Wednesday, March 12, 2014

“உள்ளும் வெளியும்”உணர்த்தும் தேடல் – ஆழம் – வீச்சு – படர்ச்சிபேராசிரியர் செ. யோகராசா

சமகால ஈழத்து நவீன தமிழ் ஆய்வுப் பின்புலத்திலே இந்நூலின் முக்கியத்துவம் குறித்துச் சிலவற்றை எடுத்துரைப்பதற்கு இவ் அணிந்துரையைப் பயன்படுத்துவதே பொருத்தமானது.

எண்பதுகள் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப் போக்கிலே முற்றிலும் புதிய போக்குகள் குறித்த காலமாகும். பேரினவாத ஒடுக்குமுறைக்கெதிரான வெளிப்பாடுகள் புகலிட அனுபவ வெளிப்பாடுகள் பெண்நிலைவாத நோக்கிலான அனுபவ வெளிப்பாடுகள் என்றவாறான புதிய போக்குகள் சார்ந்த படைப்புகள் வெளிவந்தளவிற்கு பல காரணங்களினால் அவை பற்றிய ஆய்வுகள் போதியளவு நடைபெறவில்லை. குறிப்பாக புகலிட இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள் பெருமளவு நிகழாமைக்கான காரணம் அவ்விலக்கியங்களைத் தேடிப்பெறுவதென்பது பகீரதப் பிரயத்தனமானதென்பதே. இவ்விடத்திலேதான் இந்நூலாசியரது ‘தேடல்’ அதன் ஆழம், அதன் வீச்சு, அதன் படர்ச்சி என்பது பாராட்டும்படியாக இருக்கிறது. புகலிட இலக்கியமென்றால் குணேஸ்வரன்தான் என்பது இந்நூலினூடாக மீண்டுமொருதடவை உறுதியாகின்றது.

‘புகலிட இலக்கியம்’ என்பது பற்றி இவ்வேளை ஒரு தெளிவை ஏற்படுத்தவேண்டியுள்ளது. புகலிட இலக்கியம் என்பது பரந்த நோக்கில் ஒன்றையே குறித்து நிற்பினும் ‘புகலிட எழுத்தாளர் இலக்கியம்’ என்ற வேறுபட்ட இன்னொன்றும் (அடிப்படையில் புகலிட இலக்கியம் என்பதனுள் அடங்கினாலும்) இருக்கின்றது. அதாவது ஈழத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் எழுதப்படுகின்றபோது ‘புகலிட இலக்கியம்’ என்பது ‘புகலிட எழுத்தாளரது இலக்கியம்’ என்பதாகிவிடுகின்றது. இதிலுள்ள நான்கு கட்டுரைகளும் அத்தகையனவே.

மேற்கூறியவற்றுள் ஒன்றான ஆதவன் எழுதிய ‘மண்மனம்’ நாவல் பற்றிய அறிமுக ஆய்வு மிகுந்த முக்கியத்துவமுடையது. உள்ளுர் இலக்கியங்களுக்கு இல்லாத சிக்கலொன்று புகலிட இலக்கியங்களுக்குள்ளது. தொடராக வெளிவந்து முற்றுப்பெறாத படைப்புகள் சில அங்குள்ளமையே அதுவாகும். இவ்விதத்தில் ஆதவனால் எழுதப்பட்ட (ஆதவனே மறந்துவிட்ட) ‘மண்மனம்’ இந்நூலாசிரியரது கடினமான தேடலினால் புத்துயிர் பெற்றுள்ளதென்பது மிகையானதன்று. போர் இலக்கிய வகைப்பாடுகளுள் ‘இயக்கங்களினது போராட்டச் செயற்பாடுகள்’ பற்றிய படைப்புகள் முக்கியமானவை. இவ்வாறு வெளிவந்த ஏனைய படைப்புக்களின் வரிசையில் ( ‘கடல் கடந்தோர்’ தொடக்கம் ‘ஆறாவடு’ வரை ) ‘மண்மனம்’ நாவலுக்கும் ஓரிடமுண்டு என்பது இவரது இவ் அறிமுக ஆய்வூடாகவே தெரியவருகிறது!

