சுண்டுவதும் கிராமத்தில் கூடக் கிடைக்கக்கூடிய பூவரசம் தடியால் அடிப்பதும் கண்டிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும். அதே சமயம் அம்மா ஒரு சந்தர்ப்பத்தில் மகன் கூறிய வார்த்தையை கூறுவதாக அ. முத்துலிங்கம் எழுதுகிறார். பெரியவர்கள் எவ்வளவு பொறுப்போடு நடக்கவேண்டும் என்பதை இந்தக் கதையின் வாயிலாக உணர்த்தியும் விடுகின்றார்.

கி. பி. அரவிந்தனின் ‘நாடோடிகள்’ என்ற கதையானது மனதைப் பிழிந்து எடுத்தது என்றே கூறவே வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் குடும்பத்தின் கதை. அந்தோ அவர்கள் வாழ்வு துடித்ததை கி. பி. அரவிந்தன் காட்டுகிறார். நாட்டில் தங்கியிருக்க அநுமதி மறுக்கப்பட்டபோது மனைவி கூறுகிறாள் ‘நாடோடிகள் மாதிரியல்லோ ஆகிப்போச்சு இது இத்தாலியில் உண்டாகியது இங்கு பிறந்தது இப்ப ஒன்று இங்கை உருவாகி இருக்கு எங்க பிறக்கப்போகுதோ?’ மனைவி கூற கணவன் அழுகிறான். எங்கள் சமுதாயம் எப்படி எல்லாம் போகிறது என்பதை ‘நாடோடிகள்’ புலப்படுத்துகிறது.

க. கலாமோகனின் ‘உருக்கம்’ யாவரையும் உருக வைக்கும் கதை. தொழில் அநுபவம்> தொழிலின் முக்கியத்துவம் என்பவற்றைக் குறிப்பிட்டுக் காட்டி கதையில் வரும் இலங்கை இளைஞன் தனது குடும்பத்திற்காக தனக்கேற்படும் அவமானங்களை எவ்வாறு தாங்குகிறான் என்பதைக் காட்டுகிறது.

‘ரகசிய ரணங்கள்’ என்ற கதைவாயிலாக அருண் விஐயராணி ‘வீணா’ என்னும் பாத்திரத்தின் மூலமாக போலியான வாழ்வைத் தேடி ஒடி தாமும் கெட்டு பிள்ளைகளையும் சீராக்க முடியாமல் இருப்பதைக் காட்டுவது வாசகனுக்கு பெரிய அந்தரமாக இருக்கிறது.

பார்த்திபனின் ‘தொpயவராதது’ சில விடயங்களைத் தொpயப்படுத்தியதால் நெஞ்சு கனதியாகி விட்டது. வறுமையில் வாடும் குடும்பத்தை நினைத்து தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் ஒரு நீக்கிரோவின் பெயரில் சுவிஸ் போகிறான். யாருக்குமே தொpயாது விமானம் விபத்தில் சிக்கி அவன் இறக்கிறான். வீட்டில் அவன் இன்னும் இருப்பதாக நினைக்கிறார்கள்.

பெண் படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ராNஐஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘எய்தவர் யார்?’ என்ற சிறுகதை துவேச உணர்வை வெளிப்படுத்தும் கதையாக அமைந்துள்ளது. உலகம் விசாலமானது எனச் சொல்வார்கள் ஆனால் அதற்குள்ளேயே இந்த இழிநிலைகளும் உண்டு என்பதைக் கதை காட்டுகிறது.

சுருதியின் ‘ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்’ என்ற சிறுகதையில் வாழப்பிடிக்காமல் குழந்தையோடு செத்துக் கிடந்தாள். பெண் அடிமைத்தனம் எதுவரை பாய்கிறது. என்பதை புரியவைக்கும் கதை.

‘புதிய தலைமுறை’ கோவிலூர் செல்வராஜனின் கதையாகும். அவரது நோர்வேக் கதையானது படிக்கும்போது எமக்கு அருகிலேயே நடப்பதாக இருக்கிறது. பணம்> பகட்டான வாழ்வு> பிள்ளைகளோடு கதைப்பதற்கு நேரமில்லாமல் தம்மை இயந்திரமாக்கித் திரியும் பெற்றார்கள் நிலை> இவற்றுக்கிடையில் ஸ்டெல்லா மாதிரி பொலிஸில் மட்டும் முறைப்பாடு கொடுக்கவில்லை. வளர்ந்து வரும் சில பிள்ளைகள் முரண்டு பிடித்தாலும் தமது பண்பாட்டிலிருந்து இறங்காமல் இருப்பதால் கட்டமைப்புக் குறையாமல் குடும்பங்கள் இருப்பதை உணர்த்துகிறது.

மிகக் கனதியான தொகுப்பாக இது அமைந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதை எல்லாம் இந்த நேரத்தில் கொண்டுசென்று கொடுக்க முடியுமோ அதை இலக்கியப் படைப்புகள் வாயிலாக கொடுக்கும் ஆசிரியர் சு. குணேஸ்வரனின் மகத்தான தொண்டு யாவரும் நன்கு உணர்ந்த ஒன்றாகும்.

