Friday, December 18, 2009

துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ தொடர்பாக…




அன்பின் துவாரகனுக்கு;

திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வரும் எமது நகரத்தைப் பற்றிய வரைபடத்தை எப்படிக் கீறுவது? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். ‘எங்களுக்கு உவப்பானதை மட்டும் பார்!’ எங்களுக்கு உவப்பானதை மட்டும் பேசு!’ ‘எங்களுக்கு உவப்பானதை மட்டும் கேள்!’ ‘எங்களுக்கு உவப்பானதை மட்டும் எழுது!’ என மறைகரங்கள் நமக்குக் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் சேணம் பூட்டிய குதிரைகளாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது நமது போக்கும் வரத்தும்.

முதுகுமுறியப் பொதிசுமந்து நாமெறியும் பெரு (அனல்) மூச்சால் நிறைகின்றன வெளிகள். ஓவ்வொரு கணமும் நாம் கேள்விப்படும் செய்திகள் நமக்கு உவப்பானவையல்லவெனினும் நாம் அவற்றைப் பொருட்படுத்துவதில்லையெனப் பாவனை செய்தாலும் பொருட்படுத்தாமலிருக்க முடிகிறதா? நிச்சயமாக உங்களால் முடியவில்லை ‘குதித்தோடும் மனதிலிருந்து மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ வரை உங்கள் இதயத்துடிப்பு வேகப்படுவதை> உடலிலிருந்து அனல் வீசுவதை> உடல் விறைப்பதை> உறங்காமல் தவிப்பதை ஒரு சக பயணியாக என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. முன்தோன்றிய மூத்தகுடிப்பெருமையை விலக்கி விட்டு எமது நீள் துயர வரலாற்றின் பக்கங்களை எச்சில் தொட்டு தொட்டுப் புரட்டினால் நாங்கள் முதுகுமுறியப் பொதிசுமக்கும் ஒட்டகங்கள்.

நாங்கள் எப்போதுமே முதுகுமுறிய பாரம் சுமக்க தாயாராகவேயிருக்கிறோம். சாட்டையும் விரட்டும் இலாவகமும் மறைகரங்களிடம் இருக்கும்வரை நாமும் சுமந்து கொண்டே இருப்போம்; செல்லும் தூரமோ பொதிகளின் அளவோ எதைப்பற்றியும் மறைகரங்கள் கவலை கொள்வதில்லை. சுமக்கப்போவது நாங்கள்தானே சுமந்து சுமந்து நாசித்துவாரங்களிலிருந்து நுரை தள்ள

“மூச்சுக்காற்றால் நிறைகின்றன வெளிகள்
வாயும் காதும் பிருஷ்டமும் என
உடலத்தின் ஓட்டைகளை அடைத்து விட்டு
இரண்டு கண்களையும் தள்ளிக் கொண்டு
கட்குழிகளிலிருந்து
குருதியுடன் வெளிக்கிளம்புகிறது மூச்சுக்காற்று.
கண்கள் மட்டும்
இருபெரும் முட்டைகள்போல்
நரம்புகளுடன் முன்னால்
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன”

இவற்றையெல்லாம் நீங்கள் உங்களுக்காக மட்டும் எழுதியதாகக் கூறி உங்களை ஒரு சுயநலவாதியாக யாரும் எளிதில் ஒதுக்கி விட முடியாது. ஒரு வசதிக்காக இதைக் கவிதைத் தொகுப்பென்று நீங்கள் சிலவேளைகளில் குறுக்கிவிடலாம். இது குறுகிய வரையறைக்குள் உள்ளடக்கப்படகூடிய தொன்றல்ல.

மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரிலும் வடக்கின் வசந்தம் என்ற பெயரிலும் திட்டமிட்டுப் படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வரும் நகரத்து மக்களின் இருப்புக் குறித்த அச்சம்> கழிந்துவிட்ட வாழ்நாள்களின் மீதான ஏக்கம்> கழிந்து கொண்டிருக்கிற வாழ் நாள்களின்மீது கவியும் பீதி> இருளைப் புணர்ந்து நெருங்கிக் கொண்டிருக்கும் எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கையென இவை எல்லாவற்றையும் குறித்து ஓலமிடும் மக்களின் பிரதிநிதியாக உங்களை இனங்காண்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. அது தவிர்க்க முடியாததுங்கூட

நீங்கள் பதிவு செய்தவற்றில் என்னை உச்சமான அவதியோடு பாதித்தது ‘புணர்ச்சி’ தான். ஓவ்வொரு வரிகளும் வேகமாக நகர்ந்து செல்கின்றன. (எவ்வளவு நிதானமாக நின்று நிறுத்தி வாசிக்கும்போது கூட) இது நமது சூழலின் சிதைவு குறித்த முக்கியமான பதிவு.

