மதிப்புரை
குறிஞ்சிநாடன்
‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற இந்தக் கவிதைத் தொகுதியின் ஆசிரியர் ‘துவாரகன்’ என்னும் புனைபெயர் கொண்ட குணேஸ்வரன் ஆவார். இவரோர் முதுதத்துவமாணியாவார். இளமையிலேயே கவிதை> கதை எழுதும் ஆர்வ மேலீட்டால் இலக்கியத் தாகம் கொண்டு தேடலில் ஈடுபட்டவர்.
அவ்வப்போது அவரின் மனதில் கிளர்ந்த நிகழ்ச்சிகளைக் கவிதையாக்கி அனுபவித்தார். தான் அனுபவித்து இரசித்தவைகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு தனது ஆக்கங்களை நூலாக வெளியிட்டுள்ளார். தொண்டைமானாறு கெருடாவிலில் சுப்பிரமணியம் கமலாதேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை யா/கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்று உயர் கல்வியை யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் முடித்தார்.
எந்த ஒரு நிகழ்வும் பாதிப்பும் கவியுள்ளம் கொண்ட கவிஞனின் உணர்வுகளைப் பாதிக்கும். அப்பாதிப்பின் தூண்டலால் உணர்ச்சிப் பிரவாகத்துடன் தோன்றுவதே கவிதை. இவ்வாறான கவிதை வாசகனின் உள்ளத்தைத் தொட்டு ஓர் அதிர்வை ஏற்படுத்துமானால் அதுவே கவிஞனது வெற்றியாகும். அவ்வகையில் குணேஸ்வரனின் கவிதைகள் வெற்றி பெறுகின்றன. இத்தொகுதியில் 47 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எழுபத்தெட்டுப் பக்கங்களைக் கொண்ட கையடக்கமான நூல். ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற தலைப்புக்கு ஏற்ப அட்டை ஓவியம் மனித சுவாசப்பையை நிறைக்கும் காற்றாகப் புலப்படுத்துகிறது.
இக்கவிதைகளில்; சமூக இயல்பு> அதன் இருப்பு> ஏற்ற இறக்கம்> இயற்கை> போர்முறை அவலம்> மக்களின் இதயத்துடிப்பு> என்பனவற்றைக் காணலாம். துவாரகனின் கவிதை வாசகனின் சிந்தனையைத் தூண்டும் என்பதில் வியப்பில்லை. யாழ். பல்கலைக்ககழக தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அணிந்துரை வழங்கியுள்ளார். சுவிஸ் ரவி ஒவ்வொரு கவிதையையும் நுட்பமாக ஆய்ந்து விதந்துரைந்துள்ளார். அவரது கவிதை விமர்சனம் படிக்கும் ஒவ்வொருவரையும் வாசிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. மூச்சு வெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது>
‘நடந்து செல்லும் வயல் வரம்புகளில்
படுத்திருக்கும் பாம்புகள் போல்
வீதிகளின் வெளி எங்கும்
பதுங்கியிருக்கிறது மரணம்’
(ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது)
இந்த வெளியின் வாழ்வு எப்படிப்பட்டது என்பதைக் கூறும் கவிஞர்>
‘முழுநிலவு வானில்
முகம் காட்டும் போதெல்லாம்
நிலவை ரசிப்பதற்கும்
நாதியற்றுப் போன வாழ்வு’
(கைவீசி நடந்து)
என்று வெறுப்பின் உச்ச நிலையில் வார்த்தைகள் உதிர்கின்றன. ‘குதித்தோடும் மனசு’ என்ற கவிதை இயற்கையை அனுபவித்து இன்பத்தில் மூழ்குவதைச் சித்திரமாய்த் தருகிறது. ‘எச்சம்’> ‘பாதிச்சுவர்’> ‘அலைவும் தொலைவும்’> ‘ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ என்பன போன்ற கவிதைகள் இராணுவக் கெடுபிடிகளின் அனர்த்தத்தை> அழிவைக் காட்டுகின்றன. அலை கடலின் ஆர்ப்பரிப்பால் ஏற்பட்ட துயரம் செய்திகளையும் சுமந்து வருகிறது. ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற கவிதைநூல் கவிஞனை> கைதூக்கி விடுவது வாசகனின் கடமை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஞானம்> ஜனவரி 2009> இதழ் 104> ப.43> கொழும்பு.
No comments:
Post a Comment