Sunday, July 19, 2009

சொற்கள் தவிர்க்கப்பட்ட நகரத்தின் கவிதைகள்

photo: thanks fine arts university of jaffna


விமர்சனம்


தீபச்செல்வன்

துவாரகன் கவிதைகள்:மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்

யாழ் நகரத்தின் கவிதைகளில் பா.அகிலன் கவிதைகள் முக்கியமானவை. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடிக்குள்ளான வாழ்வை அவர் எழுதியிருந்தார். மீளவும் நெருக்கடிகளின் பின்னிருந்து எழுதுதல் என்ற நிலை உருவாகியிருக்கையில் துவாரகனின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. சொற்களை எழுதுகிற போது வாழ்வையும் அதன் உள்ளிருக்கிற பெருந்துயரங்களையும் வெளிப்படுத்த முடிகிறது. சம காலத்தின் ஓரளவு சாத்தியங்களை எட்டிக்கொண்டிருக்கின்றன துவாரகன் கவிதைகள். துவாரகனின் கவிதைகளை வாசிக்கத் தொடங்குகிற பொழுது வெறுமையான வாழ்வின் எரிச்சலையும் நகைப்பையும் இலேசான சொற்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக யாழ் நகரச்சொற்கள் 2006இற்கு பிறகு மிகவும் சுருங்கத் தொடங்கிற்று. சித்தாந்தன், அஜந்தகுமார், ஹரிகரசர்மா மற்றும் துவாரகன் என குறிப்பிடத்தக்கவர்களால் மட்டுமே சாம்பல் நகரத்தின் துயர் குறித்து எழுத துணிய முடிந்தது. துவாரகனின் கவிதைகள் யாழ் நகரத்தின் மரணம் அச்சுறுத்துகின்ற ஏக்கத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பாக எதுவுமற்ற வாழ்வின் நாட்களை எதோ என்பதற்கேற்ற மொழியை கையாண்டு எழுதுகிறார்.

பொருளற்ற வாழ்வினை பேசுகிற பாங்கில் பிழைத்து நடக்கிற கையாலாகாத சனங்களின் மீதான கிண்டல்கள் கேலிகள் ஆதங்கங்கள் என்பன துவாரகனின் கவிதைகளின் பொதுவான தன்மையாக இருக்கின்றன. யாழ்நகரம் தனது முற்றுகையின் தலைவிதியில் நசிந்து வாழ்ந்து கொள்ளுவது இயல்பாக சொல்லப்படுகிறது. இனத்தின் இருப்பைபற்றி பேசுகிற அளவில் பிறழுகிற சமூகம் பற்றிய விமர்சனமும் “மூச்சுக் காற்றால் நிரையும் வெளிகள்” கவிதைகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக சுயநலன்களால் பலியிடப்படுகிற தேசத்திற்கும் வாழ்வுக்குமுரிய விடுதலையை துவாரகனின் எல்லாக் கவிதைகளும் பேசுகின்றன.

“முதலில்
இந்த விளக்கை அணைத்து வை
உன் உள்ளொளியை தூண்டு
காது கொடுத்துக் கேள்.
இன்னமும்
மனிதத்தைத் தேடி
இந்தத் தேசத்தின் ஆன்மா
துடித்துக் கொண்டேயிருக்கிறது”
(மனிதத்தை தேடி)

இந்த வகையிலான மனித இனம் குறித்து வருகிற விசனமும் மற்றும் தமிழ் இனம் குறித்த விசனமும் துவாரகனின் கவிதைப் பொருட்களாகும். மனிதர்களிடையிலான முரண்பாடுகளின் வெளிகளை ‘உனக்கும் எனக்குமான இடைவெளி’ என்ற கவிதை பேசுகிறது. எல்லா நிமிடங்களிலுமாய் இந்த இடைவெளி புகுந்து கொள்ளுவதையும் அதன் முடிவற்ற தன்மையும் அது தீர்ந்து போகிற மனவெளிகளையும் கூறுகிறார். வாழ்வுக்கான கூடுகளில் இந்த முரண்பாடுகள் முடிந்துபோவதாக துவாரகனின் கவிதை பேசுகிறது.

