Wednesday, March 18, 2009

கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பின்னணியில்





















கல்வெட்டுப் பாரம்பரியத்தின் பின்னணியில் சு.குணேஸ்வரன் எழுதிய
அம்மா தேர்ந்த கவிதைகளில் சில என்ற கவிதை நூலும்
வெளிநாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும்.

இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பீ.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில் 5.5.2002 முதல் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் பிரித்தானிய நேரம் காலை 07.00 முதல் 10.00 வரை ஒலிபரப்பப்படும் “காலைக்கலசம்” நிகழ்ச்சியில்> “இலக்கியத் தகவல் திரட்டு” என்ற பகுதி காலை 7.15 முதல் 8.00மணி வரை சுமார் 15-20 நிமிடங்கள் ஒலிபரப்பாகின்றது. (இதனை டைிஉவயஅடை.உழ.ரம என்ற இணையத்தளத்திலும் நேரடியாகச் செவிமடுக்கலாம்) நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வாராந்த நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி இதுவாகும்.

ஓலியலை: 09.11.2008

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கும் அறிவார்ந்த நேயர்களுக்கு முதலில் என் அன்புகலந்த வணக்கம். மீண்டும் இந்தவாரம் மற்றுமொரு காலைக்கலசம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்று ஈழத்தின் நூல்வெளியீட்டு முயற்சிகளில் கல்வெட்டுகளின் பங்களிப்பு பற்றிய பின்னணியில் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து திரு. சு. குணேஸ்வரன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் அம்மா தேர்ந்த கவிதைகளில் சில என்ற கவிதை நூலையும்> வெளிநாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலையும் இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகத்திற்காக எடுத்துக் கொள்கின்றேன்.

கல்வெட்டுக்கள் என்பன அரசர் முதலானோர் பெற்ற வெற்றி> அளித்த கொடை முதலியவற்றைக் குறித்துப் பாறையில் அல்லது கல்லில் செதுக்கப்பட்ட வாசகங்களாகும். இங்கு நாம் குறிப்பிட முனைவது> ஒருவர் இறந்த முப்பத்தொன்றாம் நாள் சமயச்சடங்காக இடம்பெறும் அந்தியேட்டிக் கிரியைகள் முடிந்து சபிண்டீகரணம் நடைபெறும் போது சபையோர் கேட்கப் பாடப்படும் சரமகவி என்ற இரங்கற்பாவைத் தாங்கி வரும் சிறு நூல்களையாகும்.

சரமகவிப் பாரம்பரியம் சங்கப்பாடல்களிலிருந்தே ஊற்றெடுத்தது என்று கருதலாம். இறந்தவரின் பெயரும் பீடும் பொறித்த கல்வெட்டுப் பாரம்பரியம் (நிவையிh) இலக்கிய வடிவமாக முகிழ்க்கும் போது சரமகவியாகி விட்டன. தன்னுணர்ச்சிப்பாடல்களின் அடியாகத் தோன்றிய சரமகவிப் பாரம்பரியம் இன்று கல்வெட்டு என்ற பெயரிலே தொடர்கின்றது.

ஈழத்தின் புகழ்பூத்த கல்விமான்கள் பலர் அன்று சரமகவி பாடி உள்ளனர். தம்முடன் நெருங்கிய தொடர்புடையோரின் பிரிவுத்துயர் தாங்காது அவர்கள் பாடிய இரங்கற்பாக்கள் இன்றும் நினைவு கூரப்பட்டு வருகின்றன. ஆறுமுக நாவலர் இறந்த போது உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்> சி.வை. தாமோதரம்பிள்ளை இருவரும் பாடிய சரமகவி> ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை தன் மனைவி ஆச்சிக்குட்டிப்பிள்ளையின் பிரிவில் பாடிய ||நாயபிரலாபம்||> அதே ஆச்சிக்குட்டிப் பிள்ளையின் பேரில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்> ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை ஆகியோர் பாடிய இரங்கற்பாக்கள்> பேராசிரியர் கா.சிவத்தம்பியின் தந்தையார் பண்டிதர் த.பொ.கார்த்திகேசு பேரிலும் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர் சைவப்பெரியார் கா.சூரன் பேரிலும் நாடக கவிமணி எம்.வீ.கிருஷ்ணாழ்வார் (கரவெட்டி ஆழ்வார்ப்பிள்ளை) பாடிய சரமகவிகள் போன்றவையும் குறிப்பிடத்தகுந்த சிலவாகும். உடுப்பிட்டி சிவசம்புப்பலவர்> கரவெட்டி கிருஷ்ணாழ்வார் போன்றோர் அக்காலத்தில் பிரபல சரமகவிகளாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பது அக்கால கட்டத்தில் வெளிவந்த கல்வெட்டுக்களின் இலக்கிய நயத்திலிருந்து புலனாகும்.