அல்வாய் கிராமத்திற்கு இவ்வாறான எண்ணம் இன்று நேற்று வந்ததல்ல. ஐம்பத்திரண்டில் மு. செல்லையாவின் தொகுப்பான ‘வளர்பிறை’ வளர்த்துவிட்ட மரபுகள் அவை. அந்தத் தொடர்ச்சி மிக மகத்தான நூல்களை எல்லாம் முப்பதியோராவது நாள் நினைவாக வெளிவர வைத்துள்ளது. எந்தத் துறைசார்ந்த நூல்கள் வெளிவரவில்லை என்று தேடவேண்டியுள்ளது. இக்கிராமத்தில் மதுரன் அச்சுக்கூடமே இருக்கிறது இவர்களது பணிகுறிப்பிட வேண்டும். மழலைகளைத் தாலாட்டும் பாட்டிலிருந்து இளைஞர்களை சிந்திக்கத்து}ண்டும் நூல்கள் வரை வந்துவிட்டன. நிறுவன ரீதியாக செய்யக்கூடிய பல பணிகளை குடும்பங்களாக செய்கின்றனர். தமிழுக்கு உரம் சேர்க்கின்றனர். இவை எல்லாம் சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையென்பது எனது கருத்தாகும்.

-----

Wednesday, March 18, 2009

கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பின்னணியில்

கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பின்னணியில் சு.குணேஸ்வரன் எழுதிய
அம்மா தேர்ந்த கவிதைகளில் சில என்ற கவிதை நூலும்
வெளிநாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும்.

இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் 5.5.2002 முதல் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில்> “இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. (இதனை டைிஉவயஅடை.உழ.ரம என்ற இணையத்தளத்திலும் நேரடியாகச் செவிமடுக்கலாம்) நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.

ஓலியலை: 09.11.2008

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்புகலந்த வணக்கம். மீண்டும் இந்தவாரம் மற்றுமொரு காலைக்கலசம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று ஈழத்தின் நூல்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுகளின் பங்களிப்பு பற்றிய பின்னணியில் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து திரு. சு. குணேஸ்வரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் அம்மா தேர்ந்த கவிதைகளில் சில என்ற கவிதை நூலையும்> வெளிநாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலையும் இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகத்திற்காக எடுத்துக் கொள்கின்றேன்.

கல்வெட்டுக்கள் என்பன அரசர் முதலானோர் பெற்ற வெற்றி> அளித்த கொடை முதலியவற்றைக் குறித்துப் பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகங்களாகும். இங்கு நாம் குறிப்பிட முனைவது> ஒருவர் இறந்த முப்பத்தொன்றாம் நாள் சமயச்சடங்காக இடம்பெறும் அந்தியேட்டிக் கிரியைகள் முடிந்து சபிண்டீகரணம் நடைபெறும் போது சபையோர் கேட்கப் பாடப்படும் சரமகவி என்ற இரங்கற்பாவைத் தாங்கி வரும் சிறு நூல்களையாகும்.

சரமகவிப் பாரம்பரியம் சங்கப்பாடல்களிலிருந்தே ஊற்றெடுத்தது என்று கருதலாம். இறந்தவரின் பெயரும் பீடும் பொறித்த கல்வெட்டுப் பாரம்பரியம் (நிவையிh) இலக்கிய வடிவமாக முகிழ்க்கும் போது சரமகவியாகி விட்டன. தன்னுணர்ச்சிப்பாடல்களின் அடியாகத் தோன்றிய சரமகவிப் பாரம்பரியம் இன்று கல்வெட்டு என்ற பெயரிலே தொடர்கின்றது.

ஈழத்தின் புகழ்பூத்த கல்விமான்கள் பலர் அன்று சரமகவி பாடி உள்ளனர். தம்முடன் நெருங்கிய தொடர்புடையோரின் பிரிவுத்துயர் தாங்காது அவர்கள் பாடிய இரங்கற்பாக்கள் இன்றும் நினைவு கூரப்பட்டு வருகின்றன. ஆறுமுக நாவலர் இறந்த போது உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்> சி.வை. தாமோதரம்பிள்ளை இருவரும் பாடிய சரமகவி> ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை தன் மனைவி ஆச்சிக்குட்டிப்பிள்ளையின் பிரிவில் பாடிய ||நாயபிரலாபம்||> அதே ஆச்சிக்குட்டிப் பிள்ளையின் பேரில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்> ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை ஆகியோர் பாடிய இரங்கற்பாக்கள்> பேராசிரியர் கா.சிவத்தம்பியின் தந்தையார் பண்டிதர் த.பொ.கார்த்திகேசு பேரிலும் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் சைவப்பெரியார் கா.சூரன் பேரிலும் நாடக கவிமணி எம்.வீ.கிருஷ்ணாழ்வார் (கரவெட்டி ஆழ்வார்ப்பிள்ளை) பாடிய சரமகவிகள் போன்றவையும் குறிப்பிடத்தகுந்த சிலவாகும். உடுப்பிட்டி சிவசம்புப்பலவர்> கரவெட்டி கிருஷ்ணாழ்வார் போன்றோர் அக்காலத்தில் பிரபல சரமகவிகளாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பது அக்கால கட்டத்தில் வெளிவந்த கல்வெட்டுக்களின் இலக்கிய நயத்திலிருந்து புலனாகும்.

சரமகவிகள் ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக்கியிருக்கும்
வழிபாடு> கடவுள் துதியோடு தொடங்கும் சரமகவியில் இறந்தவரின் கிராமப்பின்னணி> முன்னோர்கள்> குடும்பநிலை> சமூக அந்தஸ்து> உறவினரின் பெயர்> தொழில்> சிறப்புத் தகைமைகள் முதலானவை கவிஞரின் இலக்கியப் புலமைக்கேற்பவும் கிராமத்துடனும் குடும்பத்துடனுமான அவரது தொடர்பின் ஆழத்திற்கேற்பவும் வெண்பாவரியில் காணப்படும்.