“ஆனாலும்
கூடு கலையாமல் இருப்பதற்காக
இந்த முரண்பாடுகளில்
அதிகமும் தீர்க்கப்பட்டு விடுகின்றன
ஏதோ ஒரு முற்றுப் புள்ளியில்”
(உனக்கும் எனக்குமான இடைவெளி)

இந்தக் கவிதை குறிப்பிடுவது போலவே முரண்பாடுகள் எதிலிருந்தோ தொடங்கி முடிவற்று முடிந்துபோகிறது. அது ஏதேனும் ஒன்றில் தங்கி இன்னொரு முரண்பாட்டிற்கு காத்திருப்பதை இயல்பான வாழ்வெனப்டுகிற தன்மையிலிருந்து புரியவைக்கிறது.
யாழ்ப்பாணம் காலனித்துவத்தின் வருகைகளால் அதிகம் சீரழிந்துபோயிருக்கிற நகரம். மனிதம் பற்றிய சிந்தனைகளை தின்றபடி காலனியப்பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சனங்களுக்கிடைலான உறவு வெளியை தின்று அவர்களை தனிமைப்படுத்துகிறது. அதனால் சமுகம் குறித்த மனிதர்கள் குறித்த நெருக்கத்தின் போதாமையினை பெரு அனுவத்தின் ஊடாக இந்தக் கவிதையில் துவாரகன் பேசுகிறார்.
“ஆனால்
எல்லோரும் பார்த்திருக்க
இன்னமும் எங்கள் தெருக்களில்
பரட்டைத் தலையுடன் கையேந்துகிறார்கள்
பள்ளி செல்ல மறந்த சிறுவர்கள்”
(யாழ்ப்பாணம் 2005)

யாழ்பபாணத்தில் மக்கள் தமது வீடுகளுக்கு அப்பால் சிந்திப்பதற்கும் வெளி வருவதற்கும் காலனியப்பொருட்கள் தடையாயிருப்பதை இந்தக் கவிதையில் கூறுகிறார் துவாரகன். மிகவும் பாரமான பொதிகளை சுமக்கிற எங்களது விதியினை குறிப்பிடுகிற இந்தக் கவிதை முக்கியமான கனத்தை வெளிப்படுத்துகிறது.

“செல்லும் தூரமோ
பெதிகளின் அளவோ
எதைப்பற்றியும் நீங்கள்
கணக்கிடத்தேவையில்லை
ஏனெனில் சுமக்கப்போவது நாங்கள்தானே”
(முதுகு முறிய பொதி சுமக்கும் ஓட்டங்கள்)

பொதிகளையும் பாரங்களையும் விட்டுச்செல்லுகிற முதுகு முறிகிற அனுபவங்களை நமது குணத்தை இந்தக் கவிதை பேசுகிறது. இயற்கை பற்றிய நாட்டத்துடனான கவிதைகளாக துவாரகனின் கவிதைகளை காலச்சுவடு புத்தக அறிமுகத்தில் ராஜமார்த்தான்டன் குறிப்பிகிறார் போர் நடக்கிற மண்ணில் இயற்கை மீதான நாட்டம் அல்லது அதில் ஏற்றிச் சொல்லுகிற கவிதைகள் இங்கு வருவதில்லை என்று குறிப்பிட முடியாது. கருணாகரன் போன்றவர்களின் கவிதைகள் போரின் அழிவுகளையும் குறிகளையும் இயற்கையிடமிருந்து காட்டியிருக்கின்றன. துவாரகனின் கவிதையில்

“வண்ணத்துப் பூச்சிகளின் கேள்வியோ
பூமியை முட்டிவிட்டது
கூர்வாள் உணர்கொம்புகளும்
கேட்கத் தொடங்கிவிட்டால்?
மூச்சு முட்டுகிறது
செத்து விடலாம் போலிருக்கிறது
சேட்டைகளை பிடுங்கி எறிந்தவிட்டு”

(வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்) என்று முடிகிற சொற்கள் இயல்பான இயற்கை குறித்த ஏக்கமாக வருகிறது. இயற்கையின் ஒழுங்கையும் அதன் அனுபவங்களையும் இந்தக் கவிதை வரிசைப்படுத்துகிறது. சொல்ல முடியாத பொருளினை சொல்லுகிற கவிதைப்பாங்கில் துவாரகனின் கவிதைகள் பலது அமைந்திருக்கின்றன. தனிக்கை தனமானவை என்று கூற முடியாது தனிக்கையை மீறி வெளிப்படையாக சொல்ல இயலாதிருக்கிற ஒரு வகையிலிருக்கின்றன.

