Saturday, March 3, 2012

தேடலின் அறுவடை




(‘கதை கதையாம்…’ குறுங்கதைகள் பற்றி)
-இராகவன்

வீன தமிழ்க்கவிதைத் தளத்தில் துவாரகன் என்ற பெயரில் நல்லபிமானம் பெற்றுள்ள சு. குணேஸ்வரன் இடைவிடாத தேடலும் தற்புதுமையான சிந்தனையும் கொண்டவர். மிக அண்மையில் இளையகுட்டி அருமைக்கிளி என்பவரின் நினைவு வெளியீடாக இவர் ‘கதை கதையாம்…’ என்ற தலைப்பில் தொகுத்துள்ள தேர்ந்த தமிழ்க்குறுங்கதைகள் இவரது தேடலுக்கும் தற்புதுமையான சிந்தனைக்கும் முக்கியமான எடுத்துக்காட்டென்றே கூறுவேன்.

செம்பியன் செல்வன், காசி ஆனந்தன், சாந்தன், எஸ்.பொன்னுத்துரை, எஸ். ராமகிருஸ்ணன், ஆகியோரது குறுங்கதைகளை இந்நூலில் குணேஸ்வரன் தொகுத்து வெளிக்கொணர்ந்துள்ளார். இக்கதைகளை ஒருங்கே வாசித்போது செம்பியன் செல்வன் மற்றும் சாந்தன் ஆகியோரது கதைகளில் விரவியிருந்த உயிர்ப்பு என்னைக் களிப்பிலாழ்த்தியது. அவ்விருவருக்கும் குறுங்கதை எழுதுவதிலுள்ள தாடனம் மற்றையோருக்கு கைவரவில்லையென்றே தோன்றுகிறது.

காசி ஆனந்தன், எஸ். பொன்னுத்துரைஆகியோரது குறுங்கதைகள் வார்த்தைகளால் வசீகரிப்பது உண்மைதான். எனினும் குறுங்கதையொன்றின் மூலம் தத்துவம் ஒன்றைச் சொல்லியாக வேண்டுமென இவ்விருவரும் நம்புவதால் அது ஒருவகைத் தேக்கத்தை கொண்டு வந்து விடுகிறது.
எஸ். ராமகிருஸ்ணனின் குறுங்கதைகளை இவற்றுடன் ஒப்புநோக்குமிடத்து அவர் குறுங்கதைகள் மூலம் தத்துவம் சொல்லியிருந்தாலும் அது இயல்பாகவே ஓர் அழகியற்பாங்கினைப் பெற்றுவிடுவதால் வாசிப்பில் சுவை தருகிறது.

இச்சிறுநூலை விமர்சிப்பது எனது நோக்கமில்லையெனினும் எனக்குத் தோன்றியதைச் சொல்லவிரும்பினேன். அவ்வளவுதான்.

ஏற்கனவே இதுபோன்ற தொகுப்பு நூல்கள் நான்கினை குணேஸ்வரன் வெளியிட்டுள்ளார். இது அவரது ஐந்தாவது தொகுப்புநூல். இனிவரும் காலங்களில் ஏனையோரும் இவ்வாறான தொகுப்பு முயற்சிகளில் ஈடுபடலாம். தவிரவும் இதுபோன்ற நவீன இலக்கியப் பிரதிகளை மக்கள் மயப்படுத்தும் எத்தனிப்பில் குணேஸ்வரன் காட்டிவரும் ஈடுபாடு வியந்து போற்றத்தக்கது. அவர் தொடர்ந்து இதுபோன்ற தொகுப்புநூல்களைக் கொண்டுவருவார் என நம்புகிறேன். இது குணேஸ்வரனின் இடையறாத தேடலின் அறுவடை என்றால் மிகையில்லை.

மேலதிக இணைப்புக்கள்

இந்த இணைப்பினூடாக 'கதை கதையாம்...' குறுங்தைகளை மின்னூலாக வாசிக்கலாம்.

கதை கதையாம்... வெளியீட்டு நிகழ்வின்போது த.அஜந்தகுமார் நிகழ்த்திய உரையின் காணொளி வடிவம்
---

No comments:

Post a Comment