அடுத்த பகுதியான திதி நிர்ணய வெண்பாவில் இறந்த ஆண்டு> மாதம்> திதி> முதலான அம்சங்கள் வாய்ப்பாட்டுத் தன்மைகொண்டமையக் குறிப்பிடப்படும்.

மூன்றாம் பகுதி மரபு கிளர்த்தல் எனப்படும். இது கழிநெடிலடி ஆசிரியர் விருத்தத்திலேயே பாடப்படும். சிலசமயங்களில் கவிஞரின் கவியாற்றலுக்கேற்ப அறுசீர்> எண்சீர் விருத்தங்களிலும் பாடப்படுவதுண்டு. பெயர்ப்பட்டியலாக அமையும் இப்பகுதியில் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.

நான்காவது பகுதியான புலம்பல் அல்லது பிரலாபத்தில் இறந்தவரின் வயது> தகுதி> பொறுப்புகள்> பெருமை> இறப்பு நிகழ்ந்த முறைமை முதலானவற்றை உள்வாங்கிப் புலம்பலை அமைத்துக் கொள்வர் மனைவி புலம்பல்> மக்கள் புலம்பல் என்று உறவு முறை வாரியாக இது நீண்டு செல்லும்.

சரமகவியின் இறுதிப்பகுதி தேற்றம் எனப்படும். துயரத்தைத் தொடராது ஆறதல்பெறும் வகையில் வாழ்க்கையின் நிலையாமையை வலியுறுத்தி ஆன்மீக வழிமுறையில் உற்றார் உறவினருக்குத் தேறுதல் வழங்கும் அம்சமான இப்பகுதி விருத்தப்பாங்கில் அமைகின்றது.

கல்வெட்டியலின் இப்பாரம்பரிய படிமுறை மாற்றத்தின் இன்னொரு கட்டமாக அமைந்தது மறைந்தவரின் நினைவாக நூலொன்றை வெளியிடுவதாகும். பாரம்பரிய சரமகவிமுறையிலிருந்து விலகி> முற்றிலும் மாறுபட்ட சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக அமையும் இம்முயற்சி ஈழத்து வெளியீட்டுத்தளத்துக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இவ்வகையில் தமது விருப்பத்துக்குரியவர் பற்றிய நினைவுகளின் பதிவுகளாகவோ> அவரது விருப்பத்துக்குரிய ஒரு துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகவோ> சிறுவர் இலக்கியமாகவோ> சமய இலக்கியமாகவோ அந்த மலர் வெளியாகத் தலைப்பட்டது.

என்அப்பாவின் கதை என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்பொதைய துணைவேந்தர் என். சண்முகலிங்கன் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம்> 1988 இல் வெளியிட்ட இந்நூலின் முன்னுரையில் அமரர் பேராசிரியர் வித்தியானந்தன் தெரிவித்துள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

||தன் அப்பாவின் (அமரர் க. நாகலிங்கம்) கதையை இலக்கியமாக்கும் மகன் சண்முகலிங்கனின் இந்த நூல் அவர் தந்தையாரின் 31ம் நாள் நினைவுடன் வெளியாகின்றது. கல்வெட்டு மரபினின்றும் விலகி ஆக்க இலக்கியங்களையும் பயனான பிரசுரங்களையும் தரத் தொடங்கியுள்ள புதிய மரபினிடை சண்முகலிங்கனின் |என் அப்பாவின் கதை|யும் ஒரு புதிய தொடக்கம்.||

என்அப்பாவின் கதை என்ற பெயரில் தான் எழுதிய வாழ்க்க வரலாறு போலவே என் அம்மாவின் கதை என்ற நூலையும் என்.சண்முகலிங்கன் 2004இல் தன் தாயார் மறைந்த வேளையில் எழுதி வெளியிட்டிருந்தார். இதுவும் முன்னையதைப் போலவே நினைவு மலர் வரிசையில் வகைப்படுத்தத் தக்கது.

இந்தப் புதிய கல்வெட்டு மரபினைத் தீவிரமாகப் பின்பற்றியவர்களில் மயிலங்கூடலூர் பி.நடராஜனும் குறிப்பிடத்தக்க ஒருவராவார். அவரின் முயற்சியினால் பல அரிய நூல்கள் கல்வெட்டுக்களாக மலர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

மயிலங்கூடலூர் நடராஜனின் முயற்சியில் பல சிறுவர் நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தன. சிறுவர் இலக்கியத்துக்கு இருந்த தட்டுப்பாட்டை ஓரளவு இத்தகைய கல்வெட்டுக்களால் தீர்க்க முயன்ற நடராஜனது முயற்சியின் வெளிப்பாடாக இன்றும் நினைவுகூரப்படும் சில கல்வெட்டு நூல்கள் உள்ளன. கூடல் மழலைகள் (மார்ச் 1991) அவற்றில் ஒன்று இதில் புலவர் ம. பார்வதிநாதசிவம்> ஆடலிறை> பாரதி பார்வதிநாதசிவம்> பா. மகாலிங்கசிவம்> பா. பாலமுரளி> ந.திருச்செந்து}ரன்> வே.செவ்வேட்குமரன் ஆகிய ஏழு கவிஞர்களின் சிறுவர் பாடல்கள் அடங்கியிருந்தன. இவ்வகையில் சின்ன வண்ண மலரே (மே 1981)> சிறுவர் கவிமலர் (டிசம்பர் 1988)> சிறுவர்க்குப் பாரதியார். (செப்டெம்பர் 1982)> அன்னை நினைவமுதம். (மார்ச் 1987) ஈழத்துச் சிறுவர் கதைப்பாடல்கள். (1986.) ஆகிய குழந்தைப்பாடல்கள் தொகுப்புகளையும் உதாரணத்திற்குக் குறிப்பிடலாம்.