“ஓடிய சைக்கிளில் இருந்து
இறங்கி நடந்து
ஓடவேண்டியிருக்கிறது
போட்ட தொப்பி
கழற்ற வேண்டியிருக்கிறது
ஏல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட
கைப்பை
மீளவும் திறந்து திறந்து
மூடவேண்டியிருக்கிறது”
(மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்)

குரங்குத்தனமாக மாறிவிட்டிருக்கிற வாழ்வு மீதான சொற்களாக இவை இடம்பெறுகின்றன. இந்தக் கவிதையின் தலைப்பும் கவனத்தை ஏற்படுத்துகிறது. பொந்துகளில் வாழ்வதற்கு பிடித்துக்கொள்ளுகிற மனப்பாங்கை “வெள்ளெலிகளுடன் வாழ்தல்” கவிதை குறிப்பிடுகிறது.

“எனக்குப் பிடித்த
இரத்த நாகதாளிப்பழத்தை
நட்சத்திரக்கொட்டை முள்நீக்கி
சாப்பிட்டநேரம்
இந்த வெள்ளெலி
என்னை தன் வளைக்கு அழைத்துச் சென்றது
நானும் ஓர் எலியாகிச் சென்றேன்”

(வெள்ளெலிகளுடன் வாழ்தல்) மிருகங்கள் மனிதர்கள் பற்றிய உறவும் நெருக்கமும் அறிவுகளுக்கிடையிலான கேள்விகளை உண்டாக்கிறதாயிருக்கிறதை இந்தக் கவிதையின் ஊடாக பெற முடிகிறது. அடக்குமுறையினையும் அதிகாத்தினையும் முற்றுகையினையும் பழகிச் சகித்து வாழுகிற சனங்களது நகரத்தில் நாய்கள் இன்னும் தம்மை மாற்றிக் கொள்ளவில்லை என்பதைப்போல “நாய்குரைப்பு” கவிதை இடம்பெறுகிறது. நாய்கள் தனித்து குரைத்து திரிகிறபோது ஏற்படுகிற இந்தக் கவிதையில்,

“இந்த நாய்கள்
குரைக்காது கடித்து விட்டாற்கூடப்
போதுமாயிருக்கிறது
அப்போதாவது
தொப்புளைச் சுற்றி
ஊசியைப் போட்டாவது தப்பித்துக்கொள்ளலாம்”
(நாய் குரைப்பு)

இங்கு நாய்குரைப்புகளால் நிறைந்திருக்கிற நகரத்தின் வலி கிடக்கிறது. குருட்டுத்தனமான அரசியலையும் அதனால் விளைந்த சமூகச் சூழலையும் துவாரகனின் அநேகமான கவிதைகள் குறிப்பிடுகின்றன. போருக்கும் சமாதானத்துக்கும் இடையில் சகுனம் பார்த்துக் கொண்டிருக்கிற அழிவு பற்றி “ஒரு மரணம் சகுனம் பார்கிறது” கவிதை குறிப்பிடுகிறது.

“நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள்போல
வீதிகளின் வெளியெங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம்”
(ஒரு மரணம் சகுனம் பார்கிறது)

என்ற கவிதை சூழ்ச்சிகளுடனும் பெரும் பசியுடனும் காத்திருக்கிற மரணத்தினை எழுதுகிறது. தோல்விகளில் முடிகிற காத்திருப்புக்களை “தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்” கவிதை குறிப்பிடுகிறது. குருட்தனமான பொழுதுகளில் எங்களையும் எல்லாவற்றையும் களவாடிச் செல்லுகிறதாக துவாரகனின் கவிதை குறிப்பிடுகிறது.