“மிக அவசர அவசரமாக
‘ஒவ்வொருவராக’ (இவ்வரி அவசியமில்லையெனத் தோன்றுகிறது)
புணர்ந்து கொள்கிறார்கள்
புனிதம் … அந்தரங்கம் எல்லாம்
அவசர அவசரமாக தன்னிலை இழக்கிறது.
மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்
சொறிநாய்களும்
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும் பார்த்துக் கொண்டிருக்க
எங்கும் புணர்ச்சி”

என நீங்கள் எழுதியிருக்கும் காலம் 2006. நான் இப்புணர்ச்சியை 2002 காலத்திலிருந்து வகைக்குறிப்பதில் உங்களுக்கு மறுப்பேதுமிருந்தால் தெரிவிக்கவும். மனிதர்களும் பாம்புகளும் வந்தால் (பூனையை ஏன் மறந்தீர்கள்?) ஒளிந்திருக்க வேறு வளைகளும் உண்டென்பதால் நீங்கள் இனி வெளியில் வாழ்வதை விட வெள்ளெலிகளுடன் வாழத் தீர்மானித்திருப்பதாகச் சொல்லும்போது நானுமொரு பூனையாக வாழ ஏங்கியவன்தானென்பதும் உங்களுக்கு நினைவுக்கு வரும். இரண்டிற்குமே யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்! என்ற உள்ளுணர்வு அன்றி வேறென்ன காரணமாக முடியும்.

மனிதர்கள் இல்லாத பொழுதுகள் - தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள் குதித்தோடும் மனசு> வண்ணத்துப் பூச்சிகளின் உரையாடல் என நீளும் அநேகமானவை சங்கேத மொழிகளோடு வழிந்தோடும் திரவமெனத் தம் வழியே செல்கின்றன. முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள் முதலான சில திரவமெனத் தம்வழியே வழிந்தோட எத்தனிக்கும்போது நீங்கள் அணையிடவும் முயன்றிருப்பது தெரிகிறது. இத்தொகுப்பில் அது பலவீனமாகத் தென்படவில்லையெனினும் இனிவரும் காலங்களில் கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான். ‘மனிதத்தைத் தேடி’ இத்தொகுப்பில் தனியனாகி ஒதுங்கி நிற்பதுபோல் உங்களுக்குத் தோன்றவில்லையா?

பிரம்படிபட்ட தொன்மத்தில் எல்லோர் முதுகிலும் விழுந்த அடியாக (மனிதத்தைத் தேடி… தவிர) எல்லாக் கவிதைகளிலுமே ஏதோவொரு விதத்தில் எம்மீதான அடக்குமுறைகளின் விம்பம் தெறிக்கத்தான் செய்கிறது. இன்னும் ஆழ்ந்து நோக்கினால் நீங்கள் இத்தொகுப்பின் வழியே ஒரு நேரில் எதிர்ப்பு இலக்கியத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதைக் காணமுடிகிறது. இது நமது அரசியல் எதிர்காலங்குறித்த முன்னுணர்வென்றே சொல்வேன். உரிமைகளை வென்றெடுப்பதற்கானதென இதுவரை நாங்கள் நம்பிவந்திருந்த வழிமுறை பொய்ப்பிக்கப்பட்டு நாளுக்கு நாள் வெவ்வேறான கருதுகோள்கள் முன்வைக்கப்படுவதை அவதானித்து வருகிறோம். அவை பெரும்பாலும் அதிகாரத் தரப்பினரை நெருக்கடிக்குள்ளாக்குவது போன்ற படிமத்தை நம்மிடம் தோற்றுவித்தும் வருகின்றன. அதிலொரு கூறாகவே மூச்சுக்காற்றால நிறையும் வெளிகளும் கருதப்பட வசதியளிக்கிறது.

முடிவாக இத்தொகுப்பும் அதிகாரத் தரப்பினரை விமர்சிக்கும் ஒரு கலைவடிவம்தான். கைலாசின் கோடுகள் மட்டுமே இப்பதிவுகளுக்கு ஒத்திசைவாகவுள்ளனவென்றும் தோன்றுகிறது. நான் இத்தருணம் கேட்டுக் கொள்வது இந்நேரில் எதிர்ப்பு இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். நாள்குறிப்புகளை எழுதுவதைப் போல.

இராகவன்
16.09.09

No comments:

Post a Comment