Friday, December 4, 2020

மண்ணில் மலர்ந்தவை – புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு

 - இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன்  செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும். இவர் இதுவரைக்கும் “மூச்சுக்காற்றால் நிறையும்வெளிகள்” (2008), “அலைவும் உலைவும்” (2009), “புனைவும் புதிதும்” (2012), “உள்ளும் வெளியும்”(2014), “இலக்கியத்தில் சமூகம் – பண்பாடு சார் கட்டுரைகள்” ( 2016), “அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்” (2016), ஆகிய ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். “மண்ணில் மலர்ந்தவை – இலக்கியக் கட்டுரைகள்” இவரது ஏழாவது நூல் வரவாகின்றது. இவரது தொடர்ச்சியான தேடலுக்கும் ஓய்வற்ற செயற்றிறனுக்கும் இந்நூல் வரவுகளே சான்று பகருவனவாகும்.

இவரது அண்மைய நூல்வரவான இந்த “மண்ணில் மலர்ந்தவை” தொகுப்பானது குந்தவையின் பாதுகை பிடித்த சிறுகதை, அ. முத்துலிங்கத்தின் அம்மா பாத்திர வார்ப்பு, இந்த மண்ணின் கதைகள் – ஆறாத காயங்கள், கி. செ துரையின் சுயம்வரம் நாவல், அருளரின் லங்காராணி, சந்தங்களால் இணையும் வாழ்வு – இராஜேஸ்கண்ணனின் கவிதைத் தொகுதி குறித்து, மட்டைவேலிக்குள் தாவும் மனசு – சிவசேகரனின் கவிதைகள், மணல் கும்பி – ரஜிதாவின் கவிதைகள், கவி கலியின் இரண்டு கவிதைத் தொகுப்புக்கள் பற்றிய கட்டுரைகள், அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையாவின் பன்முக ஆளுமை, கலாநிதி ஆ. கந்தையாவின் ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல், கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள், எழுத்தாளர் கண. மகேஸ்வரன், நந்தினி சேவியர் படைப்புகள் நூல் அறிமுகம், கலாநிதி செ. யோகராசாவின் தேடல், வசீகரன் சுசீந்திரகுமாரின் கரும்பாவளி ஆவணப்படம் என 2005  தொடங்கி 2019 வரையான காலப்பகுதிக்குள் எழுதப்பட்ட 18 கட்டுரைகளை உ ள்ளடக்கியதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



நூலுக்கான அணிந்துரையை எழுத்தாளர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் எழுதியுள்ளார். இவ்விலக்கியக் கட்டுரைத் தொகுப்பானது தனித்து இலக்கியப் பிரதிகளைப் பற்றிய நோக்காகக் குறுகிவிடாமல் படைப்பாளிகளைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், ஆவணப்படம் பற்றிய பார்வை, தனிமனித ஆளுமை குறித்த பார்வை என பன்முக நோக்காக விரிந்திருப்பது எடுத்துக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.

குணேஸ்வரன் நுனிப்புல் மேயும் ஒரு மேலோட்டமான நோக்குநரல்ல என்பதற்கு ஆதாரமாக நான் அண்மையில் வாசித்த அவரது ஆய்வுக் கட்டுரை ஒன்றைக் குறிப்பிடலாம். “மூத்தோர் வழிபாடாக நடுகல் – சங்கப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்ட பார்வை” என்ற கட்டுரையை ஒவ்வொரு விடயத்தையும் மிகுந்த அர்ப்பணிப்போடும் தீவிரத்தோடும் ஆழ்ந்து நோக்கி செயற்றிறனாற்றியிருக்கிறார் என்பதை உணர்த்தியது. இவரது முன்னைய நூல் வரவுகளைப் போலவே இந்த மண்ணில் மலர்ந்தவை இலக்கியக் கட்டுரைகள் நூல் வரவும் இதனை நிரூபணம் செய்கிறது. இது அவர் அவ்வப்போது எழுதிய சிறிய கட்டுரைகளாக இருந்தாலும் இந்நூலினது ஒவ்வொரு உள்ளடக்கமும் எளிமையான மொழிநடையில் வலுவான நோக்கில் அமைந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடவேண்டியதாகும். இது குணேஸ்வரனின் தனித்துவம் எனக்கூறுவதும் மிகப் பொருத்தமானது. தவிரவும் உணர்வு தோய்ந்து எழுதுவதும் செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்தலுங்கூட இவரது தனித்துவ இயல்பாகக் கருதுவதில் தவறிருக்க முடியாது.

