Friday, October 8, 2010

நூல் மதிப்புரை – குறிஞ்சிநாடன்




நூல் : அலைவும் உலைவும்
ஆசிரியர் : சு. குணேஸ்வரன்
வெளியீடு : தினைப்புனம்
விலை : ரூபா 200/ =

சுப்பிரமணியம் குணேஸ்வரன் அவர்கள் தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் புலம்பெயர் இலக்கியம் தொடர்பில் ஆராய்ச்சி செய்து முதுதத்துவமாணி பட்டம் பெற்றவர். இலக்கிய ஆய்வில் பெரும் விருப்புடையவர். தேடலை முழு மூச்சாகக் கொண்டு உழைப்பவர்.
துவாரகன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி, ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற நூலை வெளியிட்டு வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றவர்.
புலம்பெயர்ந்து இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள், பொருளில் நாட்டம் கொண்டோ, சொகுசான வாழ்வைத் தேடியோ செல்லவில்லை. ஈழத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் தத்தமது உயிரைக் காத்துக் கொள்ள புறப்பட்டவரே. இவ்வாறு இந்தியா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, இத்தாலி, சேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலிய நாடுகளில் புலம்பெயர்ந்து தங்களுடைய புதிய அனுபவங்களையும், இன்ப துன்பங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்கள்.
இவர்களது இலக்கியம் புலம்பெயர் இலக்கியம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம், புகலிட இலக்கியம் என பலவாறு அழைக்கப்படுகிறது.
இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை கலைமுகம், செங்கதிர், தினகரன், ஞானம், வீரகேசரி, புதிய தரிசனம் முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்தவை. புலம்பெயர்ந்தோர் சென்ற இடங்களில் தாம்பட்ட கஷ்டங்கள், ஏற்றுக்கொண்ட வசைமொழிகள், பெண்கள் அனுபவித்த துயரங்கள் என்பன பற்றி பேசுகிறது என்கிறார் ஆசிரியர். புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர் சஞ்சிகைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ் மொழி பிரதேசச் செல்வாக்கு, என்பன பற்றியும் விபரிக்கப்படுகிறது என்கிறார். சுமதிரூபனின் ‘யாதுமாகி நின்றாள்’, ஷோபாசக்தியின் ‘தேசத்துரோகி’, இரவியின் ‘காலம் ஆகி வந்த கதை’, ஆழியாளின் ‘துவிதம்’, இன்னும் ஆசி. கந்தராஜா, கலாமோகன், கருணாகரமூர்த்தி போன்றோரின் ஆக்கங்களை விமர்சனப் பார்வையில் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
பிரயோசனமான நூலை நமக்குத் தந்துள்ள குணேஸ்வரனைப் பாராட்டலாம். இந்நூல் பல்கலைக்கழக மாணவர்க்கும் ஆய்வை மேற்கொள்வோருக்கும் உகந்த நூலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி :- ஞானம், செப்ரெம்பர் 2010, ப.47

No comments:

Post a Comment