கல்வெட்டுப் பாரம்பரியத்தினூடாகப் பயன்பெற்ற மற்றுமொறு துறை மீள்பதிப்புக்களாகும்.
முத்துராச கவிராசரின் கைலாயமாலை மயிலங்கூடலூர் பி. நடராஜனை பதிப்பாசிரியராகக் கொண்டும் இராஜராஜேஸ்வரி கணேசலிங்கம் அவர்களை உரையாசிரியராகக் கொண்டும் யாழ்ப்பாணம்: சுழிபுரம் வள்ளியம்மை முத்து வேலு ஞாபகார்த்த வெளியீடாக 1987இல் வெளிவந்தது. முத்துராசர் கவிராசர் இயற்றிய கைலாயமாலை முதன்முதலாக 1906ம் ஆண்டு த.கயிலாசபிள்ளையால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. கைலாயமாலைக்குப் புதிய ஒளி என்ற தலைப்பில் பதிப்பாசிரியரின் முன்னுரையும் பின்னிணைப்பாக கைலாயமாலையில் கூறப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் பண்டிதை திருமதி இ.கணேசலிங்கம் அவர்களின் குறிப்புரையும் கைலாயமாலையின் ஆங்கில மொழி பெயர்ப்பாக திரு.அ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கட்டுரையும் அதில் இடம் பெற்றுள்ளன.

மாவை சின்னக்குட்டிப் புலவரின் தண்டிகை கனகராயன் பள்ளு. காங்கேசன்துறை: தமிழ் மன்றம்> மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தினூடாக நவம்பர் 1983 இல் வெளியிடப்பெற்றது. இது அக் கல்லூரியின் ஆசிரியர் ஆ.ஞானசுந்தரம் அவர்களின் நினைவு வெளியீடாக வெளிவந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் வலிகாமப் பகுதியில் அதிகார முதலியாகத் தெல்லிப்பழையில் இருந்த தண்டிகைக் கனகராய முதலியாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரால் ஆதரிக்கப்பட்டவரான மாவை சின்னக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்டதே தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்தமாகும். கி.பி.1792 ஆண்டளவில் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 1932இல் தெல்லிப்பழை வ.குமாரசுவாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. முன்னைய பதிப்பிலுள்ளது போன்று நாற்றுநடுகை வரையிலான 153 பாடல்களே இப்பதிப்பிலும் காணப்பட்டன.

திரு.க சொக்கலிங்கம் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த. பாரதியின் சக்திப்பாடல்கள் என்ற யாழ்ப்பாணம்: கல்வியங்காடு> திருவாட்டி உமையவல்லி சேதுராசா நினைவு வெளியீடாக 1982இல் வெளியிடப்பட்டது. இந்நூல் அமரர் சொக்கனின் சக்தி வழிபாடு பற்றிய முன்னுரையுடன் கூடிய பாரதியின் சக்திப்பாடல்களின் தொகுப்பாகும்.

பரமலிங்கம் நித்தியானந்தன் நினைவு மலர் நித்தியானந்தம். ஜுலை 1987 இல் கவிஞர் சத்தியசீலன்> வ.இராசையா> யாழ்.ஜெயம்> வளவை வளவன்> த. துரைசிங்கம் ஆகிய ஈழத்துக்கவிஞர் ஐவரது 77 கவிதைகள் அடங்கியதாக வெளிவந்தது.

குரு சி. மாணிக்கத்தியாகராஜ பண்டிதரின் வண்ணைச் சிலேடை வெண்பா. வண்ணார் பண்ணை மா. குமாரசுவாமி அவர்களால் 1989.இல் வெளியிடப்பட்டது. பெரியார் மாணிக்கத்தியாகராஜ பண்டிதரின் வாழ்க்கை வரலாறும் அவர் இயற்றிய வண்ணைச் சிலேடை வெண்பாவும் அடங்கிய இந்நூலும் அன்னாரின் நினைவு மலராக வெளியிடப்பெற்றுள்ளது.

சி.சதாசிவம் அவர்களின் தொகுப்பான பண்டிதமணி நினைவாரம்.. திருநெலிவேலியில் ஏப்ரல் 1986 இல் வெளிவந்தது. இவை அனைத்தும் சில ஆரம்பகால உதாரணங்களே. பின்னாளில் பல நூல்கள் இந்தப் பரிணாம வளர்ச்சியினூடாக வெளிவந்து> ஈழத்தின் வெளியீட்டுத்துறையில் கல்வெட்டின் பாரம்பரியத்தை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன.

