Tuesday, January 26, 2021

“மண்ணில் மலர்ந்தவை” இலக்கியக் கட்டுரைகள் - ஒரு பார்வை

-       பா. இரகுவரன்

   சு. குணேஸ்வரன் எழுதிய “மண்ணில் மலர்ந்தவை” என்ற நூல் அண்மையில் கிடைக்கப் பெற்றேன். முன்அட்டைப்படமாக தொண்டைமானாற்றின் அருகாமையில் மரபுரிமைச் சின்னமாக அமைந்திருக்கும் கரும்பாவளிக்கேணி  மிக அழகாக அச்சில் பதிவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் Book Lab இன் வெளியீடாக வந்துள்ள இந்த நூலை, யாழ்ப்பாணம் “குரு பிறின்டேர்ஸ்” மிகச் சிறப்பாக அச்சாக்கம் செய்துள்ளது.

   சமூக முன்னோடி ஓய்வுபெற்ற அதிபர் திரு செ. சதானந்தன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்நூலில், சிறுகதை பற்றிய இரண்டு கட்டுரைகளும் நாவல் பற்றிய மூன்று கட்டுரைகளும் கவிதைத் தொகுதிகள் பற்றிய ஆறு கட்டுரைகளும் “கரும்பாவாளி” ஆவணப்படம்  மற்றும் “ஆஸ்திரேலியவில் தமிழ் கற்பித்தல்” ஆகிய கட்டுரைகளுடன் கலை இலக்கிய ஆளுமைகளான கவிஞர் மு. செல்லையா , வே. ஐ வரதராஜன், கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர், பேராசிரியர் செ. யோகராசா ஆகியோர் பற்றிய ஐந்து கட்டுரைகளுமாக மொத்தம் பதினெட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

சிறுகதைகள் பற்றி…

    இந்த நூலில் முதலாம், மூன்றாம் கட்டுரைகள் ‘குந்தவை’ (சடாட்சரதேவி) என்ற புனைபெயர் கொண்ட தொண்டைமானாற்றைச் மூத்த பெண் எழுத்தாளரின் சிறுகதைகள் பற்றியதாக அமைந்துள்ளன. “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தந்த குந்தவையின் “பாதுகை” என்ற சிறுகதை பற்றி முதலாவது கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

   இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மகனை இழந்த ஒரு தாயின் அவல நிலையை “பாதுகை” என்ற சிறுகதை வெளிப்படுத்தி நிற்பதை குணேஸ்வரன் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறார்.

   ரமணன் காணாமல் ஆக்கப்பட்ட பிறகு அவனின் நண்பன் தயாளன் நீண்ட காலத்தின் பின் ரமணனின் வீட்டுக்கு வருகிறான். ரமணனின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் செல்ல விரும்புகிறான். அது ரமணனின் செருப்பாக அமைகிறது. ஆனால் அந்தச் செருப்புக்கு உயிர் ஊட்டி சிறுகதையை உயர்நிலைக்குக் குந்தவை கொண்டு சென்று விடுகிறார். தாய் உறங்கப் போகும்முன் ரமணனின் செருப்புகளை சேலைத்தலைப்பில் சுற்றி உறங்கும் தாயின் மனவேதனையையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளார் குந்தவை.

    இச்சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு மதிசுதா ‘பாதுகை’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் என்றும், வெங்கட்சாமிநாதன் ‘தொடரும் உரையாடல்’ என்ற கட்டுரையில் “குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேசமானவை. அவரது எழுத்து அலங்காரங்களோ, உரத்தகுரலோ, ஆவேச உணர்வோ அற்றது. ஆனால் மிகுந்த தேர்ச்சி பெற்றது.” என முக்கியமான கருத்துக்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

   மூன்றாவது கட்டுரை குந்தவையின் “ஆறாத காயங்கள்” என்ற சிறுகதைத் தொகுப்புப் பற்றியது. குந்தவையின் சிறுகதைகள் ஊடாகக் குந்தவையின் எழுத்தாளுமையைப் பற்றி நூலாசிரியர் பின்வருமாறு எழுதுகிறார். “குந்தவையின் சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஈழத்து மாந்தர்களின் இருண்ட பக்ககங்களையும் தன்னைப்பாதித்த விடயங்களையும் மண்ணின் பண்பாட்டோடு அழகாக வெளிப்படுத்துபவை. சம்பவ விபரிப்பும் கதை சொல்லும் நேர்த்தியும் குந்தவைக்கே உரிய தனிப்பாணி. ஈழத்து இலக்கியப் பரப்பில் மிகக்கூடிய கவனத்தைப் பெற்ற இவரின் சிறுகதைகளான பெயர்வு, வல்லைவெளி முதலான கதைகளில் இந்த அம்சங்கள் அழகாக அமைந்திருக்கின்றன.  குந்தவையின் கதைகளில் கிராமியம் சார்ந்த பண்பாட்டு அம்சங்களையும் கண்டு கொள்ள முடியும். கோழிக்கறி, புழுக்கம் ஆகிய சிறுகதைகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன. என்று குந்தவையின் கதைகளை சரியாக இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளார்.


நாவல் பற்றி…

            இரண்டாவதாக இடம்பெற்றிருக்கும் கட்டுரையானது, அ.முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்ற நாவலில் இடம்பெறும் ‘அம்மா’ பாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.

            “வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. எல்லோரும் தூங்கப் போய்விட்டார்கள் என்றே நினைத்தேன். ஒரே ஒரு கைவிளக்கு எரிய அம்மா எனக்காகத் தூங்காமல் காத்திருந்தார். நான் ஒரு பெரிய ஆள், ஏதோ முக்கிய காரியமாக வெளியே போய் விட்டு வருகிறேன் என்பது போல அம்மா எனக்காகக் கண்விழித்து இருந்ததை இன்று வரைக்கும் என்னால் மறக்க முடியாது. என்னைக் கண்டதும் அம்மா கட்டி அணைத்து தலையைத் தடவி ஈரம் இல்லை என்று உறுதி செய்த பிறகு ‘பிள்ளை உனக்கு நல்ல பசி. வா, நான் சாப்பாடு போடுகிறேன்’ என்றார். நான் எப்பிடிப் பேசினேன் என்றோ; யாருக்குப் பரிசு கிடைத்தது என்றோ ஒரு வார்த்தை அவர் என்னிடம் கேட்கவில்லை. கையிலே வெற்றிக்கிண்ணம் இல்லாததைப் பார்த்துவிட்டு என்னைக் கேள்வி கேட்டு வேதனைப்படுத்தக்கூடாது என்று நினைத்திருக்கலாம்.”

            நாவலில் இடம்பெறும் நிகழ்வுகளை உதாரணங்களாக முன்நிறுத்தி அம்மா பாத்திரத்தின் பரிதவிப்பின் ஊடாக அம்மா என்ற சொல்லுக்கான உருவத்தின் படிமமாக மனக்கண்ணில் நிலைக்க வைக்கிறார். மேலும் நூலாசிரியர் குறிப்பிடுகையில், ஏற்கனவே முத்துலிங்கத்தின் பல சிறுகதைகளில் அம்மா பாத்திரம் சிறப்பாக வார்க்கப்பட்டுள்ளதையும், முத்துலிங்கம் தனது தாயாரை 13 வயதில் இழந்தவர் என்றும், அப்பருவம் வரை தன் நினைவில் நிறைந்திருந்த அம்மாவை அழகாகச் சித்திரித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

            ஈழத்தில் எஸ்.பொ வுக்குப் பின்னர் மிகச்சிறந்த கதை சொல்லியாக முத்துலிங்கத்தை அடையாளப்படுத்த இதுபோன்ற எழுத்து நடையை அவர் பல கதைகளில் முத்திரையாகப் பதித்துள்ளார் என்று குறிப்பிட்டு கட்டுரை நிறைவு செய்துள்ளார்.

            “சுயம்வரம்” என்ற நாவல் பற்றிய குறிப்பு நான்காவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. இந்த நாவல் 1993இல் வெளிவந்துள்ளது.  தற்போது டென்மார்க்கில்  வாழ்ந்து வருகின்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கி.செ.துரை என்பவரால் எழுதப்பட்ட நாவலாகும். 1987இல் வடமராட்சிப் பிரதேசத்தின் மீதான ‘ஒப்பிறேசன் லிபறேசன்’ நடவடிக்கையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களும், அதன் பின்னர் அப்படைக்கலத்தைப் போராளிகள் தாக்கி அழிப்பதுவும் கதையின் பிரதான சம்பவங்களாக அமைந்துள்ளன. டென்மார்க் வடமராட்சி ஆகிய இரட்டைச் சூழலின் பின்புலத்தில் கதையின் களம் விரிந்து செல்கிறது.