சரமகவிகள் ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக்கியிருக்கும்
வழிபாடு> கடவுள் துதியோடு தொடங்கும் சரமகவியில் இறந்தவரின் கிராமப்பின்னணி> முன்னோர்கள்> குடும்பநிலை> சமூக அந்தஸ்து> உறவினரின் பெயர்> தொழில்> சிறப்புத் தகைமைகள் முதலானவை கவிஞரின் இலக்கியப் புலமைக்கேற்பவும் கிராமத்துடனும் குடும்பத்துடனுமான அவரது தொடர்பின் ஆழத்திற்கேற்பவும் வெண்பாவரியில் காணப்படும்.

அடுத்த பகுதியான திதி நிர்ணய வெண்பாவில் இறந்த ஆண்டு> மாதம்> திதி> முதலான அம்சங்கள் வாய்ப்பாட்டுத் தன்மைகொண்டமையக் குறிப்பிடப்படும்.

மூன்றாம் பகுதி மரபு கிளர்த்தல் எனப்படும். இது கழிநெடிலடி ஆசிரியர் விருத்தத்திலேயே பாடப்படும். சிலசமயங்களில் கவிஞரின் கவியாற்றலுக்கேற்ப அறுசீர்> எண்சீர் விருத்தங்களிலும் பாடப்படுவதுண்டு. பெயர்ப்பட்டியலாக அமையும் இப்பகுதியில் கவித்துவ ஆற்றலை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாகும்.

நான்காவது பகுதியான புலம்பல் அல்லது பிரலாபத்தில் இறந்தவரின் வயது> தகுதி> பொறுப்புகள்> பெருமை> இறப்பு நிகழ்ந்த முறைமை முதலானவற்றை உள்வாங்கிப் புலம்பலை அமைத்துக் கொள்வர் மனைவி புலம்பல்> மக்கள் புலம்பல் என்று உறவு முறை வாரியாக இது நீண்டு செல்லும்.

சரமகவியின் இறுதிப்பகுதி தேற்றம் எனப்படும். துயரத்தைத் தொடராது ஆறதல்பெறும் வகையில் வாழ்க்கையின் நிலையாமையை வலியுறுத்தி ஆன்மீக வழிமுறையில் உற்றார் உறவினருக்குத் தேறுதல் வழங்கும் அம்சமான இப்பகுதி விருத்தப்பாங்கில் அமைகின்றது.

கல்வெட்டியலின் இப்பாரம்பரிய படிமுறை மாற்றத்தின் இன்னொரு கட்டமாக அமைந்தது மறைந்தவரின் நினைவாக நூலொன்றை வெளியிடுவதாகும். பாரம்பரிய சரமகவிமுறையிலிருந்து விலகி> முற்றிலும் மாறுபட்ட சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக அமையும் இம்முயற்சி ஈழத்து வெளியீட்டுத்தளத்துக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இவ்வகையில் தமது விருப்பத்துக்குரியவர் பற்றிய நினைவுகளின் பதிவுகளாகவோ> அவரது விருப்பத்துக்குரிய ஒரு துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகவோ> சிறுவர் இலக்கியமாகவோ> சமய இலக்கியமாகவோ அந்த மலர் வெளியாகத் தலைப்பட்டது.