புகலிட எழுத்தாளருள் முதன்மையிடம் பெறுகின்ற மிகச் சில படைப்பாளிகளுள் ‘ஷோபாசக்தி’ யும் முக்கியமானவர். ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்களுடான அவரது முக்கியத்துவத்தை இந்நூலிலுள்ள ‘ஷோபாசக்தியின் கொரில்லா, ம்’ என்ற அறிமுக ஆய்வு வெளிக்காட்டுகின்றது. போராட்டகால அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வெளிப்படுத்தும் செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் முதலான மூத்த தலைமுறை எழுத்தாளருடன் ஒப்பிடுகின்றபோது கொரில்லா பெறுகின்ற முக்கியத்துவம் பெரிது. வெலிக்கடைப் படுகொலைகள் பற்றி விரிவாகப் பேசுகின்ற நாவல்கள் எதுவும் வராத சூழலில் ‘ம்’ நாவலின் தனித்துவம் பற்றி நூலாசிரியரது கட்டுரை செறிவான முறையில் எடுத்துரைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதன்மையிடம் பெறுகின்ற மற்றொரு புகலிட எழுத்தாளர் அ. முத்துலிங்கம். அவரது படைப்புப் பற்றிய ‘அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற கட்டுரை விமர்சனபூர்வமான ஆய்வாகின்றது. ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ அவ்வப்போது ‘தொடராக’ வெளிவந்தபோது அது பின்பு நாவல் ஆகும் என்று எவருமே கருதவில்லை. பத்தி எழுத்து என்றோ அனுபவக் கட்டுரை என்றோ இளமை நினைவுகளென்றோ கருதியவர்களே அதிகம். இந்நிலையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல்தான் என்பதனைப் பலவகைச் சான்றுகள் ஊடாக நிறுவுகிறார் இவ்ஆய்வாளர்.

இவரது புகலிட எழுத்தாளரது படைப்புகள் சார்ந்த மற்றொரு விமர்சன ஆய்வான ‘புலம்பெயர்ந்தோரின் நாவல்களின் வடிவம்’ என்பது பொதுநோக்கிலானது. பின்நவீனத்துவச் செல்வாக்கிற்குட்பட்ட சில புகலிட எழுத்தாளரது படைப்புகளை இனங்காட்டுவது இவ்விதத்தில் புகலிட எழுத்தாளரது படைப்புகளின் சிறப்பாற்றல்களை வெளிப்படுத்தும் மிக முக்கியமான கட்டுரையாகின்றது இது.

‘உயிரின் வாசம் - பெயரிடாத நட்சத்திரங்கள்’ என்ற கட்டுரை இவ் ஆய்வாளர் தேர்ந்த நூற்படைப்புகளையே முக்கியமான படைப்புகளையே கவனத்திற்கு உட்படுத்துபவரென்பனைக் காட்டுகின்றது. ஏனெனில், இக்கூட்டுக்கவிதைத் தொகுப்பு, ‘போரிலக்கியம்’ என்ற விதத்திலும் ‘பெண்கள் இலக்கியம்’ என்ற வித்திலும் ‘புகலிட எழுத்தாளரது வெளியீடு’ என்ற விதத்திலும் (அது இவ்வகைத் தொகுப்பிற்கு இன்னொரு விதமான கனதியை அளிக்கின்றது என்பதும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியது) பன்முகச் சிறப்புகள் கொண்டது. குறிப்பாக ‘சொல்லாத சேதிகள்’, ‘மறையாத மறுபாதி’ ஆகிய தொகுப்புகளின் வரிசையில் வைத்தெண்ணக்கூடியது. ஆக இத்தியாதி எண்ணங்கள் யாவும் இந்நூலாசிரியர் இத்தொகுப்பினை ஆய்விற்கெடுத்தமையின் நற்பேறுகளே என்பதில் தவறில்லை.