(ஒளிப்படம் - நன்றி : சாந்தகுணம்) 

            பிரதேச மொழிச் சொற்களாக அதகுவிலை, அதகுவட்டி, ஒறுப்பு, ஆண்டம் பாளித்த, மீன்சாப்பாடு, கறுப்புத் தள்ளுவது, நிலாக் காலித்தல் ஆகியன உரையாடலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன என்றும், ஜோராக, பைசிக்கிள், மாமூல், காட்டுத் தர்ப்பார், வாபஸ், சமிக்ஞை ஆகிய சொற்பிரயோகங்கள் ஈழத்தமிழர் பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கில் மிகக்குறைவு என்றும், இவை ஒரு வித செயற்கைத் தன்மையை ஏற்படுத்தி விடுவதையும் நூலாசிரியர் சு.குணேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

            வடமராட்சியின் கிராமியப் பண்பு வெளிப்படும் வகையில் அமைந்த இந்த நாவலில் வல்வெட்டித்துறைக் கடற்கிராமத்தின் பாரம்பரியப் பெருமைகளும். கிராம மக்களின் வாழ்வும், தொழில்முறை அனுபவங்களும், பேச்சு வழக்கும் நன்கு பதிவாகியுள்ளன. மேலும் இந்நாவலூடாக டெனிஸ் சமூகத்தின் வாழ்க்கைமுறை, புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் உழைப்பு, அந்நிய கலாசாரச்சூழலில் தமிழரின் பண்பாட்டுப் பெறுமானம், போராளிகளின் செயற்பாடுகள் போன்றனவும் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

            கதை சொல்வதை மட்டும் முக்கியப்படுத்தாமல் போராட்டத்தின்பாலான அக்கறையையும், அதற்கூடாகத் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் உயிர்த்துடிப்பான வாழ்வையும் இந்நாவல் பதிவு செய்திருப்பதை சு.குணேஸ்வரனின் எழுத்தினூடாக அறிய முடிகின்றது. மேற்படி நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற மன அவாவையும் இக்கட்டுரை தூண்டுகிறது.

            அருளர் எழுதிய ‘லங்காராணி’ என்ற நாவல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு புனைவிலக்கியமாகும். 1977இல் கொழும்பில் இடம்பெற்ற இனவன்முறையினால்  பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த வடபகுதித் தமிழ் மக்களில் 1200 பேரைப் பாதுகாப்பாக ஏற்றி வந்த சரக்குக் கப்பலின் பெயரே ‘லங்காராணி’ ஆகும். காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் அம்மக்களின் அனுபவங்களையும், மனவோட்டங்களையும், எதிர்கால நோக்கத்தையும் ‘லங்காராணி’ என்ற நாவல் எடுத்துக்காட்டுகிறது.

            குறிப்பிட்ட பாத்திரங்களினூடாக இலங்கையின் அரசியற் சூழல், தமிழ்ச்சமூகத்தின் இருண்ட பக்கங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்நாவலில் பிரித்தானியருக்குப் பின்னர் இலங்கை ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், அவற்றை எதிர்கொண்ட மக்களின் அனுபவங்கள், தமிழர் பிரதேசத்தின் நியாயப்பாடுகளுக்கான முயற்சிகள் ஆகியனவெல்லாம் மிக நுணுக்கமாகச் சொல்லப்படுகின்றன. ஒரு நாவலுக்குரிய புனைவம்சங்கள் அனைத்தையும் இப்பிரதி கொண்டிருக்காவிடினும் விபரணவாயிலாக வரலாற்று அம்சம் நிறைந்தவகையில் கதை சொல்லுகிறது. கலை என்பதற்கும் அப்பால் சமூகவரலாற்றைப் பதிவுசெய்தலே இங்கு முக்கியமாகின்றது என்று சுட்டுகிறார்.

            இவ்வாறான ஓர் அரசியற் பிரதியைத் தந்த அருளர், அவரின் எழுத்துக்கள் ஊடாக தமிழ் இலக்கியப் பரப்பில் என்றும் நினைக்கப்படுவர் என்ற கூற்றுடன் “லங்காராணி” பற்றிய கட்டுரையை சு.குணேஸ்வரன் நிறைவு செய்கிறார்.

கவிதைகள் பற்றி…

   இராஜேஸ்கண்ணன் யாழ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பதற்கும் அப்பால் சிறந்த கலை இலக்கிய ஆளுமையாகத் திகழுகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுபவராக மட்டுமன்றி கலை, இலக்கிய விமர்சகர் நிலையிலும் கணிப்புப் பெற்றவராவார். 11 கவிதைகளைக் கொண்ட “போர்வைக்குள் வாழ்வு” என்னும் கவிதைத் தொகுதி குறித்து சு.குணேஸ்வரன் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். ஏனைய கலை. இலக்கியம் சார்ந்த பதிவுகளில் காட்டும் நெகிழ்ச்சித் தன்மையை விடுத்து கனதியான விமர்சனப்பாணியில் இந்தக்கட்டுரை அமைந்திருக்கிறது.

    ஐந்தறிவு கொண்ட ஜீவனாகிய நாயிடம் “இந்த நாட்டில் மானுடம் இருந்தால் உன் மோப்பக் குணத்தால் மோந்து சொல்” என்பதாகவும், மீண்டும் தொடங்கும் மிடுக்கைத் தந்த கவிஞர் மஹாகவியிடம் “நீ கண்ட மிடுக்கு இன்று பல வடிவங்களில் எம்மிடம் வாழ்கின்றது பார் என்று கூறும் வேளையிலும் சரி, இத்தொகுப்பின் இறுதியில் அமைந்த கவிதையிலே கடவுள் இந்த மானிடர்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலையிலும் சரி எல்லாக் கவிதைகளுமே தொலைந்து போன மானிடத்தைத் தேடுவதாகத்தான் உள்ளன. இக்கவிதைகளின் பலமாக நான் கருதுவது அவற்றின் ஓசைநயமும், சொற்களின் இலாவகமும் ஆகும் என்று குறிப்பிடுகிறார். 

    “போர்வைக்குள் வாழ்வு” என்ற கவிதை மிக இயல்பான நடையும் கிராமியவாழ்வும் அவர்கள் சிறுகச்சிறுகச் சேகரித்து வாழ்ந்த வாழ்க்கையும் இங்கு பேசப்படுகிறது என்று ஒரு கவிதையையும் சுட்டிக் காட்டுகிறார். 

“ முற்றத்து வேப்பமரம்

 பின் வளவுத் தென்னந்தோப்பு

 பத்துப்பரப்பிலே

முளையெறிந்த செய்கை நிலம்

சின்னப்பாதியிலே

பிஞ்சுவிட்ட பிலாமரம்

சீட்டுப்பிடித்து வாங்கி

கட்டி வைத்த கறவைமாடு

அறுவடைக்குப் பின்வந்த

அந்தரண்டு வைக்கற்போர்

காயவைத்த புழுக்கொடியல்

காசு சேர்த்த ‘சல்லி முட்டி’

பாடம் போட்டு வைத்திருந்த

சிப்பங்கட்டாப் பொயிலைச்சுமை

ஓய்வொழிச்சல் இல்லாமல்

உழைத்த காசால் உயர்ந்தவீடு” (போர்வைக்குள் வாழ்வு)

            சு.குணேஸ்வரன் மேலும் குறிப்பிடுகையில், பேச்சுமொழியின் சொற்களைக் கவிதையில் பயன்படுத்துகின்றபோது கவிதை மக்களை நோக்கி மிக அருகில் வருகிறபோது அது ஒரு வட்டாரத் தன்மையைப் பெற்று அதன்புரியும் தன்மை ஒரு குறுகிய வட்டத்துக்கு உரியதாகிவிடுகிறது. (கவிதையின் அரசியல், இந்திரன். பக்.102) என்ற ஒரு கருத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    மொழியின் ஆழமும், உணர்வின் வேகமும் சொற்களின் வசீகரமும் கவிதையை மேலும் பல தளங்களுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பைத் தந்து விடுகின்றன என்று குறிப்பிடுவதோடு ‘போர்வைக்குள் வாழ்வு’   கவிதையில் அதற்குரிய சாத்தியம் உள்ளது. இராஜேஸ்கண்ணனின் கவிதைகள் மொழியின் ஆழங்களைத் தேடிச் செல்லவும், மக்களின் வாழ்வினை உணர்வுச் செறிவுடன் பேசவும் இன்னும் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் என்று குணேஸ்வரன் தனது விருப்பத்தைக் குறிப்பிட்டு கட்டுரையை நிறைவு செய்கிறார்.

            மற்றுமொரு கட்டுரை சிவசேகரனின் “மட்டை வேலிக்குள் தாவும் மனசு” கவிதைத் தொகுதி பற்றியதாக அமைந்திருக்கிறது.

            சிவசேகரன், தன் கிராம வாழ்வையும் குடும்ப உறவின் அன்பையும் அரவணைப்பையும் மீட்டுப்பார்க்கின்ற அதேவேளை காலம் மனிதர்களிடம்  ஏற்படுத்திய வடுக்களையும், இன்னும் தீர்க்கப்படாத மனிதர்களின் வாழ்வின் பற்றாக் குறைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றார்.

“ இனிமேல் ஒன்றுமில்லை என்றெண்ணி

கண்ணீர் விரும்பாத குணங்களில்

ஏதோ ஒரு ரூபத்தில்

மன வயலுக்குள் முளை தள்ள

எத்தனித்துத் தோற்றுப் போகின்றன.

வெட்கம் கெட்ட ஆசை விதை

            சமூக விமர்சனமும், சமூக நோக்கும் கொண்ட கவிதைகள் கழிந்து கொண்டிருக்கும் காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் உடல், உளநெருக்கடிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அன்பையும், அழகும் நிறைந்த தமிழர் வாழ்வையும் எடுத்துக்காட்டுகின்றன. என்று நூலாசிரியர் சு.குணேஸ்வரன் கூறுவதுடன் “என்னை அதிகம் ஈர்த்தவை இவரின் இளமைப்பராய வாழ்வில் மறக்கமுடியாது நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கும் நினைவு மீட்டல் கவிதைகளாகும். என ஒரு கவிதையை எடுத்துக் காட்டுகிறார்.