என்அப்பாவின் கதை என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்பொதைய துணைவேந்தர் என். சண்முகலிங்கன் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். தெல்லிப்பழை: நாகலிங்கம் நூலாலயம்> 1988 இல் வெளியிட்ட இந்நூலின் முன்னுரையில் அமரர் பேராசிரியர் வித்தியானந்தன் தெரிவித்துள்ள கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது.

||தன் அப்பாவின் (அமரர் க. நாகலிங்கம்) கதையை இலக்கியமாக்கும் மகன் சண்முகலிங்கனின் இந்த நூல் அவர் தந்தையாரின் 31ம் நாள் நினைவுடன் வெளியாகின்றது. கல்வெட்டு மரபினின்றும் விலகி ஆக்க இலக்கியங்களையும் பயனான பிரசுரங்களையும் தரத் தொடங்கியுள்ள புதிய மரபினிடை சண்முகலிங்கனின் |என் அப்பாவின் கதை|யும் ஒரு புதிய தொடக்கம்.||

என்அப்பாவின் கதை என்ற பெயரில் தான் எழுதிய வாழ்க்க வரலாறு போலவே என் அம்மாவின் கதை என்ற நூலையும் என்.சண்முகலிங்கன் 2004இல் தன் தாயார் மறைந்த வேளையில் எழுதி வெளியிட்டிருந்தார். இதுவும் முன்னையதைப் போலவே நினைவு மலர் வரிசையில் வகைப்படுத்தத் தக்கது.

இந்தப் புதிய கல்வெட்டு மரபினைத் தீவிரமாகப் பின்பற்றியவர்களில் மயிலங்கூடலூர் பி.நடராஜனும் குறிப்பிடத்தக்க ஒருவராவார். அவரின் முயற்சியினால் பல அரிய நூல்கள் கல்வெட்டுக்களாக மலர்ந்துள்ளமை கவனிக்கத்தக்கது.

மயிலங்கூடலூர் நடராஜனின் முயற்சியில் பல சிறுவர் நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தன. சிறுவர் இலக்கியத்துக்கு இருந்த தட்டுப்பாட்டை ஓரளவு இத்தகைய கல்வெட்டுக்களால் தீர்க்க முயன்ற நடராஜனது முயற்சியின் வெளிப்பாடாக இன்றும் நினைவுகூரப்படும் சில கல்வெட்டு நூல்கள் உள்ளன. கூடல் மழலைகள் (மார்ச் 1991) அவற்றில் ஒன்று இதில் புலவர் ம. பார்வதிநாதசிவம்> ஆடலிறை> பாரதி பார்வதிநாதசிவம்> பா. மகாலிங்கசிவம்> பா. பாலமுரளி> ந.திருச்செந்து}ரன்> வே.செவ்வேட்குமரன் ஆகிய ஏழு கவிஞர்களின் சிறுவர் பாடல்கள் அடங்கியிருந்தன. இவ்வகையில் சின்ன வண்ண மலரே (மே 1981)> சிறுவர் கவிமலர் (டிசம்பர் 1988)> சிறுவர்க்குப் பாரதியார். (செப்டெம்பர் 1982)> அன்னை நினைவமுதம். (மார்ச் 1987) ஈழத்துச் சிறுவர் கதைப்பாடல்கள். (1986.) ஆகிய குழந்தைப்பாடல்கள் தொகுப்புகளையும் உதாரணத்திற்குக் குறிப்பிடலாம்.

கல்வெட்டுப் பாரம்பரியத்தினூடாகப் பயன்பெற்ற மற்றுமொறு துறை மீள்பதிப்புக்களாகும்.
முத்துராச கவிராசரின் கைலாயமாலை மயிலங்கூடலூர் பி. நடராஜனை பதிப்பாசிரியராகக் கொண்டும் இராஜராஜேஸ்வரி கணேசலிங்கம் அவர்களை உரையாசிரியராகக் கொண்டும் யாழ்ப்பாணம்: சுழிபுரம் வள்ளியம்மை முத்து வேலு ஞாபகார்த்த வெளியீடாக 1987இல் வெளிவந்தது. முத்துராசர் கவிராசர் இயற்றிய கைலாயமாலை முதன்முதலாக 1906ம் ஆண்டு த.கயிலாசபிள்ளையால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. கைலாயமாலைக்குப் புதிய ஒளி என்ற தலைப்பில் பதிப்பாசிரியரின் முன்னுரையும் பின்னிணைப்பாக கைலாயமாலையில் கூறப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் பண்டிதை திருமதி இ.கணேசலிங்கம் அவர்களின் குறிப்புரையும் கைலாயமாலையின் ஆங்கில மொழி பெயர்ப்பாக திரு.அ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கட்டுரையும் அதில் இடம் பெற்றுள்ளன.