ஓரு தனி மனிதனின் நினைவை அவனது வாழ்வை அவனது பிரிவை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம்> அவனது வம்ச விருட்சத்தினூடாக அவனது பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் வாய்ப்பு இத்தகைய கல்வெட்டுகளின் வாயிலாக ஆரம்பகாலத்தில் வெளிக்கொணர முடிந்தது. காலக்கிரமத்தில் கல்வெட்டு வெளியிடுவது பரம்பரைக் கெளரவத்தைப் பேணும் ஒரு அம்சமாக எமது சமூகத்தில் உணரப்பட்டது. இன்று ஈழத்திலும்> இங்கு புலம்பெயர்ந்த மண்ணிலும் இத்தகைய புலமைமிக்க சமரகவிஞர்கள் இல்லாத நிலையில் நினைவஞ்சலி என்ற பெயரில் தேவார திருவாசகங்களுடனும் அனுதாபச் செய்திகளுடனும் இரண்டு தலைமுறை வம்சாவளியுடனும் சிறு நூலுருவில்;; வெளியிடும் நடைமுறை காணப்படுகின்றது. சில கல்வெட்டுக்கள் மேற்கூறிய ஐந்து அம்சங்களில் ஒரு சிலவற்றை மாத்திரம் தாங்கியும் வெளிவருவதுண்டு. தன்னுணர்ச்சிப்பாடல்களாக அல்லாது அஞ்சலியுரைகள் மாத்திரம் சில மலர்களில் காணப்படுகின்றன.

கல்வெட்டாக வெளிவந்த மலர்களில் பெரும்பாலானவை> அன்றாடம் சமய அனுட்டானங்களுக்குத் துணையாக அமையும் வழிபாடுகளையும் தகவல்களையும் தாங்கிய பிரசுரங்களாகவே காணப்படுகின்றன.

கல்வெட்டுப்பாரம்பரியத்தின் மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே ஞாபகார்த்த மலர்களையும் நாம் கொள்ள வேண்டும். சமயக்கருத்துக்களை வெளிக்கொணரும் பிரசுரங்களாக அல்லாது> முற்று முழுதாக ஒருவரின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பிரதிபலிக்கத் தக்கதான இத்தகைய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகள் காலம் கடந்து நினைவில் நிற்பவையாகும். அமரத்துவம் அடைந்த ஒருவர் பற்றிய மனப்பதிவுகளைத் தாங்கி வெளிவரும் இத்தகைய மலர்களில் கல்வெட்டு இலக்கியத்தின் இடைக்கால சரமகவிப்பாரம்பரிய இலக்கியப்பண்புகள் காணப்படாத போதும்> அதன் அடிப்படை நோக்கம் இத்தகைய நினைவுமலர்களின்; வாயிலாகப் பதியப்பெறுகின்றது.

கல்வெட்டுக்களாக மலர்ந்த ஒரு பாரம்பரியம்> சரமகவியாகத் தழைத்து> காலப்போக்கில் இன்று நினைவஞ்சலி மலர்களாக மாறி நிற்பதைக் கண்டோம். இன்று புலம்பெயர் நாடுகளில் இயந்திரகதியில் இயங்கும் வாழ்க்கைமுறைகளில் சிக்குண்ட கல்வெட்டுப்பாரம்பரியத்தின் பின்பற்றல்கள் சரமகவிப்புலமையின்மையால் அதன் பாரம்பரிய நெறிகளிலிருந்து வழுவி பெரும்பாலும் உள்ளுர் அச்சகங்களின் உதவியுடன் அவசர அவசரமாக உருவாகி சபிண்டீகரண நிகழ்வில் விநியோகிக்கப்பட்டு ஒரு நாளில் மறைந்தொழிந்த விடும் நிலைமையே காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டுக்களை முறையாகத் தொகுத்து வெளியிடும் போது அது தாங்கிய செய்தி காலம் கடந்தும் பாதுகாக்கப்பட்டு வாழும் நிலை ஏற்படும்.

இந்தப் பின்னணியில் யாழ்ப்பாணத்திலிருந்து என்னிடம் வந்து சேர்ந்துள்ள இரண்டு நூல்களையும் நேயர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். முதலாவது நூல் ஈழத்தமிழர்களின் ஒரு புகலிடச் சிறுகதைத் தொகுப்பாகும்.

யாழ்ப்பாணம்> அல்வாயைச் சேர்ந்த இராசையா தவமணிதேவி அவர்களின் மறைவின் 31ம் நாள் நினைவினை முன்நிறுத்தி சுவிஸ் மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் அவரது மகன் இராசையா ஐங்கரன்> வெளிநாட்டுக் கதைகள் என்ற நூலை வெளியிட்டு வைத்திருக்கிறார். இந்நூலைத் தொகுத்து வழங்கியிருப்பவர் மயிலிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சு.குணேஸ்வரன் அவர்கள். வெளிநாட்டுக் கதைகள் என்ற இந்த நூலில் இன்று புலம்பெயர்ந்துசென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் எமது ஈழத்துப் படைப்பாளிகள் எண்மரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