“ கிடுகு ஊறப் போடும்

சின்னக் குட்டையில்

குளியல் போட்ட காகங்கள்

முட்டைக்குள் ஒவ்வொன்றாக அமர்ந்து

இறகை விரித்துப் பிடித்து

ஒற்றைக் காலால் தலை துவட்டும்

            பேச்சுவழக்கு மொழியை அப்படியே இரண்டு கவிதைகளில் எடுத்தாள்கிறார். அபலைத்தாயின் வேண்டுதல், மாங்காய்ச்சுண்டலும் தும்பு முட்டாசியும் ஆகிய இரண்டு கவிதைகளும் மொழிதலில் வித்தியாசத்தை வேண்டி நிற்கின்றன. இயல்பான மொழியைக் கையாளும் ஆர்வமும், வித்தியாசமான பாடுபொருட்களைக் கொண்டுவரும் தீவிரமும் ஒரு தேர்ந்த கவிஞராகத் தன்னை நிலைநிறுத்த எடுக்கும் முயற்சிகளும் இவரது கவிதைகளில் தெரிகின்றன. என சிவசேகரனின் கவிதைகள் பற்றி எடுத்துக்காட்டியுள்ளார்.

            ரஜிதாவின் “மணல் கும்பி” கவிதைத் தொகுதியை “இயற்கையை உறவாகக் காணும் பண்பு” என்ற மகுடத்துடன் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். வாழ்தல் ஒரு போராட்டம். அது இன்பம் தருவது சமவேளையில் துன்பத்தையும் தருவது. அந்த அலையோட்டத்தில் தான் நாங்கள் வாழப்பழகிக் கொள்கிறோம். கவிஞர் தான் வாழும் சமூக மாந்தர்களின் வாழ்வின் ஊடாகவும், கண்டு, கேட்டு, வாழ்ந்து பழகிக் கொண்ட அனுபவங்களின் திரட்டாகவும் இக்கவிதைகளைத் தந்துள்ளார். நாள்தோறும் பற்றாக் குறையோடு வாழும் மனிதர்கள் உழைப்பின் உச்சத்தை எட்ட முடியாத அவலத்தை,

“இந்தப் புதுவருடமாவது

என் குழந்தைகளுக்குப்

புதுத்துணி வாங்கித்தருவதாக

வாக்குக் கொடுத்தேனே

அதுவும் இல்லை”

            என்று கவிதாயினியின் கவிதையை எடுத்துக்காட்டுகிறார். இயற்கையை உறவாகக் காணும் பண்பு “சவுக்கம் காடுகளும் மணல் கும்பிகளும்” என்ற கவிதையில் வெளிப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பரந்திருக்கும் இப்பெரும்

வெண்மணலின் போர்வையில்

உருண்டு புரள்தலின் சுகத்தையும்

படுத்திருந்தே பறித்து

நாசியேறக் கனிந்திருக்கும்

நாவற்பழங்களின் சுவையையும்

இவைதான் மலைக்காடுகளென

தொடர் தொடராய்

எதிர்கண்ட மணல்கும்பிகளின் பேரழகை

தினம் தினம் தின்று தீர்த்தும்

கொண்டாடி வாழ்கிறோம்.”

            தொடர்ந்த வாசிப்பும், தேடலும் கட்டிறுக்கமான மொழிக் கையாள்கையும் எதிர்காலத்தில் மேலும் வலுப்படும்போது கவிதையில் பல்வேறு சாத்தியப் பாடுகளை எட்டிப்பிடிக்கும் வல்லமை வாய்க்கப் பெறுவார் என்பதற்கு சில கவிதைகள் கட்டியங்கூறி நிற்கின்றன என்று குணேஸ்வரன் சுட்டிக் காட்டுகிறார். அந்தவகையில் ‘பேரன்பு’ என்ற கவிதையில் வாழ்வின் ஒளியை அவாவும் முயற்சி மிக நன்றாகப் பதிவாகியுள்ளமையை எடுத்துக்காட்டுகிறார்.

            “நான் நட்ட கண்டொன்று

            பற்றிப் படர்ந்து பயனறிந்து

            நிழல் பரப்பி

            உதிரும் இலையை உரமாக்கி

            உற்ற நேரம் தரும்

            ஒப்பற்ற நேரமொன்றே”

            ரஜிதாவின் கவிதைகள் சமகாலத்தில் மாந்தர் எதிர் கொள்ளும் அவலங்களையும், ஆறாத காயங்களாக உறைந்து போய்விட்ட மனிதர்களின் மனப்போராட்டங்களையும், இயற்கையின் மீதான நேசிப்பையும், வாழ்வின் மீதான பிடிப்பையும் சித்திரிக்கின்றன. என்றும் கூறியுள்ளார்.

            கவிகலியின் இரண்டு கவிதைத் தொகுதிகள் பற்றிய கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒன்று “இன்னுமொருதேசம்”  மற்றையது “பனிவிழும் தேசத்தில் எரிமலை” கவிஞர் கலியின் கவிதைகள் ஈழத்துச்சூழலில் இருந்து புலம் பெயர்ந்த சூழல் வரை மனிதர்கள் படுகின்ற பல்வேறு விதமான சோதனைகளையும் அதனால் படுகின்ற இன்னல்களையும் எடுத்துக் காட்டுபவையாக அமைந்துள்ளன.

கவிஞரின் புலம் பெயர் வாழ்வு பற்றி கவிகலியின் கவிதையொன்று பின்வருமாறு அமைந்துள்ளது.

“நான்கு சுவருக்குள்

நல்ல வசதிதான்

பெருந்திரை

தொலைக்காட்சிப்பெட்டி

உட்கார்ந்தபடி உலகம் பார்க்க

இன்ரநெற், வைபர் வசதி

சொல்லிடத் தொலைபேசி

வாகனம், வயிறார உணவு

ஆனாலும்

நான்கு போரோடு

சிரித்துமகிழ

சமூக வெளியில்

சந்திப்புகள் இல்லை”

            இவரது கவிதைகள் இளமை வாழ்வு பற்றி, தாயகத்தில் சுற்றஞ்சூழ வாழ்ந்த நினைவுகள் பற்றி, முதியவர்கள் பற்றி, போர்ச்சூழல் தந்த இழப்புகள் பற்றி பேசுகின்றன. மண்பற்றியும், சகமனிதர்கள் பற்றியும், எந்தச்சிந்தனையும் இல்லாது உல்லாச வாழ்வே கதியெனக் கிடக்கும் மனிதர்கள் பற்றியும் பாடியிருக்கிறார். மேலும் தமது பிள்ளைகள் வாழ்வில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று பெற்றோர்கள் பட்ட பாடுகளை எள்ளளவும் நினைக்காமல் வாழும்பிள்ளைகள் பற்றியும் அரசியல் ஏமாற்றுக்காரரின் வித்தைகள் பற்றியும் புலம்பெயர்ந்து வாழ்வோர் இயந்திர வாழ்விலும் தாயக நினைவுகளிலும்  கரைந்துபோகும் நிலைகள் பற்றியும் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஏராளமான களைகளைக் களைய வேண்டும் என்ற எண்ணத்தைப் பற்றியெல்லாம் இத்தொகுப்பில் பாடியிருக்கிறார்.

            மாறிவரும் இன்றைய உலகில் மனிதநேயமற்று வாழும் மனிதர்களின் பண்பினையும், ஏமாற்று வித்தைகளையும். கேலிக்கூத்துகளையும், கோமாளித் தனங்களையும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.

    கவிஞரின் “பனிவிழும் பிரதேசத்தில் எரிமலை” என்ற கவிதைத் தொகுதியில் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் ஒருவன் நிலம், காலநிலை, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றால் முற்றிலும் மாறுபட்ட வாழ்நிலையில் வாழ்ந்துகொண்டு மற்றவர்களின் துன்பங்களையும் கண்கொண்டு பார்க்கிறான் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். 

“தாய்ப்பரிவு இல்லாத குழந்தை

மேய்ப்பன் இல்லாத மந்தைகள்

காய்ப்பதை நிறுத்திய மரம்

தூய்மை தேடுகின்ற மொழி

வாய்மை இல்லாத தீர்ப்பு”

   என்று “மேய்ப்பன் இல்லாத மந்தைகள்” என்ற கவிதையில் தமிழரின் இன்றைய அரசியற் பங்களிப்பை திசையழிந்தபோன நிலையாகப் பார்க்கிறார். உலகமயமாதல் என்ற கவிதை மனிதர்களின் சுயத்தையும், சுதேசிய இனங்களின் வாழ்வையும் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ உலகின் சுரண்டலையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

“உன்னால் கையெழுத்து மறந்தோம்

கணினி நீயே எம் கதி

உன்னால் மனக்கணக்கு மறந்தோம்

பாதை காட்டிக் கருவியால்

ஞாபக சக்தி இழந்தோம்.

கைத்தொலைபேசியால்

நடந்து செல்லும் பாதையில்

நிதானம் இழந்தோம்.

ஒருவனிடம் மட்டும்

குவிந்து கிடக்கிறது

விஞ்ஞான அறிவுத்திறன்”

   சாதாரண மனிதர்கள் எந்தப் பழக்கங்களும் இன்றிப் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையாக நடையில் தனது கவிதையைத் தந்தமையும், சமூகத்தின் மத்தியில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் பலவற்றை தனது கவிதைகளுக்குக் கருவாக எடுத்துக் கொண்டமையும் கவிஞரின் முதன்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. என்றும் குணேஸ்வரன் எடுத்துக் காட்டுகிறார். 