மாவை சின்னக்குட்டிப் புலவரின் தண்டிகை கனகராயன் பள்ளு. காங்கேசன்துறை: தமிழ் மன்றம்> மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தினூடாக நவம்பர் 1983 இல் வெளியிடப்பெற்றது. இது அக் கல்லூரியின் ஆசிரியர் ஆ.ஞானசுந்தரம் அவர்களின் நினைவு வெளியீடாக வெளிவந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் வலிகாமப் பகுதியில் அதிகார முதலியாகத் தெல்லிப்பழையில் இருந்த தண்டிகைக் கனகராய முதலியாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரால் ஆதரிக்கப்பட்டவரான மாவை சின்னக்குட்டிப் புலவரால் இயற்றப்பட்டதே தண்டிகைக் கனகராயன் பள்ளுப் பிரபந்தமாகும். கி.பி.1792 ஆண்டளவில் இயற்றப்பட்ட இந்த இலக்கியம் 1932இல் தெல்லிப்பழை வ.குமாரசுவாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சென்னையில் பதிப்பிக்கப்பட்டது. முன்னைய பதிப்பிலுள்ளது போன்று நாற்றுநடுகை வரையிலான 153 பாடல்களே இப்பதிப்பிலும் காணப்பட்டன.

திரு.க சொக்கலிங்கம் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த. பாரதியின் சக்திப்பாடல்கள் என்ற யாழ்ப்பாணம்: கல்வியங்காடு> திருவாட்டி உமையவல்லி சேதுராசா நினைவு வெளியீடாக 1982இல் வெளியிடப்பட்டது. இந்நூல் அமரர் சொக்கனின் சக்தி வழிபாடு பற்றிய முன்னுரையுடன் கூடிய பாரதியின் சக்திப்பாடல்களின் தொகுப்பாகும்.

பரமலிங்கம் நித்தியானந்தன் நினைவு மலர் நித்தியானந்தம். ஜுலை 1987 இல் கவிஞர் சத்தியசீலன்> வ.இராசையா> யாழ்.ஜெயம்> வளவை வளவன்> த. துரைசிங்கம் ஆகிய ஈழத்துக்கவிஞர் ஐவரது 77 கவிதைகள் அடங்கியதாக வெளிவந்தது.

குரு சி. மாணிக்கத்தியாகராஜ பண்டிதரின் வண்ணைச் சிலேடை வெண்பா. வண்ணார் பண்ணை மா. குமாரசுவாமி அவர்களால் 1989.இல் வெளியிடப்பட்டது. பெரியார் மாணிக்கத்தியாகராஜ பண்டிதரின் வாழ்க்கை வரலாறும் அவர் இயற்றிய வண்ணைச் சிலேடை வெண்பாவும் அடங்கிய இந்நூலும் அன்னாரின் நினைவு மலராக வெளியிடப்பெற்றுள்ளது.

சி.சதாசிவம் அவர்களின் தொகுப்பான பண்டிதமணி நினைவாரம்.. திருநெலிவேலியில் ஏப்ரல் 1986 இல் வெளிவந்தது. இவை அனைத்தும் சில ஆரம்பகால உதாரணங்களே. பின்னாளில் பல நூல்கள் இந்தப் பரிணாம வளர்ச்சியினூடாக வெளிவந்து> ஈழத்தின் வெளியீட்டுத்துறையில் கல்வெட்டின் பாரம்பரியத்தை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன.

ஓரு தனி மனிதனின் நினைவை அவனது வாழ்வை அவனது பிரிவை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம்> அவனது வம்ச விருட்சத்தினூடாக அவனது பரம்பரைப் பெருமையை நிலைநாட்டும் வாய்ப்பு இத்தகைய கல்வெட்டுகளின் வாயிலாக ஆரம்பகாலத்தில் வெளிக்கொணர முடிந்தது. காலக்கிரமத்தில் கல்வெட்டு வெளியிடுவது பரம்பரைக் கெளரவத்தைப் பேணும் ஒரு அம்சமாக எமது சமூகத்தில் உணரப்பட்டது. இன்று ஈழத்திலும்> இங்கு புலம்பெயர்ந்த மண்ணிலும் இத்தகைய புலமைமிக்க சமரகவிஞர்கள் இல்லாத நிலையில் நினைவஞ்சலி என்ற பெயரில் தேவார திருவாசகங்களுடனும் அனுதாபச் செய்திகளுடனும் இரண்டு தலைமுறை வம்சாவளியுடனும் சிறு நூலுருவில்;; வெளியிடும் நடைமுறை காணப்படுகின்றது. சில கல்வெட்டுக்கள் மேற்கூறிய ஐந்து அம்சங்களில் ஒரு சிலவற்றை மாத்திரம் தாங்கியும் வெளிவருவதுண்டு. தன்னுணர்ச்சிப்பாடல்களாக அல்லாது அஞ்சலியுரைகள் மாத்திரம் சில மலர்களில் காணப்படுகின்றன.