கனடாவிலிருந்து அ.முத்துலிங்கம் எழுதிய அம்மாவின் பாவாடை> பிரான்சிலிருந்து கி.பி.அரவிந்தனின் நாடோடிகள்> க.கலாமோகனின் உருக்கம்> ஆகிய கதைகளும்> அவுஸ்திரேலியாவிலிருந்து அருண் விஜயராணி எழுதிய ரகசிய ரணங்கள்> ஜேர்மனியிலிருந்து பார்த்திபன் எழுதிய தெரிய வராதது> லண்டனிலிருந்து ராஜேஸ்பாலா எழுதிய எய்தவர் யார்> சுவிட்சர்லாந்திலிருந்து சுருதி எழுதிய ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்> நோர்வேயிலிருந்து கோவிலூர் செல்வராஜன் எழுதிய புதிய தலைமுறைகள் ஆகிய எட்டுக் கதைகளையும் யாழ்ப்பாணத்து இலக்கிய ரசிகர்கள் ஒரே நூலில் வாசிக்கும் வாய்ப்பினை வெளிநாட்டுக் கதைகள் என்ற இந்தத் தேர்ந்த சிறுகதைத் தொகுப்பு வழங்கியுள்ளது. கனடா> அவுஸ்திரேலியா> ஐரோப்பா ஸ்கன்டிநேவியா என்று பரந்துபட்ட எம்மவரின் வாழ்வியல்கூறுகளும் அவர்களின் மனதில் அழியாதிருந்த தாயகத்தின் மலரும் நினைவுகளும் இக்கதைகளில் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகின்றன. புகலிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் இக்கதைகளில் நளினமாகக் கையாளப்பட்டுள்ளன. ஈழத்து தமிழ் இலக்கியத்தின் நீட்சியாகக் கருதப்படும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் ஒரு சிறு வகைமாதிரியாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. இன்று சர்வதேச தமிழியல்துறைசார் பல்கலைக்கழகங்களிலும்> ஆய்வுகளிலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் விருப்புடன் உள்வாங்கப்பட்டுவரும் இந்நாட்களில்> இந்நூல் நூலகங்களிலும் ஆய்வகங்களிலும் நிச்சயம் பேணப்படவேண்டியதொன்றாகும்.

இரண்டாவது நூல் அம்மா: தேர்ந்த கவிதைகள் சில என்ற கவிதை நூலாகும். இங்கு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் அம்மா என்ற தலைப்பில் இதுவரை பல நூல்கள் வெளியாகிவிட்டன. குறிப்பாக இவற்றில் பெரும்பாலானவை தத்தமது அன்னையரின் நினைவு மலர்களாக அவ்வப்போது வெளிவந்தவை. அம்மா என்ற தலைப்பில் விக்னா பாக்கியநாதன் ஜேர்மனியிலிருந்து ஒரு கவிதைத் தொகுப்பை 2004இல் வெளியிட்டிருந்தார். நூலாசிரியையின் தாயாரின் மறைவின் நான்காவதாண்டுப் பூர்த்தியை நினைவுகூரும் முகமாக இத்தொகுப்பு வெளிவந்திருந்தது. இத்தொகுப்பில் தாய்> தாய்மொழி> தாயகம் போன்ற கருத்துக்கள் விதைக்கப்பெற்ற 29 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இவர் பின்னர் 2007இலும் அம்மா என் ஹைக்கூ என்ற தலைப்பில் மற்றொரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். அம்மா என்ற தலைப்பில் 25 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து கொழும்பிலிருந்து அந்தனி ஜீவா 2004இல் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அந்நூலின் தொகுப்பாசிரியர் அந்தனி ஜீவா தனது அன்னையாரின் நினைவாக அவரது மறைவின் 3ம் ஆண்டு நிறைவுதினத்தில் இந்நூலை வெளியிட்டிருந்தார். அம்மா 80 என்ற தலைப்பி;ல் லண்டனிலிருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் ஒரு கவிதைத் தொகுப்பை 2000ம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்கள். தெல்லிப்பழை மஹாஜனக் கல்லூரி அதிபர் அமரர் ஜயரத்தினம் அவர்களின் துணைவியார் திருமதி ராணி ரத்தினம் அம்மையாரின் 80வது அகவைப் பூர்த்தியை நினைவுகூரும் முத்துவிழாச் சிறப்பிதழாக இது வெளிவந்திருந்தது. திருக்கோணமலையிலிருந்து திருமலை சுந்தா 1998இல் அம்மா கவிதைகள் என்றொரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். அம்மா என்ற தலைப்பில் தாமரைத்தீவான்> அ.கெளரிதாசன்> நாகராணி ஃதரன்> சு.வில்வரத்தினம்> கனகசபை தேவகடாட்சம்> செ.நவசோதிராஜா> கெஜதர்மா> மு.பொ.> புரட்சிபாலன்> ப.தர்மலிங்கம்> கா.இரத்தினலிங்கம்> சிகண்டிதாசன்> க.கோணேஸ்வரன்> அன்னலெட்சுமி சுப்பிரமணியம்> திருமலை சுந்தா ஆகியோர் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருந்தது. திருமதி வள்ளிநாயகி சின்னத்துரை நினைவுமலராக இந்நூல் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட நூலியல் பின்னணியில் வைத்தே அம்மா: தேர்ந்த கவிதைகள் சில என்ற இந்தக் கவிதை நூலை நாம் பார்க்கின்றோம். திரு. சு.குணேஸ்வரன் தொகுத்த இந்த நூலும்> யாழ்ப்பாணம் அல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திருமதி பொன்னுத்துரை இராசம்மா என்ற ஒரு தாயின் மறைவையொட்டி 2007இல் அவர்களது உறவுகளால் வெளியிடப்பட்ட நினைவு வெளியீடாகும்.