 

கலை இலக்கிய ஆளுமைகள் பற்றியது

            இந்நூலின் பதினோராவது கட்டுரையாக அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையாவின் பன்முக ஆளுமை என்ற கட்டுரை சற்று விரிவாகப் பத்துப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்படி கவிஞரின் எழுத்துக்களைத் தேடிப் பிடித்துத் தொகுப்பாக வெளியிட்டவர்களில் சு.குணேஸ்வரன் முதன்மையானவர். இந்நூலில் கவிஞர் மு.செல்லையா பற்றிச் சிறப்பான முறையில் எழுதி வாசகர்களுக்கு அறியத் தந்துள்ளார். அறிமுகம், ஆசிரியப்பணி, சமூகப்பணி, இலக்கியப்பணி, பெற்ற கௌரவங்கள் போன்ற விடயங்களை எளிமையான மொழியில், பொருத்தமான தலைப்புகளுடன் பதிவு செய்திருக்கிறார். இவற்றில் மு. செல்லையாவின் இலக்கியப்பணியானது. கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழி இலக்கணம், நாடகப்பணி என்ற வகையில் விரித்துக் கூறப்பட்டுள்ளமை கவிஞர் அவர்களின் பன்முகப்பட்ட கலை, இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.

  இந்தவகையில் “மு.செல்லையா அவர்களின் இலக்கியத் திறனுக்கு ஊடாக தமிழ்ச் சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டு அரசியற் பின்னணியை அறிந்து கொள்ள முடிகிறது. மக்களின் வாழ்வு நிலையும் காலமும் செல்லையாவின் படைப்புக்களின் ஊடாக மிகத் தெளிவாகப் புலப்படுகின்றன. ஆங்கிலேயரின் ஆட்சிப் பின்புலத்தில் கிறிஸ்தவ மயமாக்கலின் பரம்பலில் ஆலயங்கள் மீதும் சமூகஞ் சார்ந்தும் அவர் பாடிய பிரபந்தங்களும் தனிச் செய்யுள்களும் அக்கால மரபை நன்கு எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. அவர் எழுதிய கட்டுரைகளும், சிறுகதைகளும் சமூகத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றத்தை அக்கால வாழ்க்கை முறையினையும் அறிந்து கொள்ள வழிவகுக்கின்றன.” என்று மு. செல்லையா பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தந்திருக்கின்றார். 

            கவிஞர் சண்முகம் சிவலிங்கம் கிளர்த்தும் நினைவுகள் என்ற கட்டுரை 2012இல் கவிஞர் இறந்த செய்தியை அறிந்தவுடன் சுருக்கமாக அதேவேளை உணர்வு பூர்வமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. கவிஞர் சண்முகம் சிவலிங்கம் பற்றி மூன்று ஞாபகங்கள் தம்மிடம் உள்ளன என்றும் குறிப்பிடும் குணேஸ்வரன் அவற்றை எமக்கு அறியத்தருகிறார்.

1.         2003இல் யாழ்பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்தில் ஆய்வரங்கு ஒன்றின் போது கவிதை தொடர்பான அரங்கில் சண்முகம் சிவலிங்கம் உரையாற்றியபோது நேரில் கண்டது.

2.         நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது, யாழ்ப்பாணம் நாட்டார் வழக்காற்றியல் கழகத்தினூடாக நாட்டார் இசைமாலை நிகழ்வில் (1999) பல்வேறு நாட்டார் பாடல்களுடன் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்காண்டிக் பாடலை பாடும்போதான மனநிலை அனுபவம்.

3.         2008இல் இந்நூலாசிரியர் சு.குணேஸ்வரனின் “மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவரமுன்னர் அ.யேசுராசாவுடன் இந்தக்கவிதைத் தொகுதி பற்றிய உரையாடலில் “முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்” என்ற கவிதையைச் சிலாகித்து கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை ஒன்றுடன் தொடர்புபடுத்தி உரையாடியமை.

      இந்நூலில் சென்ற வருடம் (2019) காலமான எழுத்தாளர் கண.மகேஸ்வரன் பற்றிய கட்டுரையொன்று இடம்பெற்றுள்ளது. கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த கண.மகேஸ்வரன் 1968இல் சிரித்திரனில் எழுதத் தொடங்கியவர். 1981 தொடக்கம் 1984 வரை ‘தாரகை’ என்ற சஞ்சிகையின் மூலம் தனது காத்திரமான பங்களிப்பைத் தந்தவர். ‘தாரகை’யின் முதல் இரண்டு இதழ்களின் ஆசிரியர் குழுவிலும், மூன்றாவது இதழ் தொடக்கம் பன்னிரண்டாவது இதழ்வரை ஆசிரியராகவும் இருந்து ஈழத்தில் நாம் அறியக்கூடிய பல படைப்பாளிகளின் படைப்புகளை வெளிக்கொண்டு வந்தவர். என்ற அரிய தகவல்களைத் தருகிறார்.

            அடிப்படையில் கண.மகேஸ்வரன் ஒரு சிறுகதை ஆசிரியர் ஆவார். அவரின் ‘எல்லை வேம்பு’ (1994), ‘தீர்வு தேடும் நியாயங்கள்’ (2016) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், ‘மலரும் வாழ்வு’ (1992) என்ற குறுங்காவியமும் நூலுருப் பெற்றுள்ளன. குறுங்கதைகள், கவிதைகள் ஆகியனவும் எழுதியுள்ளார். இவரின் எழுத்து முயற்சிகளுக்காக 2015இல் கலாசாரப்பேரவை “கலைஞான வாரிதி” விருதினை வழங்கிக் கௌரவித்தது. 2016ஆம் ஆண்டு சிறந்த நூலுக்கான வடமாகாண விருதினை இவரின் சிறுகதைத் தொகுப்பு (தீர்வுதேடும் நியாயங்கள்) பெற்றுக்கொண்டது. முதலானவையும் கண. மகேஸ்வரன் பற்றிய நினைவுக் குறிப்பில் குணேஸ்வரன் பதிவு செய்துள்ளார்.

            15ஆவது கட்டுரையாக “வாசிப்புக்கும் நட்புக்கும் இலக்கணமான வரதண்ணா” என்ற தலைப்புடன் கவிஞர் வே.ஐ.வரதராசன் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இவர் ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர்களில் ஒருவராகிய வே.ஐயாத்துரை அவர்களின் மகனாவார். இவர் 2015இல் இறந்தபோது இந்தக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

            அரியாலைக்கும், அல்வாய்க்கும் ஒரு இணைப்புப் பாலம் போல விளங்கிய கவிஞர் வே.ஐ.வரதராசன் அடிப்படையில் ஒரு தீவிர வாசகன். அவரின் வாசிப்புக்கும் பட்டறிவிற்கும் ஏராளமான நூல்களை எழுதியிருக்க முடியும். ஆனால் மிகத்தாமதமாகவே கவிதை மற்றும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டார். கலைமுகம், ஞானம், ஜீவநதி ஆகிய இதழ்கள் அவரின் படைப்புகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. கலைமுகம் இதழ் இவரின் விரிவான நேர்காணல் ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அவரின் ‘என்கடன்’ என்ற கவிதைத் தொகுதி ஜீவநதி வெளியீடாக வந்திருக்கிறது.

            தனது தந்தையார் ஐயாத்துரை நினைவாக வருடாவருடம் யாழ் இலக்கிய வட்டத்தின் அனுசரணையுடன் குறித்த வருடத்தில் வெளிவந்த சிறந்த கவிதை நூலைத் தெரிவு செய்து அன்னாரின் குடும்பத்தினர் கவிஞர் ஐயாத்துரை விருதை வழங்கி வந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இவரைப்பற்றி சு.குணேஸ்வரன் பின்வருமாறு கூறிக் கட்டுரையை முடிக்கின்றார்.

            இவர் வாசிப்பதில் ஒரு சுகானுபவத்தைக் காண்பவர். நண்பர்களின் நட்பில் தோய்பவர். ஈழ தமிழக எழுத்துக்கள் முதல் மேலைத்தேய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வரை வாசிப்பார். தீவிரமாக உரையாடுவார். அவரவரின் தகுதிக்கு ஏற்ப உரையாடுவதிலும் கூடியவரையில் நட்பைப் பேணுவதிலும் மிகுந்த நாட்டமுடையவர். இனி அவரின் எழுத்துக்கள் மட்டுமே அவரின் நினைவுகளாக எம்மிடம் எஞ்சியிருக்கப் போகின்றன.