கல்வெட்டாக வெளிவந்த மலர்களில் பெரும்பாலானவை> அன்றாடம் சமய அனுட்டானங்களுக்குத் துணையாக அமையும் வழிபாடுகளையும் தகவல்களையும் தாங்கிய பிரசுரங்களாகவே காணப்படுகின்றன.

கல்வெட்டுப்பாரம்பரியத்தின் மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே ஞாபகார்த்த மலர்களையும் நாம் கொள்ள வேண்டும். சமயக்கருத்துக்களை வெளிக்கொணரும் பிரசுரங்களாக அல்லாது> முற்று முழுதாக ஒருவரின் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பிரதிபலிக்கத் தக்கதான இத்தகைய வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகள் காலம் கடந்து நினைவில் நிற்பவையாகும். அமரத்துவம் அடைந்த ஒருவர் பற்றிய மனப்பதிவுகளைத் தாங்கி வெளிவரும் இத்தகைய மலர்களில் கல்வெட்டு இலக்கியத்தின் இடைக்கால சரமகவிப்பாரம்பரிய இலக்கியப்பண்புகள் காணப்படாத போதும்> அதன் அடிப்படை நோக்கம் இத்தகைய நினைவுமலர்களின்; வாயிலாகப் பதியப்பெறுகின்றது.

கல்வெட்டுக்களாக மலர்ந்த ஒரு பாரம்பரியம்> சரமகவியாகத் தழைத்து> காலப்போக்கில் இன்று நினைவஞ்சலி மலர்களாக மாறி நிற்பதைக் கண்டோம். இன்று புலம்பெயர் நாடுகளில் இயந்திரகதியில் இயங்கும் வாழ்க்கைமுறைகளில் சிக்குண்ட கல்வெட்டுப்பாரம்பரியத்தின் பின்பற்றல்கள் சரமகவிப்புலமையின்மையால் அதன் பாரம்பரிய நெறிகளிலிருந்து வழுவி பெரும்பாலும் உள்ளுர் அச்சகங்களின் உதவியுடன் அவசர அவசரமாக உருவாகி சபிண்டீகரண நிகழ்வில் விநியோகிக்கப்பட்டு ஒரு நாளில் மறைந்தொழிந்த விடும் நிலைமையே காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டுக்களை முறையாகத் தொகுத்து வெளியிடும் போது அது தாங்கிய செய்தி காலம் கடந்தும் பாதுகாக்கப்பட்டு வாழும் நிலை ஏற்படும்.

இந்தப் பின்னணியில் யாழ்ப்பாணத்திலிருந்து என்னிடம் வந்து சேர்ந்துள்ள இரண்டு நூல்களையும் நேயர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். முதலாவது நூல் ஈழத்தமிழர்களின் ஒரு புகலிடச் சிறுகதைத் தொகுப்பாகும்.

யாழ்ப்பாணம்> அல்வாயைச் சேர்ந்த இராசையா தவமணிதேவி அவர்களின் மறைவின் 31ம் நாள் நினைவினை முன்நிறுத்தி சுவிஸ் மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் அவரது மகன் இராசையா ஐங்கரன்> வெளிநாட்டுக் கதைகள் என்ற நூலை வெளியிட்டு வைத்திருக்கிறார். இந்நூலைத் தொகுத்து வழங்கியிருப்பவர் மயிலிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சு.குணேஸ்வரன் அவர்கள். வெளிநாட்டுக் கதைகள் என்ற இந்த நூலில் இன்று புலம்பெயர்ந்துசென்று வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் எமது ஈழத்துப் படைப்பாளிகள் எண்மரின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

