Sunday, December 23, 2012

துவாரகனின் தூக்கணாங்குருவிக்கூடு



ந. மயூரரூபன்

 நன்றி - உதயன் - 23.12.2012

மயூரரூபன் கட்டுரையில் குறிப்பிட்ட 'தூக்கணாங்குருவிக்கூடு' கவிதையை முழுமையாகத் தருகிறேன். 

தூக்கணாங்குருவிக்கூடு

அந்தப் பெருமரத்தில்
மிக இலாவகமாகத் தூங்கும்
தூக்கணாங் குருவிக் கூடுகள்.

காற்றையே எதிர்கொண்டு
வாழச் சபிக்கப்பட்டவை போல்
தூங்கும் கூடுகள் அவை
கைதேர்ந்த கலைஞனின் சித்திரத் தேர்போல்
ஒவ்வொரு தும்பாகத் தேடியெடுத்து
மரக்கொப்பரின் நுனியில்
கட்டிய கூடுகள் அவை

சாரைப்பாம்பின் முட்டை குடித்தலுக்கும்
குரங்கின் குலைத்துப் போடலுக்கும்
எட்டாமற் போனதும்
குருவிகளின் வாழ்வுப் போராட்டமே.

அந்த விழுதுகள்விட்ட
பெருமரத்தில்
தூங்கும் கூடுகளைச் சிதைத்துவிட
காற்றுடன் சல்லாபிக்கிறது
சாரைப் பாம்பு.

கூடுகளைத் தாங்கும் வலிய கிளைகளும்,
ஆழ ஊன்றிய வேர்களும் உள்ளவரை…
முடியுமா என்ன?
மரம் வலியன்.
அதன் வாழ்வோடு வாழும்
கூடுகளும் வலியன்.
ஊழிக்காலம் முடியும் வரை!
09.08.2004