            அடுத்து நந்தினி சேவியர் பற்றி எழுதும்போது, நந்தினி சேவியர் இதுவரை எழுதிய சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பந்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் மற்றும் நினைவுக் குறிப்புக்கள் உள்ளடங்களாக ஒரு தொகுப்பை ‘விடியல்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நந்தினிசேவியர் 1969 – 2004 வரை எழுதிய சிறுகதைகள் “அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”, “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” ஆகிய நூலுருப்பெற்ற சிறுகதைத் தொகுதிகளில் உள்ளடங்கியிருந்த 16 சிறுகதைகளும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

            மேலும் “கடந்த நூற்றாண்டில் மார்க்சிய இலக்கியம்” என்ற ‘தமிழினி’ மகாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையுடன் மாலைமுரசு பத்திரிகையில் 2012ஆம் ஆண்டு தொடராக எழுதிய 12 கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக டானியல் அன்ரனி, வ.அ.இராசரத்தினம், சசி கிருஷ்ணமூர்த்தி, சி.பற்குணம் முதலானோர் பற்றிய கட்டுரைகளும்; குறும்படங்கள், திரைப்படங்கள் பற்றியும் ஏனைய படைப்பாளிகளின் சில தொகுப்புக்கள் பற்றியும் இலக்கியச் சர்ச்சைகள் பற்றியும் எழுதியவை முதலானவற்றை நந்தினி சேவியர் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  நூலாசிரியர் சு.குணேஸ்வரன் இத்தொகுப்புப் பற்றிக் குறிப்பிடும்போது “இத்தொகுப்பின் மிக முக்கியமான இன்னொரு பகுதியாக நந்தினிசேவியரி அகத்தையும் புறத்தையும் காட்டும் நேர்காணல்கள் உள்ளன.” என்று எழுதுகிறார்.

            இதில் மிக முக்கியமான செய்தியாக நூலின் இறுதியில் நந்தினி சேவியர் எழுதித் தொலைத்து விட்ட சிறுகதைகள். நாவல்கள் குறுநாவல்கள். கட்டுரைத் தொடர் ஆகிய தகவல் அடங்கியப்பட்டியலை வாசித்தபோது நெஞ்சம் பதைத்தது. 1966 – 1974 வரை எழுதியவற்றுள் கிடைக்காதுபோன சிறுகதைகளையும் ஈழநாடு இதழில் 1974இல் 56வாரம் தொடர்ச்சியாக வெளிவந்த மேகங்கள் என்ற நாவலையும் அதே ஆண்டு எம்.டி.குணசேன நிறுவனக் காரியாலயத்தில் சிந்தாமணிப் பத்திரிகைக்கெனக் கொடுத்த “கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன” என்ற நாவலையும் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற “ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள்” முதலானவற்றையும் இந்த நூற்றாண்டிலேயே தொலைத்து விட்டுநிற்கிறார் நந்தினி சேவியர்.

            உண்மையின் மேற்படி தொலைத்த படைப்புக்கள் மீட்டெடுக்க வேண்டியவையாகும். நந்திசேவியர் என்ற எழுத்தாளனின் மகத்துவத்தை அவரின் பெரும்பாலான படைப்புக்களை வாசிக்கும்போது அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி அவர் தொலைத்துவிட்ட எழுத்துக்கள் கலை இலக்கிய வரலாற்றில் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கியாகவும் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களைப் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் இக்கட்டுரையை வாசிக்கும்போது நாம் உணர முடிகின்றது.

பேராசிரியர் செ.யோகராசாவின் தேடல்

            பேராசிரியர் செ. யோகராசா அவர்களின் எழுத்துக்களில் புலம் பெயர் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் விரிவான ஆய்வுகளுக்கு பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன. 1990ஆம் ஆண்டில் இருந்து புலம் பெயர் இலக்கியங்கள் பற்றி சேகரித்தும் அறிந்தும் வைத்திருந்தார். 1993இல் பண்பாடு இதழில் எழுதிய “புலம்பெயர் கலாசாரமும் புகலிட இலக்கியங்களும்” என்ற நீண்ட கட்டுரையை முக்கியமானது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அதில் புலம் பெயர்ந்த தமிழர்களின் புனைவுசார்ந்த எழுத்துக்களையும், புனைவுசாராத எழுத்துக்களையும் ஏனைய கலை இலக்கிய முயற்சிகளையும் பற்றி விரிவான பதிவொன்றினைச் செய்திருக்கிறார்.

            இவரின் புலம் பெயர் இலக்கியம் தொடர்பான எழுத்து முயற்சிகளை பின்வரும் மூன்று வகையில் குணேஸ்வரன் நோக்குகிறார்.

1.    ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியாக புலம் பெயர்ந்தோரின் இலக்கிய முயற்சிகளை ஒப்புநோக்கும் கட்டுரைகள்.

2.    புலம் பெயர்ந்தோரின் படைப்புலகில் புனைவுமற்றும் புனைவுசாரா முயற்சிகளை பதிவு செய்த கட்டுரைகள்.

3.    புலம்பெயர் இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவுகள்.

       இவை தவிர ஈழத்து இலக்கியம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளிலும். ஆய்வுக்கட்டுரைகளிலும், ஆய்வரங்க உரைகளிலும் தொடர்ச்சியாகப் புலம்பெயர் எழுத்து முயற்சிகள் பற்றிய தனது எண்ணப்பாட்டினையும் செ. யோகராசா வெளிப்படுத்தியிருக்கிறார். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்விப் புலத்திலும், இலக்கியப் புலத்திலும், ஆய்வுப் புலத்திலும் தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கின்றார்.

      1992இல் க.பொ.த உயர்தரம் கற்கும்போது அவரிடம் சில மாதங்கள் தமிழ் கற்கும் பேறு பெற்ற மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்றுவரை ஆசானாகவும், வழிகாட்டியாகவும் நல்ல நண்பராகவும் இருந்து வழிப்படுத்துகிறார் என குணேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கரும்பவாளி ஆவணப்படம் பற்றி…

   ‘மண்ணில் மலர்ந்தவை’ என்ற இந்த நூலின் இறுதிக்கட்டுரையாக வசீகரன் தயாரித்த கரும்பாவளி என்ற ஆவணப்படம் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. அதிலிருந்து பல தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

1.    வெண்பாறைகளை வெட்டி அமைக்கப்பட்ட குளமும், அருகே சிறிய கிணறுகள் இரண்டும், ஒரு ஆவுரஞ்சிக்கல்லும் கடந்த 2012ஆம் ஆண்டு பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களாலும், அவர்தம் குழுவினராலும் இனங்காணப்பட்டு வெளிக்கொணரப்பட்டன.

2.    வடமராட்சி உடுப்பிட்டியில் கடவை காத்தான் என்ற இடத்தில் வாழ்ந்த குமாரசாமியின் மகன் வீராத்தை என்ற பெண் 200 வருடங்களுக்கு முன்னர் (1800களில்) அமைத்த குளம், கிணறு, தண்ணீர்ப்பந்தல், சுமைதாங்கி என்பவற்றுடன் கூடிய பகுதி அiமைந்துள்ளது.

3.    ஆவுரோஞ்சிக்கல்லில் “குமாரசாமி பெண் வீராத்தை அமைத்துக்கொடுத்த குளம்” என்ற வாசகமும், கல்லின் மேற்புறத்தில் சூலம் குறித்த அடையாளமும் காணப்பட்டன என பேராசிரியர் இது தொடர்பாக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். வாளி என்பது நீர் நிலை சார்ந்த இடம் அல்லது மக்கள் குடியிருப்புக்கள் அமைந்த இடம் எனப் பொருள்படும். தூவாளி. கும்பவாளி ஆகியனவும் அருகில் உள்ள ஏனைய கிராமங்கள் ஆகும். இதனால் பேராசிரியர் கரும்பாவாளி என்ற தொடரையே எடுத்தாண்டுள்ளார். ஆனால் கிராம மக்களின் பேச்சு வழக்கில் இப்பிரதேசம் கரும்பாவளி. கரும்பாளி என்றே அழைக்கப்படுகிறது.

4.    ஆவணப்படத்தில் கரும்பாவாளியைப் பிரதான விடயப் பொருளாக எடுத்தாண்டது மட்டுமல்லாமல் வீராத்தை அமைத்துக்கொடுத்த ஏழு குளங்களும், ஆவரஞ்சிக்கற்களும் தண்ணீர்ப்பந்தல், வீராத்தை பயன்படுத்திய கிணறு ஆகியனவும் குறித்துக் காட்டப்படுகின்றன.

5.    கொட்டாளிக்குளம் - வல்லை நாற்சந்தி

6.    கட்டுக்குளம் - வல்வை நாற்சந்தி அம்மன் கோயில் பின்புறம்

7.    கல்வியன்காட்டுக்குளம் - வல்லை பழைய ஆஸ்பத்திரி பின்புறம்

8.    புதுக்குளம்  - வல்லை உப்புவெளிச்சந்தி

9.    முனியப்பர் கோயிலடிக்குளம் - வல்லை முனியப்பர் கோயில் எதிரில்

10. நெசவு சாலைக்கு முன்பாக உள்ளகுளம்

ஆகியனவும் வீராத்தை அமைத்துக் கொடுத்தவை என ஆவணப்படத்தில் குறிப்பிடப்படுகின்றன.

            குறித்த குளங்களும், ஆவுரோஞ்சிக்கற்களும் மந்தைகளின் பயன்பாட்டிற்காகவும், ஏனைய கிணறு, சுமைதாங்கி, தண்ணீர்பந்தல் என்பன பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் அமைக்கப்பட்டிருந்தன என்ற தகவலையும் இந்நூலின் ஊடாக அறிய முடிகிறது.

            கரும்பாவளியில் கண்டபிடிக்கப்பட்ட ஆவரஞ்சிக்கல்லின் எழுத்தமைதி கொண்டு பேராசிரியர் அவர்கள் 200 வருடங்களுக்கு முற்பட்ட காலத்துக்குரியது எனவும். அக்காலத்தில் பொருளாதார சுதந்திரம் கொண்டவளாக பெண் விளங்கியபடியால் தானதருமங்களைப் பேணுவதற்கு இவ்வாறான ஒரு முயற்சியைச் செய்துள்ளமை முக்கியமானது எனவும் குறிப்பிடுகிறார்.