இந்நூலிலுள்ள ஏனைய ஆய்வுகள் ஈழத்தில் வசிக்கின்ற எழுத்தாளர் சிலரது படைப்புகள் பற்றியன. இவ்வகையில் அடங்கும் ஆய்வுகளில் ஒன்று ‘எஸ்.ஏ உதயனின் நாவல்கள்’ என்பது. ஈழத்தின் தமிழ்பேசும் வாழிடங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச அலகுகள் என்றோ உபபண்பாட்டு அலகுகள் என்றோ எவ்வாறு கணிக்கப்படினும் அவற்றுள் ஒன்றாகிய மன்னார் பிரதேசம் நவீன இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக நாவல் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அண்மைக்காலத்திலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. அவ்வாறெனில் அவ்வழி மன்னார் பிரதேச நாவல் இலக்கியத்தின் முன்னோடியாக உதயன் திகழ்வது ஏற்புடையதே என்பது அவரது நான்கு நாவல்களையும் ஆய்வாளர் கவனத்திற்குட்படுத்தியதன் ஊடாக புலப்படுகின்றது.

சற்று முற்பட்ட காலத்தில் எழுத ஆரம்பித்தாலும் 2009 ற்குப் பிற்பட்ட நவீன கவிதை வளர்ச்சியில் மிக முக்கிய இடம்பெறுபவர் தீபச்செல்வன். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ தொடக்கம் ‘கூடார நிழல்’ வரையான (இரு தலைப்புகளுமே ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை) அவரது கவிதைத் தொகுப்புகளே இதற்கு நற்சான்று பகர்கின்றன. இவ்விதத்தில் கூடார நிழலையும் ஆய்வு விமர்சனத்திற்குட்படுத்துகின்றமை பொருத்தமானதே.

‘ஈழத்து இலக்கியமும் இரசனையும் - நாவல்’ என்ற கட்டுரை ஈழத்து நவீன இலக்கியம் தொடர்பான பொதுவான நோக்குடையது. அதாவது ஈழத்து நாவல் இலக்கிய இரசனை பற்றி - இரசனை மாற்றங்கள் பற்றி - ஆராய முற்பட்டுள்ளது. ஈழத்து நாவல் வளர்ச்சிப் போக்குகளை காலந்தோறும் எற்பட்டுவந்த மாற்றங்களை பின்னணியாகக் கொண்டு வாசகரது இரசனை மாற்றங்களை அணுக முற்படும் முதன் முயற்சி என்றவிதத்தில் இலக்கிய ஆர்வலரது சிந்தனையைத் தொடர்ந்து கிளறக்கூடியதாகவுள்ளது.

சுருங்கக் கூறின் இந்நூலிலுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து நோக்குகின்றபோது சமகால ஈழத்து நவீன தமிழ் வளர்ச்சிப் போக்கின் தளர்ச்சி நிலையை இந்நூல் ஒரளவு மாற்றமுற்பட்டுள்ளது என்று துணிந்து குறிப்பிடலாம். ஏதோவிதத்தில் எண்பதுகளின் முக்கியமான மூன்று போக்குகள் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளையும் (எண்ணிக்கையில் ஏற்ற இறக்கமிருப்பினும்) இத்தொகுப்புக் கொண்டிருப்பது அதற்குச் சான்றாகிறது. அது மட்டுமன்று புகலிட எழுத்தாளரது நூல்களை மட்டுமன்றி ஈழத்தின் பலபிரதேசங்களிலிருந்தும் இன்று பெருமளவு வெளிவருகின்ற நூல்களைக்கூட வாசிக்கின்ற ஆரோக்கியமான சூழல் அருகிய நிலையில் இருவகை நூல்களும் சார்ந்து இந்நூலில் அடங்கியுள்ள நூல்களின் தேர்வுகளும் அவை பற்றிய அறிமுக ஆய்வுகளும் விமர்சன ஆய்வுகளும் இந்நூலிற்கு மேன்மேலும் சிறப்புச் செய்கின்றன என்பதையும் கூறவேண்டியுள்ளது. நூலாசிரியரை பன்மடங்கு பாராட்ட வேண்டியுள்ளது.

சமகால ஈழத்து ஆய்வுலகமும் புகலிட ஆய்வுலகமும் இவரிடமிருந்து எதிர்பார்ப்பன அதிகமாகும்.

(சு. குணேஸ்வரனின் "உள்ளும் வெளியும்" நூலுக்கு பேராசிரியர் செ. யோகராசா எழுதிய அணிந்துரை)
---

No comments:

Post a Comment