“பட்டுப்போன ஒரு பனைமரக் கொட்டுப்போல
நாங்கள் எல்லோரும்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்..
களவு பற்றிக் கதைப்பதிலும்
கணக்குப்பார்ப்பதிலும்
எங்கள் காலங்கள் வெகுவாக கழிந்துகொண்டிருக்கின்றன”
(யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்)

மிகவும் நுட்பமாக களவாடுகிற சூழல் நெருக்கிக் கொண்டிருக்கிறதை துவாரகனுக்குரிய மொழியில் அந்தக் கவிதை பேசுகிறது. அச்சுறுத்தலான குழப்பகரமான சூழலை மறைத்து எல்லாமே இயல்பாயிருக்கின்றன என்று காட்ட முற்படுத்தப்படுகிற வாழ்வை துவாரகனின் கவிதை பேசுகிறது. பொம்மைத்தனமாகவும் மரணத்துக்கு சமனான வாழ்வாயிருப்பதையும் எல்லாவற்றையும் இழுத்துச் செல்லுகிற சனங்களின் அமைதியையும் குறிப்பிடுகிறது.

“எல்லாமே இயல்பாய் உள்ளன
எதை வேண்டுமானாலும்
தெரிவு செய்யலாம்
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது
இன்று இருப்பதும்
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும்
மிக எளிதாயிருக்கிறது”
(எல்லாமே இயல்பாயுள்ளன)
துவாரகனின் சில கவிதைகள் தனித்த மொழியும் தனித்த பொருளும் கொண்டிருக்கின்றன. இந்த கவிதைகளின் மொழியை அவரது கவிதையின் பெரு மொழியாக கொள்ளலாம். வாழ்கிற சமுகம் பற்றிய அதீத அக்கறை அதனால் அதன் வாழ்நிலை குறித்த விசனம் என்பன இங்கு வெளிப்படுகின்றன. “மூச்சுக்காற்றால் நிரையும் வெளிகள்” என்ற இந்தத்தொகுப்பில் இடம்பெறுகிற,

01.முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டங்கள்
02.மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்
03.வெள்ளெலிகளுடன் வாழ்தல்
04.நாய்குரைப்பு
05.என்னை விரட்டிக்கொண்ருக்கும் தலைகள்
06.ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது
07.குப்பை மேட்டிலிருந்து இலையான்கள் விரட்டும் சொறி நாய் பற்றிய சித்திரம்
08.தூசி படிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்
09.யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்.
10.மனிதர்கள் இல்லாத பொழுதுகள்
11.கோழி இறகும் காகங்களும்
12.கண்களைப்பற்றி எழுதுதல்
13.எல்லாமே இயல்பாய் உள்ளன.
14.முச்சுக் காற்றால் நிரையும் வெளிகள்

முதலிய பதினான்கு கவிதைகளை அடிப்படையாக கொண்டு துவாரகனின் கவிதைகளின் பொருளையும் மொழியையும் தெளிவாக வாசித்தறிய முடிகிறது. சொற்கள் தவிர்கப்பட்ட நகரத்தின் கவிதைகளாக துவாரகன் கவிதைகளை இனம் காண முடிகிறது.

“மூச்சுக்காற்றால்
மீண்டும் மீண்டும்
நிறைகின்றன வெளிகள்
இற்றுப்போன
ஓர் இலைச் சருகின் இடைவெளியை
நிரப்பிக் கொள்கிறது
செம்மண்”
(மூச்சுக்காற்றை நிறைக்கும் வெளிகள்)

தனித்தபடியிருந்து வெறுத்து உமுழுகிற மிகவும் மௌனமானதும் பெரும் சத்ததுடயதுமான துயர் கவிழ்ந்த சொற்களாக விரிகின்றன. தற்பொழது ஈழத்தின் கவிதையின் சாத்தியப்பாடுகள் நெருக்கடிப்படுகின்றன. எண்பதுகளை ஒத்த நெருக்கடியை ஈழக்கவிதைகள் தற்போது சந்திக்கிறது. வாழ்வுக்கான வெளிகளும் சொற்களுக்கான வெளிகளும் அதிகாரங்களினால் மூடப்படுகிற காலத்தின் சூழலில் எழும்புகிற படைப்புகளுக்கு பெரும் இடமும் கவனமும் இருக்கிறது. அவ்வாறான குறிப்பிடத்தக்க படைப்புகளில் துவாரகனின் கவிதைகளும் இடம்பெறுகின்றன.

-
தீபச்செல்வன் (deebachelvan@gmail.com)

No comments:

Post a Comment