அம்மா: தேர்ந்த கவிதைகள் சில என்ற இத்தொகுப்பில் ஈழத்துப் படைப்பாளிகளின் கவிதைகளையும்> புறநடையாக அமைந்த மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் காணமுடிகின்றது. கவிதைகளை தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் 15 கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஏற்கெனவே வெவ்வேறு பிரசுரங்களில் இடம்பெற்ற இக்கவிதைகள் அனைத்தும் தாய்-தாய்மை பற்றிப் பேசுவதன் காரணமாக இந்நூலில் தேர்ந்தெடுத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அல்வாயூர் மு.செல்லையா> அரியாலையூர் வெ.ஐயாத்துரை> கவிஞர் அம்பி> நீலாவணன். காரை செ.சந்தரம்பிள்ளை> சோ.பத்மநாதன்> மு.புஷ்பராஜன்> சு.வில்வரத்தினம்> கி.பி.அரவிந்தன்> மேமன்கவி> சேரன்> செழியன்> ஞானசம்பந்தன்> முல்லையூரான்> ராஜாத்தி ஆகியோர் இக்கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பக் கவிதைகளை சோ.பத்மநாதன். அ.யேசுராசா> எம்.ஏ.நு/மான் ஆகியோர் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

கல்வெட்டுப் பாரம்பரியம் தாயகத்தில் மற்றொரு படிநிலைக்குத் தன்னை ஏற்கெனவே மாற்றிக் கொண்டு விட்டது என்பதை இங்கு நான் குறிப்பிட்டுள்ள நூல்களின் வாயிலாக நாம் உணரமுடிகின்றது. அம்முறையை எதிர்வரும் காலத்தில் புகலிட மண்ணில் வாழும் தமிழரும் பின்பற்றி> இன்று ஈழத்தில் அச்சு வாகனம் ஏறக் காத்திருக்கும் எத்தனையோ ஆக்க இலக்கியங்களுக்கு உயிர் கொடுக்க முன்வரவேண்டும். கல்வெட்டுக்களை> நினைவஞ்சலி மலர்களை வெளியிடுவதைத் தம் தொழிலாகக் கொண்ட அச்சகங்கள் இந்த மாற்றத்துக்குத் துணைபோக முன்வரும் பட்சத்தில் இது மேலும் எளிதாகும்.

கிராமத்து வாசம் - குழந்தைப் பாடல்கள்
Thursday January 15, 2009
நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
By கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்