            25 நிமிட இவ் ஆவணப்படம் கரும்பாவளி தொடர்பான மரபுரிமைச் சின்னங்களைப் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு வரவும், பேணிக் காக்கவும், பயன்பாட்டுக்கு உட்படுத்தவும் கவனத்தைக் கோருவதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அழகியல் பூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இயற்கையாலும் மனிதர்களின் கவனமின்மையாலும் வரலாறு பண்பாடு தொன்மை பற்றிய தெளிவின்மையாலும் அழிந்து கொண்டிருக்கிறது என வலியுறுத்துவதோடு எமது மரபுரிமைச் சின்னங்களைப் பேணவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்  காட்டுகிறது  எனவும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 

            குணேஸ்வரன் அவர்களின் இந்த நூல், இளம் படைப்பாளிகளை எமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே பிரபலமான பல படைப்பாளிகளின் எழுத்துக்களை நாம் வாசிக்கத் தவறியிருக்கிறோம். அவற்றை எடுத்தியம்புகிறது. பெரும்பாலானவை அவ்வப்போது எழுதிய கட்டுரைகளாகவே அமைந்திருந்தாலும் பலருக்கும் பயன் மிக்கனவாக அமைந்துள்ளன. நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

நன்றி : https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6371%3A2020-12-19-02-38-39&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62&fbclid=IwAR2Soq2UxjXyPS1dZikSpVm37rjWhLwd7v3ddIKG6Ixad_QhQ9voaBEtBLc

---

Friday, December 4, 2020

மண்ணில் மலர்ந்தவை – புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு

 - இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன்  செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும். இவர் இதுவரைக்கும் “மூச்சுக்காற்றால் நிறையும்வெளிகள்” (2008), “அலைவும் உலைவும்” (2009), “புனைவும் புதிதும்” (2012), “உள்ளும் வெளியும்”(2014), “இலக்கியத்தில் சமூகம் – பண்பாடு சார் கட்டுரைகள்” ( 2016), “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” (2016), ஆகிய ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். “மண்ணில் மலர்ந்தவை – இலக்கியக் கட்டுரைகள்” இவரது ஏழாவது நூல் வரவாகின்றது. இவரது தொடர்ச்சியான தேடலுக்கும் ஓய்வற்ற செயற்றிறனுக்கும் இந்நூல் வரவுகளே சான்று பகருவனவாகும்.

இவரது அண்மைய நூல்வரவான இந்த “மண்ணில் மலர்ந்தவை” தொகுப்பானது குந்தவையின் பாதுகை பிடித்த சிறுகதை, அ. முத்துலிங்கத்தின் அம்மா பாத்திர வார்ப்பு, இந்த மண்ணின் கதைகள் – ஆறாத காயங்கள், கி. செ துரையின் சுயம்வரம் நாவல், அருளரின் லங்காராணி, சந்தங்களால் இணையும் வாழ்வு – இராஜேஸ்கண்ணனின் கவிதைத் தொகுதி குறித்து, மட்டைவேலிக்குள் தாவும் மனசு – சிவசேகரனின் கவிதைகள், மணல் கும்பி – ரஜிதாவின் கவிதைகள், கவி கலியின் இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் பற்றிய கட்டுரைகள், அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையாவின் பன்முக ஆளுமை, கலாநிதி ஆ. கந்தையாவின் ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல், கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள், எழுத்தாளர் கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர் படைப்புகள் நூல் அறிமுகம், கலாநிதி செ. யோகராசாவின் தேடல், வசீகரன் சுசீந்திரகுமாரின் கரும்பாவளி ஆவணப்படம் என 2005  தொடங்கி 2019 வரையான காலப்பகுதிக்குள் எழுதப்பட்ட 18 கட்டுரைகளை உ ள்ளடக்கியதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.நூலுக்கான அணிந்துரையை எழுத்தாளர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் எழுதியுள்ளார். இவ்விலக்கியக் கட்டுரைத் தொகுப்பானது தனித்து இலக்கியப் பிரதிகளைப் பற்றிய நோக்காகக் குறுகிவிடாமல் படைப்பாளிகளைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், ஆவணப்படம் பற்றிய பார்வை, தனிமனித ஆளுமை குறித்த பார்வை என பன்முக நோக்காக விரிந்திருப்பது எடுத்துக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

குணேஸ்வரன் நுனிப்புல் மேயும் ஒரு மேலோட்டமான நோக்குநரல்ல என்பதற்கு ஆதாரமாக நான் அண்மையில் வாசித்த அவரது ஆய்வுக் கட்டுரை ஒன்றைக் குறிப்பிடலாம். “மூத்தோர் வழிபாடாக நடுகல் – சங்கப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்ட பார்வை” என்ற கட்டுரையை ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த அர்ப்பணிப்போடும் தீவிரத்தோடும் ஆழ்ந்து நோக்கி செயற்றிறனாற்றியிருக்கிறார் என்பதை உணர்த்தியது. இவரது முன்னைய நூல் வரவுகளைப் போலவே இந்த மண்ணில் மலர்ந்தவை இலக்கியக் கட்டுரைகள் நூல் வரவும் இதனை நிரூபணம் செய்கிறது. இது அவர் அவ்வப்போது எழுதிய சிறிய கட்டுரைகளாக இருந்தாலும் இந்நூலினது ஒவ்வொரு உள்ளடக்கமும் எளிமையான மொழிநடையில் வலுவான நோக்கில் அமைந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடவேண்டியதாகும். இது குணேஸ்வரனின் தனித்துவம் எனக்கூறுவதும் மிகப் பொருத்தமானது. தவிரவும் உணர்வு தோய்ந்து எழுதுவதும் செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்தலுங்கூட இவரது தனித்துவ இயல்பாகக் கருதுவதில் தவறிருக்க முடியாது.

ஆரம்பகட்டப் படைப்பாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்திலும் அவர்களுக்குப் படைப்பூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் மேற்கூறியவாறே தனது செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக “மட்டைவேலிக்குள் தாவும் மனசு – சிவசேகரன் கவிதைகள்”, “இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் மணல் கும்பி கவிதைகள்”, “மண்ணுடன் பிணைந்த வாழ்வு – கவி கலியின் இன்னுமொரு தேசம்”, வசீகரனின் “கரும்பாவளி ஆவணப்படம்”, என்பவற்றைக் குறிப்பிடலாம்.

உணர்வு தோய்ந்தும் உணர்வைத் தொற்ற வைத்தும் எழுதும் இயல்பிற்கு எடுத்துக்காட்டாக “சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்”, எழுத்தாளர் கண. மகேஸ்வரன், வே. ஐ. வரதராசன் என்னும் உள்ளடக்கங்களைக் குறிப்பிடலாம். இதில் என்னை நெகிழ வைத்த பகுதியொன்றை இங்கே எடுத்துக் காட்டுவது பொருந்தும்.           “ … இன்று (20.06.2015) காலை அவரது உயிரற்ற உடலின் முன்னால் தலைமாட்டில் திருமறைக் கலாமன்றம் நடாத்தவிருக்கும் மூன்றுநாள் இலக்கிய விழாவுக்கான அழைப்பிதழ் அவரின் முகவரியுடன் இருந்ததையும் கண்டேன். உள்ளங் கலங்கிவிட்டது…” (பக்.66) வே.ஐ.வரதராசனை கலைமுகத்திற்காக நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பதையும் அதுவே அவரது முதலுங் கடைசியுமான நேர்காணல் என்பதையும் இவ்விடத்தில் கனக்கும் மனதுடன் பதிவு செய்கிறேன்.

குந்தவையின்  “பாதுகை” சிறுகதை மதிசுதாவினால் குறும்படமாக்கப்பட்ட தகவலை இத்தொகுப்பின் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதற்காகக் குணேஸ்வரனுக்கு மனமார்ந்த நன்றி.

தனிமனித ஆளுமை குறித்து சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதற்கு “அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா பன்முக ஆளுமை” , கலாநிதி செ. யோகராசாவின் தேடல்”  எனுமிரண்டும் நல்ல எழுத்துக்காட்டுகளாகும். இதிலும் கவிஞர் மு. செல்லையா பற்றிய பதிவு தனித்துக் குறிப்பிடவேண்டியதாகும்.

இலக்கியச் செயற்பாடுகள்  அனைத்தும் உறைநிலையில் இருக்கும் இவ்வனர்த்த காலத்தில் இந்நூல் வரவானது இலக்கியச் செயற்பாட்டாளர்களின் மீளெழுச்சியைத் தூண்டும் வகையிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் புத்துணர்வளிப்பதாக அமைகின்றது. காலத்தின் தேவையுணர்ந்து இந்நூலை வெளியிட்ட புத்தக் கூடத்திற்கும் குணேஸ்வரனுக்கும் ஈழத்து இலக்கிய உலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது.

நன்றி :     உதயன் & சஞ்சீவி 29.11.2020

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6305%3A2020-11-13-07-57-00&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62&fbclid=IwAR39iZT_30B-mJIeymUpPs-NFqO05lJ9gi3GQxrizFI-Awe1yfy43xvlPLE

https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/11/92637/?fbclid=IwAR3Gf0RkCtdpo89Qr0n41mQVw2jgzoHJ4ky4RWejdjAiLECt0OT9Vtfa4So


Thursday, August 28, 2014

உள்ளும் வெளியும் - நூல் மதிப்பீடு

ந. சத்தியபாலன்

நன்றி : கலைமுகம் 58

Friday, May 23, 2014

உள்ளும் வெளியும் - ஆய்வின் பரவசம்- இராகவன்


ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.

இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை - இதுவரை வெறும் மேலோட்டமான தகவலாகத் தெரிந்திருந்த மண்மனம் என்ற நாவல் பற்றிய இக்கட்டுரையும் உள்ளடக்கமாக வரும் நாவலின் பக்க எடுத்துக்காட்டுக்களும் முக்கியமானவை. இன்றைக்கு நவீன புலம்பெயர் இலக்கிய வெளியில் அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, கலாமோகன், பார்த்தீபன், சக்கரவர்த்தி போன்றோர் தவிர்க்கவியலாத முக்கியத்துவமுடையோராகிவிட்டனர். இவர்களையெல்லாம் ஈழத்தில் முறையாக அறிமுகம் செய்து வைத்து வாசிக்கத் தூண்டியவர்களுள் குணேஸ்வரனுக்கு முக்கிய பங்கிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதேபோல் அம்;மா, எக்ஸில், உயிர்நிழல், தூண்டில், கூர் எனப் பெரும்பாலான புலம்பெயர் சிற்றிதழ்களை எமக்குப் பரிச்சயப்படுத்தியவரும் இவர் என்பது கவனிப்புக்குரியது.

பொதுவாக வாசகனை இருவகைப்படுத்தலாம். ஓன்று தூண்டல் அவசியமற்ற வாசகன். இரண்டாவது தூண்டல் அவசியமான வாசகன். தூண்டல் அவசியமற்ற வாசகன் இயல்பாகவே எவரது தூண்டுதலுமின்றித் தேடலில் ஈடுபட்டு வாசிப்பவன். தூண்டல் அவசியமான வாசகன் எவராவது தூண்டிக் கொண்டிருந்தால் மட்டுமே தேடலில் ஈடுபட்டு வாசிப்பவன். இந்தவகை வாசகனைத் தூண்டுவதற்கு ஏதுவாயமைவதுதான் புனைவுசாராத ஆய்வு நிலைப்பட்ட பிரதியாகும். இந்த வகையில் குணேஸ்வரனின் உள்ளும் வெளியும் முக்கியத்துவம் பெறுமொன்றாகும்.

“ஈழத்து இலக்கியமும் இரசனையும் - நாவல்”, “அண்மைக்கால இலங்கைப் படைப்புக்களில் எஸ். ஏ உதயனின் நாவல்கள்” எனுமிரு கட்டுரைகளும் நன்கு பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆரம்பநிலை வாசகனுக்கு ஏற்றவிதத்தில் மிக எளிமையாக வரையப்பட்டுள்ளன. புனைவியல்பாங்கான மொழிப்பிரயோகத்திற்கான சாத்தியம் குறைவாக உள்ளபோதிலும் அதை இயன்றளவுக்குச் சாத்தியமாக்கியெழுதியுள்ளமை குணேஸ்வரனைப் பிற ஆய்வாளர்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுத்தித் தனித்துவமுடையவராக எடுத்துக்காட்டப் போதுமானது.
‘கூடாரநிழல்’ கவிதைத் தொகுதி குறித்தும் “உயிரின் வாசம் - பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” கவிதைத் தொகுதி குறித்தும் எழுதப்பட்டுள்ள இரு கட்டுரைகளும் ஆய்வெழுத்துக்களல்லவென்றபோதிலும் துயரம், வலி, வேதனையைக் கவியச்செய்யும் விதத்தில் உணர்வு தோய்ந்து எழுதப்பட்டுள்ளன.


அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, ஆதவன் முதலானோரின் நாவல்ககளிலிருந்து உயிர்த்துடிப்பான பக்கங்களைத் தேர்வுசெய்து இணைத்துள்ள விதம் வெகு நேர்த்தியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஈழத்தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் தமிழ்க்கல்வி” செம்மையான எதிர்வுகூறலோடும் முறையான வகைப்பாட்டுடனும் நோக்கப்பட்டிருப்பது அதன் இயங்குதிசைக்கு வலுச்சேர்த்துள்ளது.

பொதுவில் ஆய்வெழுத்துக்கும் ஆரம்பநிலை வாசகனுக்குமிடையில் ஓர் இடைவெளியிருக்கும். உள்ளும் வெளியும் அந்த இடைவெளியை நீக்கியுள்ளது. இந்த நீக்கம் ஓர் ஆய்வாளனாக மட்டுமன்றி ஒரு படைப்பாளியாகவும் குணேஸ்வரன் அடைந்துள்ள வெற்றி என்றே சொல்லவேண்டும். இந்நூலின் உள்ளடக்கத்திற்கு ஒத்திசைவாக அமையும் கைலாசநாதனின் முகப்போவியமும் குறிப்பிடத்தக்கதொன்று.
நன்றி : சமகாலம், 2014 மே 16-31
---

Sunday, March 16, 2014

“உள்ளும் வெளியும்” நூல் வெளியீடு : பார்வையும் பதிவும்- லெனின் மதிவானம்

கடந்த வாரம் கிளிநொச்சி சென்றிருந்தேன். கவிஞர் கருணாகரனைச் சந்திப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நண்பர் குணேஸ்வரனின் ‘உள்ளும் வெளியும்’ நூல் வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்நிகழ்வில் என்னையும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

இந்தச்செய்தி எனக்கு மகிழ்ச்சி தருவதாகவே இருந்தது. நண்பர் குணேஸ்வரனை 41 வது இலக்கியச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது சந்தித்தேன். அவரது கருத்துக்கள், சிந்தனைகள் மக்களை ஒட்டியதாக கிளைபரப்பியிருந்ததை அறிய முடிந்தது. இவ்வம்சம் இயல்பாகவே அவர்மீதும் அவரது எழுத்துக்கள் மீதுமான தொற்றை ஏற்படுத்தியிருந்தது. எனவே இவரது நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

அன்று காலை (02.03.2014) தோழர் கருணாகரன் சரியாக எட்டுமணிக்கு நண்பர் ஒருவரின் வாகனத்தில் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் எங்களது உரையாடல்கள் இயல்பாகவே 41 வது இலக்கியச் சந்திப்பு குறித்ததாகவே அமைந்திருந்தது. இச்சந்திப்பு ஏற்படுத்திய தாக்கம், எதிர்காலத்தில் செய்யக்கூடியவை, செய்ய வேண்டியவை குறித்தும் அதற்கான பொறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலின் காரணமாக கூட்ட மண்டபத்தை எப்படி அடைந்தோம் என்பது தெரியாதிருந்தது. கூட்டத்திற்கு 15 நிமிடத்திற்கு முன் அங்கு சென்றுவிட்டோம். இக்கூட்டம் யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் நடைபெற்றது. மண்டப வாயிலை அடைந்தபோது சிரேஷ்ட எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன், அநாதரட்சகன், விமலன், தபேந்திரன் போன்றோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. அதிலும் நீண்ட இடைவெளிக்குப்பின் திரு சி. வன்னியகுலம் அவர்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அவர் ரூபவாகினியில் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற காலங்களில் எனக்கும் அவருக்குமான உறவு மிக நெருக்கமாக இருந்தது. கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் குறித்து பல கருத்தாடல்கள் எம்மிடையே நடந்திருக்கின்றன. அந்த வகையில் அவரது சந்திப்பும் அன்பான அரவணைப்பும் நம்பிக்கை தருவதாக இருந்தது. இந்த சந்திப்புகளிடையே என் உள்ளமும் கண்களும் கூட்டத்தினரிடையே ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தது. அவர் எல்லோரும் மனமாரப் பாராட்டும் ஒரு மனிதராகவும் அதேவேளையில் தனது இலட்சியங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு சான்றாகவும் அமைந்த எழுத்தாளர் தெணியான் ஆவார். அவரது மனிதாபிமானம் போற்றத்தக்கது. இளம் எழுத்தாளர்கள்பால் மிகுந்த அன்பும் பரிவும் கொண்டு அவரது படைப்புக்களைப் படித்து அவர்கள் முன்னேற ஊக்கமும் ஆக்கமும் அளிப்பவர். அவரது இத்தகைய தன்னலமற்ற தொண்டின் விளைவாக இன்று பல அருமையான எழுத்தாளர்கள் உருவாகி வந்துள்ளனர். அந்த வரிசையில் என்னையும்கூட உள்ளடக்கிக் கொள்கிறேன். மிகக் குறுகிய நேரத்தில் அவரோடு ஏற்பட்ட உரையாடல் வாழ்வில் எதிர்ப்படும் சோதனைகளுக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற திராணியை எனக்களித்தது.

குறித்தநேரத்தில் நூல் வெளியீட்டு விழா தொடங்கியது. இந்நிகழ்வில் உரையாற்ற வந்திருந்த அ. சிறீகரன் தனது உரையில் :
குணேஸ்வரன் ஒரு பின்தங்கிய சமூகத்தின் கண்களைத் திறக்கும் கல்விப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது தன்னலமற்ற சேவையின் காரணமாக வன்னிப் பிரதேசத்தில் ஒரு புதிய தலைமுறை கல்வியில் முன்னேறி வந்துள்ளதை நான் அறிவேன் என அவரது கல்விப்பணி குறித்துக் குறிப்பிட்டார். இவர் ஒரு பிரதிக்கல்விப் பணிப்பாளர் என்பதற்கு அப்பால் மானுடத்தை நேசிக்கின்ற கல்வியியலாளராக மனிதனாக நிற்பதாகவே அவரது உரை அமைந்திருந்தது.

தலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் :
இந்நூலாசிரியர் ஒரு படைப்பாளி, கவிஞர், பதிப்பாளர், விமர்சகர், அதற்கு அப்பால் சமூக செயற்பாட்டாளராக தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் இயங்கி வருகின்றவர். குறிப்பாக அண்மைக்கால இலக்கிய செல்நெறிகளில் ஒன்றான புலம்பெயர் இலக்கியம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றவர். அவரது பல்பரிமாணங்களின் வெளிப்பாடாகவே இந்நூல் அமைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வெளியீட்டுரை ஆற்றிய இ. இராஜேஸ்கண்ணன் குணேஸ்வரனின் ஆய்வுகளின் முக்கிய கூறாக திகழ்வது அவர் இலங்கையில் எழுந்த தமிழ்த்தேசியப் போராட்டத்தின் விளைவாக அது ஏற்படுத்திய புலம்பெயர்வு வாழ்க்கையையும் போர்க்காலச் சூழலில் எமது நாட்டில் வாழ்கின்ற தமிழர்களினுடைய வாழ்க்கை அம்சங்களைப் பிரதிபலிப்பதாக அவரது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. மிக ஆழமான தேடுதலை மேற்கொண்டு வருகின்ற அவரது எழுத்துக்கள் அவர் கூற வருகின்ற விடயங்களை வாசகர்கள் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஆதவனின் மண்மனம் என்ற நாவல் குறித்த கட்டுரையைக் குறிப்பிடலாம். புலம்பெயர்வு வாழ்வு குறித்து எழுந்த இலக்கியங்களில் இந்நாவலுக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இன்று இந்நாவலைப் பெறமுடியாதுள்ளது. இவ்வாறானதோர் சூழலில் இந்நூலாசிரியரின் கட்டுரையை வாசிக்கின்றபோது ‘மண்மனம்’ என்ற நாவலை வாசித்த அனுபவமும் அது பற்றிய விமர்சனத்தை தரிசித்த அனுபவமும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றது. அந்த வகையில் நூலாசிரியரின் எழுத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

தொடர்ந்து மதிப்பீட்டுரை வழங்கிய கருணாகரன் இந்நூலை முன்னிறுத்தி இன்றைய பண்பாட்டுச் சூழலில் வாசிப்பு குறித்த ஒரு பார்வையை முன்வைத்தார். ஒரு வாசிகசாலையை இழந்த சமூகம் அதற்காக கண்ணீர் விட்டது. எமது பண்பாடுகள் அழிவுறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்காகவும் கண்ணீர் விடப்பட்டது. இந்த உணர்வுகள் யாவும் உண்மையாக இருந்தால் நாங்கள் மானுடத்தை நேசிக்கின்ற உணர்வுகள் உண்மையானவையாக இருந்தால் இன்று நம் மத்தியில் வெளிவருகின்ற நல்ல நூல்களை வாசிக்கின்ற உணர்வுள்ளவர்களாகவும் நாங்கள் இருக்கவேண்டும். நமது சூழலின் வாசிப்பு என்பது பல வகையில் சிதைவுக்குள்ளாகி வருகின்றது. இவ்வாறான சூழலில் இத்தகைய நூல்கள் வெளிவருவது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இந்நூலின் முக்கியமான அம்சம் பேசாத பொருளைப் பேசத் துணிகின்றது. உதாரணத்திற்கு ஷோபாசக்தியின் படைப்புகள் புலம்பெயர் இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. இருப்பினும்கூட ஷோபாசக்தியை நடுநிலையாக நோக்குகின்ற ஆய்வுகள் நம் மத்தியில் உள்ளனவா? அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் அவ்வாறான படைப்புகள் குறித்து நூலாசிரியர் பேசத் துணிந்திருப்பது வரவேற்கத்தக்கது என்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

இலங்கையில் இனமுரண்பாட்டினடியாகத் தோன்றிய குறுந்தமிழ்த் தேசியமும் பேரினவாதமும் சமூக முரண்பாடுகளையும் மோதல்களையும் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்தச் சூழலில் வாழ்வின் பன்முகத் தன்மையை முழுமையாக காரண காரிய தன்மையுடன் எடுத்துக் கூறக்கூடிய இலக்கியங்கள் வரவேண்டியுள்ளன. நடந்து முடிந்த தமிழ்த்தேசியப் போராட்டத்தில் தமிழ் பாசிசத்தின் பரிமாணத்தை பொதுமக்கள் அனுபவித்து உணர்ந்திருந்தபோதிலும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்கள் நேர்மையாக முன்னெடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மீண்டும் குறுந்தமிழ்த்தேசிய அரசியலுக்குள் முடங்குவதாக அமைந்திருக்கின்றது. இந்த சூழலில் தமிழ் தேசியத்தின் குறுகிய அரசியல் போக்குகளை விமர்சித்தால் தாங்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டுப்போவோம் என்ற அச்சம் ஷோபாசக்தி முதலானோர் பற்றிய விமர்சனங்கள் ஆய்வுகள் மதிப்பீடுகள் தோன்றாததற்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இந்த மௌனம் இந்நூலாசிரியரில் ஓரளவு கலைந்துள்ளது எனலாம்.

இவ்விடத்தில் இன்னுமொரு குறிப்பையும் கூறிவைத்தல் பொருத்தமானதாக இருக்கும். புலம்பெயர் இலக்கியம் என்ற சொல் சில காலங்களில் வழங்கி வந்திருப்பினும் மிகச் சமீப காலங்களில்தான் அது பரந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆன்மாவைத் தொலைத்து வெறும் யந்திரமயமாக்கப்பட்ட வாழ்க்கைச் சூழலில் தமக்குக் கிடைக்கின்ற சிறிய ஓய்வுநேரங்களைக்கூட இந்திய சினிமாக்களில் தொலைத்து நின்றனர். இவ்வாறான சூழலிலும் அவர்கள் தமது கல்வியையும் உழைப்பையும் முன்னிறுத்தி தமக்கு அவசியமாக உழைப்புடன் (சில நேரங்களில் உபரி உழைப்பை இழந்தபடியே) முழுநிறைவான வாழ்வை இருப்பை கட்டமைப்பதற்கான சமூகச் செயற்பாடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். மறுபுறத்தில் தாம் இழந்து வந்த சொந்த பந்தங்களின் வாழ்வு குறித்தும் அவர்களின் சமூக மாற்ற போராட்டங்கள் குறித்தும் கணிசமான அளவு பங்களிப்பை இந்த புலம்பெயர் தமிழர்கள் வழங்கியுள்ளனர். இந்த உதவிகள் எந்தளவு இலங்கைவாழ் மக்களை வந்தடைந்தன என்பது முக்கியமான கேள்விதான். இந்த புலம்பெயர் வாழ்வு குறித்த இலக்கியம் வெறும் சொந்த மண் குறித்த புலம்பலாக மட்டுமன்றி புதிய பண்பாட்டுக்கான செயற்பாடுகளையும் முன்னிறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. குணேஸ்வரனின் இந்த நூல் இத்தகைய செயற்பாடுகளுக்கான விவாதத்தையும் தொடக்கி வைக்கின்றது.

இந்நூலை ஒட்டுமொத்தமாக தொகுத்து நோக்குகின்றபோது இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் சமகால வளர்ச்சி செல்நெறியை இந்நூல் தொடமுனைந்துள்ளது. நமது இலக்கியச் சூழலில் இதுவரை பேசப்படாத இலக்கியங்கள் குறித்து பேசுகின்றது. மறுபுறத்தில் உருவத்தை மாத்திரம் பரிசீலிப்பதோடு நின்றுவிடாது உள்ளடக்கத்திலும் அது அக்கறை காட்டுகின்றது. வெளிப்படையாகக் கூறுவதாயின் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளில் உருவவாதச் சித்தாந்த நோக்கின் அழுத்தத்தைவிட யதார்த்த சித்தாந்தத்தின் அழுத்தம் அதிகம் என துணிந்து கூறலாம். நமது கலை இலக்கிய சூழலில் ஓயாத உழைப்பின் மீதும் அதன் உயிர்நாடியான சமூகத்தின்மீதும் நம்பிக்கை கொண்டு பொதுமக்களின் நலனிலிருந்து அன்னியமுறாத எழுத்துக்களைத் தருகின்றவர் குணேஸ்வரன் என்பதற்கு இந்நூல் ஆதாரமாக அமைந்திருக்கின்றது. அதற்காக இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் யாவும் அப்படியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதல்ல. வாழ்வு குறித்த இந்நூலாசிரியரின் பார்வையிலும் கருத்திலும் தத்துவ சிந்தனையிலும் சிற்சில முரண்பாடுகள் உண்டு. எனினும் பொதுமக்களை நோக்கி ஒரு புதியதொரு சித்திரத்தை ஆக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இந்நூலில் உள்ளன. இதுகுறித்து காத்திரமான விமர்சனங்கள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். பணிவுடனும் பண்புடனும் நமது குறைநிறைகளை விமர்சித்துக்கொள்ள வேண்டும். நமது யதார்த்த நிலைமைக்கு ஏற்ப எமது எதிர்காலவியலை உருவாக்குவதற்காகவேனும்.

நன்றி : தினக்குரல், 07 மார்ச் 2014 (கொழும்புப் பதிப்பு)
---