கனடாவிலிருந்து அ.முத்துலிங்கம் எழுதிய அம்மாவின் பாவாடை> பிரான்சிலிருந்து கி.பி.அரவிந்தனின் நாடோடிகள்> க.கலாமோகனின் உருக்கம்> ஆகிய கதைகளும்> அவுஸ்திரேலியாவிலிருந்து அருண் விஜயராணி எழுதிய ரகசிய ரணங்கள்> ஜேர்மனியிலிருந்து பார்த்திபன் எழுதிய தெரிய வராதது> லண்டனிலிருந்து ராஜேஸ்பாலா எழுதிய எய்தவர் யார்> சுவிட்சர்லாந்திலிருந்து சுருதி எழுதிய ஒத்தைத் தண்டவாளமும் ஒரு கறுப்பு நீள முடியும்> நோர்வேயிலிருந்து கோவிலூர் செல்வராஜன் எழுதிய புதிய தலைமுறைகள் ஆகிய எட்டுக் கதைகளையும் யாழ்ப்பாணத்து இலக்கிய ரசிகர்கள் ஒரே நூலில் வாசிக்கும் வாய்ப்பினை வெளிநாட்டுக் கதைகள் என்ற இந்தத் தேர்ந்த சிறுகதைத் தொகுப்பு வழங்கியுள்ளது. கனடா> அவுஸ்திரேலியா> ஐரோப்பா ஸ்கன்டிநேவியா என்று பரந்துபட்ட எம்மவரின் வாழ்வியல்கூறுகளும் அவர்களின் மனதில் அழியாதிருந்த தாயகத்தின் மலரும் நினைவுகளும் இக்கதைகளில் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகின்றன. புகலிட வாழ்வின் பல்வேறு அம்சங்கள் இக்கதைகளில் நளினமாகக் கையாளப்பட்டுள்ளன. ஈழத்து தமிழ் இலக்கியத்தின் நீட்சியாகக் கருதப்படும் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் ஒரு சிறு வகைமாதிரியாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. இன்று சர்வதேச தமிழியல்துறைசார் பல்கலைக்கழகங்களிலும்> ஆய்வுகளிலும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் விருப்புடன் உள்வாங்கப்பட்டுவரும் இந்நாட்களில்> இந்நூல் நூலகங்களிலும் ஆய்வகங்களிலும் நிச்சயம் பேணப்படவேண்டியதொன்றாகும்.

இரண்டாவது நூல் அம்மா: தேர்ந்த கவிதைகள் சில என்ற கவிதை நூலாகும். இங்கு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் அம்மா என்ற தலைப்பில் இதுவரை பல நூல்கள் வெளியாகிவிட்டன. குறிப்பாக இவற்றில் பெரும்பாலானவை தத்தமது அன்னையரின் நினைவு மலர்களாக அவ்வப்போது வெளிவந்தவை. அம்மா என்ற தலைப்பில் விக்னா பாக்கியநாதன் ஜேர்மனியிலிருந்து ஒரு கவிதைத் தொகுப்பை 2004இல் வெளியிட்டிருந்தார். நூலாசிரியையின் தாயாரின் மறைவின் நான்காவதாண்டுப் பூர்த்தியை நினைவுகூரும் முகமாக இத்தொகுப்பு வெளிவந்திருந்தது. இத்தொகுப்பில் தாய்> தாய்மொழி> தாயகம் போன்ற கருத்துக்கள் விதைக்கப்பெற்ற 29 கவிதைகள் இடம்பெற்றிருந்தன. இவர் பின்னர் 2007இலும் அம்மா என் ஹைக்கூ என்ற தலைப்பில் மற்றொரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தார். அம்மா என்ற தலைப்பில் 25 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து கொழும்பிலிருந்து அந்தனி ஜீவா 2004இல் ஒரு நூலை வெளியிட்டிருந்தார். அந்நூலின் தொகுப்பாசிரியர் அந்தனி ஜீவா தனது அன்னையாரின் நினைவாக அவரது மறைவின் 3ம் ஆண்டு நிறைவுதினத்தில் இந்நூலை வெளியிட்டிருந்தார். அம்மா 80 என்ற தலைப்பி;ல் லண்டனிலிருந்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் ஒரு கவிதைத் தொகுப்பை 2000ம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்கள். தெல்லிப்பழை மஹாஜனக் கல்லூரி அதிபர் அமரர் ஜயரத்தினம் அவர்களின் துணைவியார் திருமதி ராணி ரத்தினம் அம்மையாரின் 80வது அகவைப் பூர்த்தியை நினைவுகூரும் முத்துவிழாச் சிறப்பிதழாக இது வெளிவந்திருந்தது. திருக்கோணமலையிலிருந்து திருமலை சுந்தா 1998இல் அம்மா கவிதைகள் என்றொரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தார். அம்மா என்ற தலைப்பில் தாமரைத்தீவான்> அ.கெளரிதாசன்> நாகராணி ஃதரன்> சு.வில்வரத்தினம்> கனகசபை தேவகடாட்சம்> செ.நவசோதிராஜா> கெஜதர்மா> மு.பொ.> புரட்சிபாலன்> ப.தர்மலிங்கம்> கா.இரத்தினலிங்கம்> சிகண்டிதாசன்> க.கோணேஸ்வரன்> அன்னலெட்சுமி சுப்பிரமணியம்> திருமலை சுந்தா ஆகியோர் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருந்தது. திருமதி வள்ளிநாயகி சின்னத்துரை நினைவுமலராக இந்நூல் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட நூலியல் பின்னணியில் வைத்தே அம்மா: தேர்ந்த கவிதைகள் சில என்ற இந்தக் கவிதை நூலை நாம் பார்க்கின்றோம். திரு. சு.குணேஸ்வரன் தொகுத்த இந்த நூலும்> யாழ்ப்பாணம் அல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திருமதி பொன்னுத்துரை இராசம்மா என்ற ஒரு தாயின் மறைவையொட்டி 2007இல் அவர்களது உறவுகளால் வெளியிடப்பட்ட நினைவு வெளியீடாகும்.

