Saturday, March 2, 2013

புனைவும் புதிதும் – சு. குணேஸ்வரனின் ஆய்வுக்கட்டுரைகள்




- ஜேயார், வீரகேசரி 02.03.2013.
   யாழ். தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றும் சுப்பிரமணியம் குணேஸ்வரன் அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றவர். தனது முதுதத்துவமாணி பட்டத்துக்காக புலம்பெயர் இலக்கியத்தை ஆய்வு செய்து யாழ். பல்கலைக்கழத்தில் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றவர்.

   M.Phil  பட்டத்துக்காக புலம்பெயர் இலக்கியத்தை ஆய்வுப்பொருளாகக் கொண்டு பட்டம் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரியவர் தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த ஆய்வாளர்.

   இந்தப் புனைவும் புதிதும் இவருடைய மூன்றாவது நூல். ஒரு கவிஞன் ஆய்வாளனாக மாறி வருகின்ற இலக்கிய வாசிப்பின் பரிணாமம் இது. தொடர்ச்சியான ஒரு வாசிப்புக்கு தன்னை உட்படுத்திக்  கொண்டிருப்பவர் குணேஸ்வரன் என்ற பேராசிரியர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் அவர்களின் அணிந்துரை வரிகள் எனக்கு மகிழ்வைக் கொடுத்தன.

   வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்பது வெறும் மேலோட்டமானதுதான். இலக்கிய வாசிப்பு, ஆழ வாசிப்பு என்பவைகளே ஒருவனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தும். அப்படியானதொரு நகர்வுக்கான வாசிப்பே குணேஸ்வரனுடையது என்பதுவே அணிந்துரை வரி தந்த ஆனந்தம்.

   தமிழின் உச்சங்களைக் காட்டியே காலம் கடத்திக் கொண்டிருக்கும் ஈழத்திலக்கிய உலகு புதிய ஆளுமைகளை இனங்காணத் தவறிவிடுவதாகவும் ஒரு வசனம் இருக்கிறது. வருத்தம் தந்த வரிகள் இவை.

   தமிழின் உச்சங்களைக் காட்டுவதென்பது காலம் கடத்துவதுதானே! புரியவில்லை.

   சு. குணேஸ்வரனின் புனைபெயர் துவாரகன் என்பது. இந்த ஆய்வாளருக்குள் ஒரு கவிஞன் வீற்றிருப்பதை இலக்கிய உலகம் பெரும் வியப்புடன் கவனித்தே வந்திருக்கிறது. துவாரகன் கவிதைகள் மீதான விமர்சனங்கள் ஒரு நூலாக (மின்னூல்) வெளிவந்திருப்பதையும் இந்த நூலின் இறுதிப்பக்கங்கள் பதிவு செய்திருக்கின்றன.

   துவாரகன் கவிதைகள், அலைவும் உலைவும் கட்டுரைகள் ஆகிய இவருடைய இரண்டு நூல்களுடன் ஐந்து தொகுப்பு நூல்களையும் தமிழிலக்கிய உலகிற்கு வழங்கி இருக்கிறார் குணேஸ்வரன்.

   இந்தப் புனைவும் புதிதும் என்னும் நூலை தனது பள்ளிக்காலத்தில் தமிழின் சுவையறிய வைத்த ஆசிரியர்கள் அறுவருக்கு அவர்களின் நிறைவான நினைவுகளுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர் குணேஸ்வரன். மனம் பூரிப்புக் கொள்கிறது. பள்ளிக்காலத்து ஆசிரியர்களை எல்லாம் யார் நினைவில் கொள்கிறார்கள். இந்தத நூலில் 110 பக்கங்களில் புலம்பெயர் இலக்கியம் சார்ந்ததாக நான்கு கட்டுரைகள் இருக்கின்றன.

பார்த்திபன் (ஜேர்மனி) படைப்புகள் பற்றியது.
புகலிடச் சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரை.
புகலிட இலக்கியமும் பண்பாடும்.
புகலிடச் சிற்றிதழ்களின் அரசியல்.

   ஆகியவை புலம்பெயர் எழுத்துக்கள் பற்றிய அறிமுகங்களை மிக எளிமையாகவும் மிக காத்திரமாகவும் செய்கின்றன.

   புலம்பெயர் இலக்கியம் பற்றிய அறிதலுக்கான ஒரு ஆவணமாகவும்திகழ்கின்ற சிறப்பு இவைகளுக்குண்டு. என்.எஸ். எம்.ராமையாவின் ‘ஒரு கூடைக்கொழுந்து’ பற்றிய விமர்சனம் சார்ந்த அறிமுகக் கட்டுரை இந்த நூலின் உச்சம்.

   ‘ஒரு கூடைக்கொழுந்து’ ராமையாவின் முதல் கதை. பேராசிரியர் கைலாசபதி தினகரனில் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிந்திய 50 களில் முற்போக்குஅணியினரின் பிரதேச இலக்கியம் என்னும் முனைப்புடன் இலங்கை வானொலி மூலம் அறிமுகம் கொண்டிருந்த ராமையாவிடம் கைலாசபதியவர்கள் கேட்டுப் பிரசுரித்த கதை இந்த ‘ஒரு கூடைக்  கொழுந்து’. 1961 தினகரனில் வெளிவந்த கதை.

   அரை நூற்றாண்டுகளுக்கு முந்திய ஒரு கதை பற்றிய அதுவும் மலைநாட்டுக்கதை பற்றிய எடுத்துக்கூறலும் சிலாகிப்பும் சில்லிடச் செய்கிறது. குணேஸ்வரன் அவர்களுக்கு ஒரு சலாம்போடச் சொல்கிறது.

   சிறுகதைத் துறைக்குள் பிரவேசித்திருக்கும் புதிய ஆளுமையான தாட்சாயணி பற்றிய கட்டுரையும் சத்தியபாலன் கவிதைகள் பற்றிய கட்டுரையும் நூலுக்குக் கனம் சேர்க்கின்றன. வாசிக்க வேண்டிய நூல். 
விலை 250 ரூபா. நூலைப் பெறுவதற்கான தொடர்பு: Book Lab, 20 Sir Pon.Ramanathan Road,Thirunelvely,Jaffna.

நன்றி - ஜேயார், வீரகேசரி 02.03.2013.