இன்று நினைவு வெளியீடுகள் மிகக் காத்திரமான ஆவணங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேகாந்தம் அடைந்த ஒருவரின் நினைவுகளை காலத்தால் நி;ன்று நிலைக்க வைக்கும் முயற்சிகளாக இவை அமைகின்றன. வெறுமனே தேகவியோகப் பாடல்களை (கல்வெட்டுப் பாடல்) ஆக்கிய நிலை மாறி இன்று பொதுஅறிவு வினாவிடைகள் விஞ்ஞான விளக்கங்கள் தேர்ந்த கட்டுரைத் தொகுப்புக்கள் என்பவற்றையும் கடந்து இலக்கியங்களின் மீள் பதி;ப்புக்களாகவும், தேர்ந்து எடுத்த கவிதை, மற்றும் சிறுகதைத் தொகுப்புக்களாகவும் வெளிவந்து தனிக் கவனிப்புப் பெறுகின்றன.
இந்தவகையில் திரு சு. குணேஸ்வரன் எடுத்துவரும் முயற்சிகள் தனிக்கவனம் பெறத்தக்கன. புலம்பெயர் நாட்டுச் சிறுகதை எழுத்தாளர்களின் தேர்ந்த கதைகள் ஒன்றினை ‘வெளிநாட்டுக் கதைகள்’ என்ற பெயரில் தொகுத்து நினைவு வெளியீடாகத் தந்தார். ‘அம்மா’ என்ற மகுடத்தின் கீழ் தாய்மை தொடர்பாய் படைக்கப்பட்ட தேர்ந்த கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டு வைத்தார். இவ்வாறு அவர் ஆற்றிவரும் தொகுப்பு முயற்சிகளில் ஒன்றுதான் ‘கிராமத்து வாசம்’ என்ற குழந்தைப் பாடல்களின் தொகுப்பு.
13.12.2008 இல் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு மயிலன் சின்னத்தம்பி என்பவரின் 31 ஆம் நினைவாக வெளியிடப்பட்ட ‘கிராமத்து வாசம்’, க. வேந்தனார் தொடக்கம் மு. பொன்னம்பலம் வரை 16 கவிஞர்கள் யாத்த 21 குழந்தைப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. 26 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவற்றிலும் கிராமத்து மண்ணினதும் கிராமத்து வாழ்வினதும் வாசனை கமழ்கின்றது. இதற்கு மகுடம் வைத்தாற்போல விரும்பி ரசிக்கத்தக்கதான ஓவியர் வாசனின் வழிகாட்டலில் மூன்றாவது கண் குழுவினரால் உருவாக்கப்பட்ட ‘வெருளி’ (வெருட்டிகளில் இருந்து விரும்பி) ஒன்று அட்டைப்படமாக வந்துள்ளமை சிறப்பாகவே அமைந்துள்ளது.
அனைத்துக் குழந்தைப் பாடல்களும் ஏற்கனவே அச்சு ஊடகங்களில் வெளிவந்தவையே. எனினும் அவை இங்கு தொகுத்து வைக்கப்பட்ட விதம் சிறப்பானது. கு. வேந்தனாரின் ‘அம்மாவின் அன்பு , சாரணா கய்யூமின் ‘சாப்பிடவா’, ச.வே பஞ்சாட்சரத்தின் ‘அம்மா அப்பா பாவம்’, குறமகளின் ‘தாத்தா’, கனக செந்திநாதனின் ‘பாட்டி அழுகின்றாள்’, என்று குடும்ப உறவுகளின் அன்பைப் பாடித் தொடங்குகின்றது.
தொடர்ந்து பிற உயிர்கள் மீது வெளிப்பட வேண்டிய அன்பைப் பாடும் வகையில் ந. கிருஸ்ணராசாவின் ‘கோழிக்குஞ்சு’, க. சச்சிதானந்தனின் ‘பட்டணம் போன பூனை ஆடலிறையின் ‘பச்சைக் கிளி’, மனோ பற்குணத்தின் ‘பட்டாம் பூச்சி’, க. வீரகத்தியின் ‘பலூன்’, வேலுவின் ‘பட்டம்’, திமிலைத்துமிலனின் ‘தவளைக்கூத்து’, சேந்தனின் ‘ஆமையின் வீடு’, என நீண்டு செல்கின்றது. ஆங்காங்கே தொழிலின் மகத்துவம் உணவின் உன்னதம் கலையின் அவசியம், ஒற்றுமை, வாழ்வின் உயர்வு என்று பல்வேறு செய்திகள் பாடப்பட்டுள்ளன.
குழந்தைகளைக் கவரக்கூடிய எளிய சந்தம், ஓசை நயம் என்பவற்றோடு ஒவ்வொரு பாடல்களுக்கும் பொருந்தத்தக்க வகையிலான படங்களும் இணைந்துள்ளன.
குழந்தைப் பாடல்களில் கூட சமூக விமர்சனங்கள் வெளிப்படலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஈழத்து நாட்டார் பாடல்களான ஏண்டி குட்டி, சிங்கிலி நோனா ஆகிய பாடல்கள் விளங்குகின்றன. ஆடலிறையின் ‘கடலை வாங்குவோம்’ என்ற பாடல் மிக அற்புதமாக கச்சான் வறுக்கும் காட்சியை மனதில் புதைக்கின்றது அதற்கு மேலாக
‘கோயிலுக்கு வந்திடாத
தம்பி தங்கை தின்றிடக்
கொண்டல் கச்சான் சோளம் எல்லாம்
வாங்கிக் கொண்டு செல்லுவோம்’
என்று பகுத்துண்டு ஓங்கும் வாழ்வு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
க. சச்சிதானந்தனின் ‘புக்கு புக்கு’ என்ற புகைவண்டிக் கவிதை கூறும் கருத்து வித்தியாசமானது. வழமையாக புகைவண்டி பற்றி கவிஞர்கள் பாடிய கருத்துக்களில் இருந்து வித்தியாசமானது. தண்டவாளத்தில் புகைவண்டி பயணிப்பதைப் பாடும்போது
‘இட்ட நேர்மை
இரும்புப் பாதை
விட்டிறங்கா
மேன்மையாளன்’
என்று பாடுவது மனிதனுக்கு ஒழுக்கம் போதிக்கும் வகையில் என்பது குறிப்பிடத்தக்கது.
க. சச்சிதானந்தனின் ‘பட்டணம் போன பூனை’ என்ற பாடலில் கிராமிய நகர வேறுபாடுகளை கவிஞர் சித்தரிக்கும் விதம் சிறப்பானது.
‘சட்டியிலே மீனில்லை
சாத்தி வைப்பார் குளிரூட்டும்
பெட்டியிலே பிறகென்ன
பிடிக்கவில்லை பட்டணம்தான்
அரணாகக் கோட்டைகளாம்
அதற்குள்ளே விசிறிகளாம்
பரணொன்றும் கிடைக்கவில்லை
பாழ்பட்ட பட்டணத்தில்’
என்ற வரிகள் கிராமத்து உயிர்ப்பூட்டும் வாசனையை எமக்கு அள்ளித்தரும் வரிகளாக பரிணமிக்கின்றன.
மேலும் இத்தொகுப்பில் சோமசுந்தரப் புலவரின் ‘கத்தரி வெருளி’, மு. பொன்னம்பலத்தின் ‘தில்லைநடனம், ஒன்றுபட்டால்’ ஆகிய பாடல்களும் க. சச்சிதானந்தனின் ‘எலியும் முயலும் செய்த தோட்டம்’ ஆகிய பாடல்களும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
குழந்தைகளின் உலகம் தனித்துவம் வாய்ந்தது. குழந்தைகளின் உள்ளத்துப் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆழமாக அவர்களின் ஆளுகையில் பதிவாகும். அவர்களின் புரிதல்கள் கனவுகளோடு சங்கமித்து யதார்த்தமாய் நீட்சி பெற்று வாழ்வை விளங்க வைக்கும.; இதனால் பாடல்கள் வழி குழந்தையின் புரிதல்களை வடிவமைக்கும் கவிஞர்கள் காத்திரமான பணியாளர்கள்தான். எனினும், அவர்களின் பாடல்களை அவற்றின் பயன் நோக்குக்கருதி திரு சு. குணேஸ்வரன் தொகுத்து வைத்துள்ள விதம் சிறப்பு வாய்ந்ததாகும்.
சிறந்த கவிஞராக, விமர்சகராக, புலம்பெயர் இலக்கிய ஆய்வாளராக தம்மை அடையாளப்படுத்தியுள்ள குணேஸ்வரன் அவர்கள் நினைவுமலர்த் தொகுப்பு முயற்சிகளிலும் அசைக்கமுடியாத முத்திரை பதித்தவர் என்பதை இதுவரை அவர் தொகுத்த பயனுள்ள தொகுப்புக்கள் உணர்த்துகின்றன. இந்தக் ‘கிராமத்து வாசம்’ என்ற குழந்தைப் பாடல்களின் தொகுப்பு காலத்தால் நின்று நிலைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
---Copyright:thinnai.com