ஆரம்பகட்டப் படைப்பாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்திலும் அவர்களுக்குப் படைப்பூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் மேற்கூறியவாறே தனது செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக “மட்டைவேலிக்குள் தாவும் மனசு – சிவசேகரன் கவிதைகள்”, “இயற்கையை உறவாகக் காணும் பண்பு – ரஜிதாவின் மணல் கும்பி கவிதைகள்”, “மண்ணுடன் பிணைந்த வாழ்வு – கவி கலியின் இன்னுமொரு தேசம்”, வசீகரனின் “கரும்பாவளி ஆவணப்படம்”, என்பவற்றைக் குறிப்பிடலாம்.

உணர்வு தோய்ந்தும் உணர்வைத் தொற்ற வைத்தும் எழுதும் இயல்பிற்கு எடுத்துக்காட்டாக “சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்”, எழுத்தாளர் கண. மகேஸ்வரன், வே. ஐ. வரதராசன் என்னும் உள்ளடக்கங்களைக் குறிப்பிடலாம். இதில் என்னை நெகிழ வைத்த பகுதியொன்றை இங்கே எடுத்துக் காட்டுவது பொருந்தும்.           “ … இன்று (20.06.2015) காலை அவரது உயிரற்ற உடலின் முன்னால் தலைமாட்டில் திருமறைக் கலாமன்றம் நடாத்தவிருக்கும் மூன்றுநாள் இலக்கிய விழாவுக்கான அழைப்பிதழ் அவரின் முகவரியுடன் இருந்ததையும் கண்டேன். உள்ளங் கலங்கிவிட்டது…” (பக்.66) வே.ஐ.வரதராசனை கலைமுகத்திற்காக நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பதையும் அதுவே அவரது முதலுங் கடைசியுமான நேர்காணல் என்பதையும் இவ்விடத்தில் கனக்கும் மனதுடன் பதிவு செய்கிறேன்.

குந்தவையின்  “பாதுகை” சிறுகதை மதிசுதாவினால் குறும்படமாக்கப்பட்ட தகவலை இத்தொகுப்பின் வாயிலாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதற்காகக் குணேஸ்வரனுக்கு மனமார்ந்த நன்றி.

தனிமனித ஆளுமை குறித்து சிறப்பாகப் பதிவுசெய்திருப்பதற்கு “அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா பன்முக ஆளுமை” , கலாநிதி செ. யோகராசாவின் தேடல்”  எனுமிரண்டும் நல்ல எழுத்துக்காட்டுகளாகும். இதிலும் கவிஞர் மு. செல்லையா பற்றிய பதிவு தனித்துக் குறிப்பிடவேண்டியதாகும்.

இலக்கியச் செயற்பாடுகள்  அனைத்தும் உறைநிலையில் இருக்கும் இவ்வனர்த்த காலத்தில் இந்நூல் வரவானது இலக்கியச் செயற்பாட்டாளர்களின் மீளெழுச்சியைத் தூண்டும் வகையிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் புத்துணர்வளிப்பதாக அமைகின்றது. காலத்தின் தேவையுணர்ந்து இந்நூலை வெளியிட்ட புத்தக் கூடத்திற்கும் குணேஸ்வரனுக்கும் ஈழத்து இலக்கிய உலகம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளது.

நன்றி :     உதயன் & சஞ்சீவி 29.11.2020

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6305%3A2020-11-13-07-57-00&catid=14%3A2011-03-03-17-27-43&Itemid=62&fbclid=IwAR39iZT_30B-mJIeymUpPs-NFqO05lJ9gi3GQxrizFI-Awe1yfy43xvlPLE

https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/11/92637/?fbclid=IwAR3Gf0RkCtdpo89Qr0n41mQVw2jgzoHJ4ky4RWejdjAiLECt0OT9Vtfa4So


No comments:

Post a Comment