அம்மா: தேர்ந்த கவிதைகள் சில என்ற இத்தொகுப்பில் ஈழத்துப் படைப்பாளிகளின் கவிதைகளையும்> புறநடையாக அமைந்த மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் காணமுடிகின்றது. கவிதைகளை தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் 15 கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஏற்கெனவே வெவ்வேறு பிரசுரங்களில் இடம்பெற்ற இக்கவிதைகள் அனைத்தும் தாய்-தாய்மை பற்றிப் பேசுவதன் காரணமாக இந்நூலில் தேர்ந்தெடுத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அல்வாயூர் மு.செல்லையா> அரியாலையூர் வெ.ஐயாத்துரை> கவிஞர் அம்பி> நீலாவணன். காரை செ.சந்தரம்பிள்ளை> சோ.பத்மநாதன்> மு.புஷ்பராஜன்> சு.வில்வரத்தினம்> கி.பி.அரவிந்தன்> மேமன்கவி> சேரன்> செழியன்> ஞானசம்பந்தன்> முல்லையூரான்> ராஜாத்தி ஆகியோர் இக்கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பக் கவிதைகளை சோ.பத்மநாதன். அ.யேசுராசா> எம்.ஏ.நு/மான் ஆகியோர் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

கல்வெட்டுப் பாரம்பரியம் தாயகத்தில் மற்றொரு படிநிலைக்குத் தன்னை ஏற்கெனவே மாற்றிக் கொண்டு விட்டது என்பதை இங்கு நான் குறிப்பிட்டுள்ள நூல்களின் வாயிலாக நாம் உணரமுடிகின்றது. அம்முறையை எதிர்வரும் காலத்தில் புகலிட மண்ணில் வாழும் தமிழரும் பின்பற்றி> இன்று ஈழத்தில் அச்சு வாகனம் ஏறக் காத்திருக்கும் எத்தனையோ ஆக்க இலக்கியங்களுக்கு உயிர் கொடுக்க முன்வரவேண்டும். கல்வெட்டுக்களை> நினைவஞ்சலி மலர்களை வெளியிடுவதைத் தம் தொழிலாகக் கொண்ட அச்சகங்கள் இந்த மாற்றத்துக்குத் துணைபோக முன்வரும் பட்சத்தில் இது மேலும் எளிதாகும்.

2 comments:

  1. படைப்பாளிகளின் ஆக்கத்திற்கு ஊக்கமும் புத்துயிரும் தருவதாக அமைகிறது இந்த ஆக்கம். திருக்கோணமலை அம்மா ஆக்கத்துகூடாக வெளிவந்ததில் எனது முகவரியையும் தாங்கிவந்ததமைக்கு நன்றிகள். கனகசபை தேவகடாட்சம் பிரதம ஆசிரியர் தணல் இணையதளம் சுவிஸ். www.thanall.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete